logo

E   |   සි   |  

2014-05-06

செய்தி வகைகள் : செய்திகள் 

“ஒத்திவைப்பின் போதான வினாக்கள்” நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உடன்பாட்டுக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் 2014 மே 7ஆம் திகதியாகிய நாளை முதல் "ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை" இற்கு பதிலாக "ஒத்திவைப்பின் போதான வினாக்கள்" இனை கேட்க அனுமதியளிக்கப்படுவர்.

 

ஒத்திவைப்பின் போதான வினாக்கள் (தற்கால) அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு அமர்வு வாரத்திலும் ஒரு தினத்தில் ஆறு அவ்வாறான வினாக்களை கேட்க ஒதுக்கீடு செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு நாளைக்கு ஒரேயொரு ஒத்திவைப்பின் போதான வினாவினை மாத்திரமே கேட்க அனுமதியளிக்கப்படுவார்.

 

 

ஒத்திவைப்பின் போதான வினாக்களுக்கான வழிகாட்டிகள் பின்வருமாறு;

1.    ஒதுக்கப்பட்ட நாளில் ஒத்திவைப்பின் போதான வினாக்களுக்காக ஒரு மணித்தியால நேரம் ஒதுக்கப்படுவதுடன் அரசாங்கம் சார்பாக 3 வினாக்களும் எதிர் கட்சி சார்பாக 3 வினாக்களும் என்ற விகிதாசார அடிப்படையில் ஆறு ஒத்திவைப்பின் போதான வினாக்கள் மாத்திரமே அனுமதிக்கப்படும்.

அவ்வாறான நாளில் அரசாங்கமோ எதிர்க்கட்சியோ போதுமான ஒத்திவைப்பின் போதான வினாக்களைச் சமர்ப்பிக்காவிடின் முறையே அரசாங்கத்தினால் அல்லது எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் மேலதிக வினாக்கள் அனுமதிக்கப்படும்.

2.    அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பாக மாத்திரமே இந்த ஒத்திவைப்பின் போதான வினாக்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்ட தினமொன்றில் அது போன்ற ஒரு வினாவினை மாத்திரமே கேட்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட முடியும்.

ஒத்திவைப்பின் போதான வினாக்களின் பொது முக்கியத்துவம் பற்றி சபாநாயகரினால் தீர்மானிக்கப்படும்.

3.    சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினாவில் கையொப்பமிட்டிருப்பின் அவை தங்களுடைய கட்சி முதற்கோலாசானுக்கு பக்ஸ் (Fax) மூலம் அனுப்பலாம்.

ஒத்திவைப்பின் போது வினாக்களை கேட்கின்ற தினத்திற்கு முதல் தினம் குறிப்பிட்ட முதற் கோலாசானால் அவை மு.ப. 10.00 மணியளவில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பப்படுதல் வேண்டும் என்பதுடன், நண்பகல் 12.00 மணி அளவில் பாராளுமன்ற சபை முதல்வருக்கும் அவை அனுப்பப்படல் வேண்டும்.

4.    பாராளுமன்ற சபை முதல்வர் குறிப்பிட்ட ஒத்திவைப்பின் போதான வினாக்களை உரிய அமைச்சர்கள் பதிலளிக்கும் பொருட்டு கையளித்தல் வேண்டும். அவ்வாறான வினாவொன்றுக்கு பதிலளிப்பதற்கும் அல்லது பதிலளிக்காமல் இருப்பதற்கும் தேவைப்படின், அதனை வாய்மொழி வினாவாக பதிலளிக்கும் பொருட்டு பட்டியற்படுத்துமாறு சபையில் கோருவதற்கும் அமைச்சர்களுக்கு உரிமை உண்டு.

5.    ஒத்திவைப்பின் போதான வினாவொன்றினை கேட்க்கும் உறுப்பினர், ஏற்கனவே அறிவித்துள்ள எழுத்து மூல வினாவுடன் கண்டிப்பாக பொருந்தும் வகையில் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

6.    ஒத்திவைப்பின் போதான வினா தொடர்பில் உப வினாக்களைக் கேட்ப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

7.    ஒத்திவைப்பின் போதான வினாக்களுக்கும் நிலையியற் கட்டளை இல. 31(1)-(10) வரையான விதிகள் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும்.

 



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks