E   |   සි   |  

2005-10-12

இப்தார் 2005

2005 ஒக்டோபர் 12 அன்று, கௌரவ சபாநாயகர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில், பாராளுமன்றம் இப்தார் வைபவத்தைக் நடத்தியது. நாட்டில் சமய மற்றும் தேசிய ஐக்கியத்தை உறுதி செய்யும் பொருட்டு கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்கள் இந்நிகழ்வை நிகழ்த்த எண்ணம் கொண்டார்.

மேன்மைதகு ஜனாதிபதி, பிரதம அமைச்சர், அமைச்சரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தலைவர்கள், பிற மதத் தலைவர்கள், மற்றும் பல இராஜதந்திரிகள் என்போர் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்விற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் பெரும்பகுதி, அரபியன் றோயல் கூட்டு நிறுவனங்களின் அநுசரணையில் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், கௌரவ. றஊப் ஹக்கிம் அவர்களின் பாராளுமன்ற இணைப்புச் செயலாளர் திரு. ஹசன் அல் (f)பாசி ஷெரிப் அவர்களும்,திரு. M.B.M. ஹம்சா JP அவர்களும் மேற்கொண்டிருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம்கள், இஸ்லாமியக் கலண்டரின் படி றமழான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பு இருப்பர். இப்தார் என்பது மாலையில் அன்றைய நோன்பை முடித்துக் கொள்ளும் நேரத்தைக் குறிக்கும்.

வாழ் நாள் முழுவதும் ஒருவருக்கு ஏற்படக்கூடிய சபலங்களையும் அழுத்தங்களையும் சிறந்த முறையில் கையாள, அவசியப்படும் சுய கட்டுப்பாட்டையும் தன்னம்பிக்கையையும் ஒருவர் வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பதனால், புனித றமழான் மாதம் முக்கியத்துவம் பெறுகிறது. நோன்பிருப்பதன் மூலம், முஸ்லிம்கள் தமக்கு ஏற்படக்கூடிய இயற்கையான ஆசைகளான பசி, தாகம் என்பவற்றைக் கட்டுப்படுத்தப் பழகுகின்றனர். ஆதலால், அளவுக்கதிகமாக உணவு உட்கொள்ளல், மருந்துப்பாவனை மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பிற பொருள்கள் மற்றும் செயல்களைத் தவிர்த்துத் தமது ஆசைகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் திறனையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இப்புனித பண்டிகையைப் பாராளுமன்றம் இனி வரவிருக்கும் ஆண்டுகளிலும் கொண்டாட எண்ணியுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks