பார்க்க

04

E   |   සි   |  

இயலாமையுள்ள சமூகத்தை தேசிய அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்வது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இயலாமையுள்ள பெண்கள் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் கலந்துரையாடல்

இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட சமூகத்தினரின் உரிமைகள், உள்ளடக்கிய தன்மை மற்றும் தேசிய அபிவிருத்திக்கான அவர்களின் பங்களிப்பு குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்திற்கும் (AKASA) இடையில் கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் தலைவர் செல்வி என்.ஜி. கமலாவதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இங்கு இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் பணிகளும், தற்போது இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இயலாமையுள்ள சமூகத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமைகள் மற்றும் சவால்கள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.

பொது இடங்களுக்குச் செல்வதற்கான வசதிகள் இல்லாமை மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சில வசதிகள் தரமானதாக இல்லாமை, போக்குவரத்துப் பிரச்சினைகள், சில வங்கிகள் மூலம் கணக்கொன்றைத் தொடங்கக்கூட முடியாமை உள்ளிட்ட சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இயலாமையுள்ள சமூகத்தினரை அனுதாபத்துடன் நோக்குவதை விடுத்து, அவர்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தினர்.

வரலாற்றில் முதன் முறையாக இயலாமையுள்ள நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்க முடிந்தமை ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகத்தினருக்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் அனுசரணையுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த ஆரம்பகட்ட விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks