பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2007-10-17
கடந்த ஆண்டுகளைப் போன்று இவ்வாண்டும் நவராத்திரிப் பண்டிகைக் காலத்தில், செல்வத்தை அருள்பவளான அலைமகள் அருள் வேண்டிச் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இலட்சுமி பூசை இடம்பெற்றது. கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களின் விருப்பத்திற்கமைய கௌரவ பிரதிச் சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரால், பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்களின் உதவியோடும் , மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அநுசரணையோடும் இப்பூசை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதியன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார அவர்களின் அழைப்பின் பேரில், பிரதம விருந்தினராக கௌரவ பிரதம அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் கலந்து கொண்டார். இவ்விழாவில் கௌரவ பிரதிச் சபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கண்களுக்கும் மனதிற்கும் விருந்தாகவும் மருந்தாகவும் அமையுமாறு, தெகிவளை விஷ்ணு ஆலயக் குருக்கள்களான பிரம்ம ஸ்ரீ வேங்கட சுப்ரமணியக் குருக்கள், சத்தியநாராயண குருக்கள் ஆகியோர் இப்பூசையை செவ்வனே நடத்தினர். நாதஸ்வர இசை விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பூசையைத் தொடர்ந்து பரத நாட்டியம், இசைக் கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கொழும்பு, அபிநய ஷேத்திராவைச் சேர்ந்த திவ்யா சிவநேசன், மற்றும் கீத் டி சில்வா உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்களின் நடனம் பலராலும் வெகுவாக இரசிக்கப்பட்டது. அத்துடன் “நாதஸ்வர இசையருவி” திரு. வி.கே. பஞ்சமூர்த்தி மற்றும் குமரன் இசைக்குழுவினரின் இசைக் கச்சேரி, புதுமையானதாகவும், இரசிக்கும் படியாகவும் இருந்தது. இந்நிகழ்வை மேலும் சிறக்கச் செய்யும் விதமாக இடம்பெற்ற, பாரம்பரிய சிங்கள இசை நிகழ்ச்சியும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெறத் தவறவில்லை.
கல்வி, செல்வம், வீரம் வேண்டி வழிபாடியற்றும் நவராத்திரி காலத்தில், இலங்கைத் திரு நாட்டின் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கும் விதமாகவும்,எம் நாட்டிற்கு தற்காலத்தில் மிகவும் தேவையான சாந்தியும், சமாதானமும் வேண்டிய ஓர் ஆன்மீக நிகழ்வாகவும், இந்த இலட்சுமி பூசை விளங்கியது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks