01

E   |   සි   |  

 திகதி: 2025-12-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1397/2025: பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கடற்றொழிலாளர்கள்: வசதிகளை வழங்குதல்

----

கேட்கப்பட்ட திகதி

2025-12-09

கேட்டவர்

கௌரவ எம்.எஸ் அப்துல் வாசித், பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ) (i)        சுற்றுலாப் பயணிகளும் கடற்றொழிலாளர்களும் ஒரே கடற்கரைப் பகுதியை பயன்படுத்துவதனாலும், தற்போது இப்பிரதேசத்தில் சுற்றுலாப்  பயணிகளுக்காக உணவகங்கள், சிறிய விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் போன்ற பெருமளவிலான சேவை வழங்கும் நிறுவனங்கள் உருவாகியுள்ளதனாலும், இந்த இரு தரப்பினருமே பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இது சம்பந்தமாகக் கூடுதலான கவனம் செலுத்தப்படவேண்டியிருக்கின்றது.

(ii) மேலே குறிப்பிடப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில், மீன்பிடி இறங்குதுறையை வேறொரு இடத்திற்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. எனினும், அதற்காக மிகவும் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட கள ஆய்வுகளின் ஊடாக, இதற்காக குடாக்கல்லி பிரதேசம் பொருத்தமான இடமாக இனங்காணப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் 2025.06.30ஆம் திகதி அனைத்துப் பங்குதாரர்களின் பங்கேற்புடன் அப்பகுதியில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில், இவ்விடம் பொருத்தமானது எனத்தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், இது குறித்த ஒரு சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டு அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பின்னரே இறுதி முடிவுக்கு வரவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச மீன்பிடி இறங்குதுறைக்கான நுழைவுப் பாதையானது, பொத்துவில் - பாணமை பிரதான வீதியிலிருந்து வயல் நிலங்களின் ஊடாக அமைக்கப்பட வேண்டும். இவ்வீதியின் நீளம் சுமார் 2.5 கி.மீ. ஆகும். இதில் ஒரு பகுதி - 1.5 கி.மீ. - தற்போது வயல் நிலங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இறங்குதுறையை நிறுவுவதற்கும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் போதுமான நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் மதிப்பீட்டிற்கு அமைய, உரிய நட்ட ஈடுகளைப் பெற்றுக்கொண்டு வீதி அமைப்பதற்காக நிலங்களை வழங்குவதற்குச் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். இதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைப் பொத்துவில் பிரதேச செயலாளர் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இறங்குதுறையை அமைப்பதற்கான இடத்தின் பொருத்தப்பாடு குறித்து சாத்தியக்கூறு ஆய்வு ஒன்றினை மேற்கொண்டதன் பின்னர், குறித்த திட்டம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்தச் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளன.

(iii) இதன்போது, தற்போது அறுகம்பே களப்புடன் தொடர்புடைய பிரதேசங்களை உள்ளடக்கி, களப்பு அபிவிருத்திக்கான சாத்தியக்கூறு ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அறுகம்பை களப்பை ஆழமாக்குவது தொடர்பாக, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடமிருந்து பெறப்பட வேண்டிய, களப்பை ஆழமாக்கும்போது வெளியேற்றப்படும் கழிவுகளைக் கடலில்  கொட்டுவதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

களப்பு அபிவிருத்தப் பணியின்கீழ், அறுகம்பை களப்பின் எல்லைகளை அடையாளப்படுத்துவதற்காக 1,048 எல்லைத் தூண்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அந்த 1,048 தூண்களில் 420 தூண்கள் நடும் பணிகள் நிறைவடைந்துள்ளபோதிலும், எல்லைத் தூண்களை நடும்போது ஏற்பட்ட காணிப் பிரச்சினைகள் காரணமாக அந்தச் செயல்முறையைப் பாதியிலேயே நிறுத்தவேண்டியேற்பட்டது. எனவே, களப்பின் எல்லைகளை அடையாளப்படுத்தித் தருமாறு கடற்றொழில் மற்றும் நீரக வளமூங்கள் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, நில அளவைத் திணைக்களத்தினால் அறுகம்பை களப்பின் அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது சம்பந்தமாக உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கின்றேன்.

மேலும், அறுகம்பைக் களப்பில் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யும் பணிகள் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. றொட்டை, ஆர்.எம். நகர் மற்றும் கோமாரி ஆகிய பகுதிகளின் அபிவிருத்தி குறித்து தகவல்களைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்பதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.

(iv) சீனக் குடியரசின் நிதியுதவியின்கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான 75,000 மீன்பிடி வலைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த மீன்பிடி வலைகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள 12,500 மீனவர்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, இந்த அமைச்சின்கீழ் இயங்கும் வரையறுக்கப்பட்ட சீ-நோர் அறக்கட்டளை  மற்றும் நோர்த் சீ லிமிடெட் ஆகியவற்றின்மூலம் உயர்தர மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளின் உற்பத்தி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயலினால் சேதமடைந்த வலைகள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளை உற்பத்தி செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளையும் இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது ஆரம்பித்துள்ளன. இந்தத் தயாரிப்புகளை மீனவர்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரச வங்கிகள் ஊடாகச் சலுகை நிபந்தனைகளின்கீழ் மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நிதி வசதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 

(ஆ) ஏற்புடையதல்ல.

பதில் தேதி

2026-01-06

பதில் அளித்தார்

கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks