logo

E   |   සි   |  

2016-06-24

செய்தி வகைகள் : செய்திகள் 

தகவலுக்கான உரிமை சட்டமூலம் நிறைவேறியது

தகவலுக்கான உரிமை எனும் சட்டமூலம் இன்று (ஜூன் 24) பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்ட்டது.

 

இது கௌரவ பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்களினால் 2016 மார்ச் 24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்றும் தொடரப்பட்டது.

 

இச்சட்டமூலத்தின் பிரதான குறிக்கோள்; தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அணுக்கம் மறுக்கப்படக்கூடிய ஏதுக்களைக் குறித்துரைப்பதற்கும், தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினைத் தாபிப்பதற்கும், தகவல் அலுவலர்களின் நியமனத்திற்கும், தகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறைகளைத் தருவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்டிருப்பதற்காகவுமாகும். இது தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்குப் பயன்கொடுப்பதன் மூலம் பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணி வளர்த்து அதன்மூலம் இலங்கை மக்கள் ஊழலை எதிர்த்து நிற்றல் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஊடாக முழுமையாகப் பங்கேற்கக் கூடியதும் நாட்டின் பொது வாழ்வில் தீவிரமாகப் பங்கேற்கக் கூடியதுமாகவிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இச்சட்டத்தின் பயனுறு அமுலாக்கலை உறுதிப்படுத்துவது வெகுசன ஊடக அமைச்சின் பொறுப்பாகும்.

 

இச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக, பிரசை ஒவ்வொருவரும், ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுபாட்டில் இருக்கின்ற தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமையொன்றைக் கொண்டிருக்க வேண்டும். பின்வரும் சூழ்நிலைகளில் தகவலை அணுகுதலுக்கான கோரிக்கை மறுக்கப்படலாம்:

 

எந்தவொரு பொதுமக்களுக்கும் அக்கறையற்ற தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான தகவல், அரசின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான இரகசிய தகவல்கள், இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய தகவல்கள், வியாபார இரகசியம், மருத்துவப் பதிவேடுகள், எவரேனும் அலுவலருக்கும் பகிரங்க அலுவலரொருவருக்கும் இடையிலான வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத ஏதேனும் தொடர்பாடல், ஏதேனும் குற்றச்செயலை கண்டறிதலில் இடையூறு விளைவிக்கும் தகவல், தகவலின் வெளிவிடுகையானது நீதிமன்ற அவமதிப்பாக இருத்தல், தகவலின் வெளிவிடுகையானது பாராளுமன்ற சிறப்புரிமைகளின் மீறலாக உள்ளவிடத்து மற்றும் தகவலின் வெளிவிடுகையானது பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படுவதாகவுள்ள பரீட்சையொன்றின் சீரியநிலைக்கு தீங்காக இருத்தல்.

 

அமைச்சுகள், திணைக்களங்கள், பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள், உள்ளூர் மன்றங்கள், அரசாங்கத்தினால் பொருளளவில் நிதியளிக்கப்படுகின்ற அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நியாயசபைகள் மற்றும் ஏனையவை தகவல் அணுகலை வழங்கக்கூடியதாகவும் பதிவேடுகளை பராமரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் அனைத்து பதிவேடுகளையும் மின்னணு வடிவத்தில் பாதுகாக்க முயல வேண்டும்.

 

தகவலுக்கான உரிமை ஆணைக்குழு என அழைக்கப்படும் ஒரு குழு தாபிக்கப்படல் வேண்டும். ஆணைக்குழுவானது, அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரைமீது சனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து (05) ஆட்களைக் கொண்டமைந்தாதல் வேண்டும். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்கள் மற்றும் வேறு சிவில் சமூக ஒழுங்கமைப்புக்கள் ஆகிய ஒவ்வொன்றினாலும் ஓராளை விதிந்துரைத்தல் வேண்டும். திறமையைப் பறைசாற்றி பகிரங்க வாழ்வில் தமக்கெனச் சிறந்த நிலையை ஏற்படுத்திக்கொண்ட ஆட்கள், அனுபவம் மற்றும் சட்டம், ஆட்சி, பொது நிர்வாகம், முகாமைத்துவம் முதலியோர் இவ்வாணைக்குழுவிற்கு நியமிக்கப்படுவர். இவ்வாணைக்குழு பகிரங்க அதிகாரசபைகள் மற்றும் தகவல் அலுவலர்கள் ஆகியோரின் செயல்திறன்களை கண்காணித்தல் வேண்டும்.

 

அனைத்து பகிரங்க அதிகாரசபைகளும் தகவல் அலுவல்களை நியமித்தல் வேண்டும். அவர்கள் தகவலுக்கான கோரிக்கையைக் கையாளுதல் வேண்டும். ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் பிரசை தோதான தகவல் அலுவலருக்கு கோரப்படும் தகவல் பற்றிய விபரங்களை குறித்துரைக்கின்ற எழுத்திலான ஒரு கோரிக்கையைச் செய்தல் வேண்டும். தகவல் அலுவலர் உடனே, கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும். கோரிக்கையானது நிராகரிக்கப்படும் போது, எக்காரணத்தினால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதென்பதை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரசைக்கு அறிவிக்க வேண்டும்.

 

தகவல் அலுவலரினால் தரப்பட்ட காரணங்களுடன் திருப்திப்படாத பிரசையொருவர், ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம். ஆணைக்குழுவின் முடிவினால் இன்னலுறப்பட்ட பிரசையொருவர் அல்லது பகிரங்க அதிகாரசபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அத்தகைய முடிபுக்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்.

 

சட்டமூலத்தை பதிவிறக்குக



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks