பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2016-01-07
செய்தி வகைகள் : செய்திகள்
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி பயன்பாடு 2016, ஜனவரி 07ஆம் திகதி கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களால் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு பாராளுமன்ற குழு அறை இல. 1 இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகங்கள், பாராளுமன்ற உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
கௌரவ சபாநாயகர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், உலகில் 189 பாராளுமன்றங்கள் இருப்பினும், ஒரு சிலவே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை உருவாக்கியுள்ளதுடன், இது இலங்கைப் பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒரு தருணமாகும். அவர் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை சுருக்கமாக குறித்துக் காட்டியதுடன் இந்த நிகழ்வானது ஒரு முன்மாதிரியான பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவதற்கான நகர்வொன்றாகுமென மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை பாராளுமன்றம் அதன் பிரதான தொழிற்பாட்டு விடயங்களின் இயலளவை மேம்படுத்துவதற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகளின் உபயோகத்தை ஊக்குவிக்கின்றது. அத்துடன் பிரசைகளின் நாளாந்த வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நாட்டின் முக்கியமான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தீர்மானங்கள் பற்றிய அறிவு மற்றும் தகவல் தொடர்பில் சராசரி பிரசையை வலுவூட்டி அதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் அவர்களை துடிப்பான பங்காளிகளாக உருவாக்குவதற்கு உதவுதல்.
தற்போது கையடக்கப் பயன்பாடு பொதுமக்கள் வாழ்க்கையில் பிரபல மற்றும் விளைதிறன் முறையிலான தொடர்பாடலாக மாறிவருகின்றது. இந்தப் பின்னணியில், கையடக்கச் சாதனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பாராளுமன்ற மற்றும் சட்டவாக்க தகவல்கள் சென்றடையக்கூடியவாறு உலகம் பூராகவும் உள்ள பல பாராளுமன்றங்கள் தமது சொந்த கையடக்கப் பயன்பாடுகளை உபயோகித்து வருகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள், சட்டங்களும் சட்டமூலங்களும், பாராளுமன்ற வினாக்களும் பதில்களும், நாட்காட்டி, செய்திகள், புள்ளிவிபரங்கள் போன்றன உள்ளடங்கலாக பாராளுமன்ற தகவல்களை இக்கையடக்க தொலைபேசி பயன்பாடு வழங்குகின்றது. இப்பயன்பாடு ஊடாக ஹன்சாட், ஒழுங்குப் பத்திரங்கள், ஒழுங்குப் புத்தகங்கள், அனுபந்தங்கள் மற்றும் குழு அறிக்கைகள் போன்ற ஆவணங்களை பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம். பாராளுமன்ற சபை நடவடிக்கைமுறையை நேரடியாக பார்வையிடலாம் அல்லது கோரலின் போது காணலாம். மேலும் இப்பயன்பாட்டினை பயன்படுத்துவோர் பாராளுமன்ற உறுப்பினர்களை அல்லது செயலகத்தினை தொடர்பு கொள்ளலாம். அனைத்து உள்ளடக்கங்களும் பயன்படுத்துவோர் விருப்பமான மொழியில் பயன்படுத்துவதற்கு இயலச் செய்கின்றவாறு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் பல அம்சங்களும் மேம்படுத்தல்களும் எதிர்காலத்தில் சேர்க்கப்படவுள்ளன.
பாராளுமன்றத்தின் கையடக்க தொலைபேசி பயன்பாடு கலந்துரையாடும் வழிகளை அறிமுகப்படுத்துவதுடன் தகவல் பெற்றுக் கொள்வதற்கான பெறுவழியினை மேம்படுத்தி வெளிப்படைத் தன்மையினை அதிகரிக்கும் அதேவேளை பாராளுமன்றத்திற்கும் பிரசைகளுக்குமிடையிலான இடைவெளியினை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்றத்திற்கான கையடக்கத் தொலைபேசி பயன்பாடு Bhasha Lanka பிரைவட் லிமிடட் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது என்ரொயிட், ஐஒஎஸ்(iOS) மற்றும் வின்டோஸ் போன் தளங்களில் கிடைக்கப்பெறும்.
கையடக்கத் தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏதும் விசாரணைகள் அல்லது கருத்துரைகள் இருப்பின் mobileapp@parliament.lk இற்கு அனுப்பி வைக்கவும்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks







