01

E   |   සි   |  

2026-11-11

செய்தி வகைகள் : செய்திகள் 

2027 வரவுசெலவுத்திட்ட உரை நாளை (நவ. 12) பிற்பகல்

  • வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் நடைபெறும்
  • இரண்டாவது மதிப்பீடு விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை
  • குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு 

பாராளுமன்றம் நாளை பி.ப 1.30 மணிக்கு கூடவிருப்பதுடன், 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் அன்றையதினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதன் பின்னர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் தொடர்பான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் நடைபெறவுள்ளது.

2026 ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவிருப்பதுடன், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைகளுக்கான 05 வினாக்களுக்காகவும், மு.ப. 10.30 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான ஒரு கேள்விக்காகவும் நேரம் ஒதுக்கப்படும். அத்துடன், மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை வரவுசெலவுத்திட்ட மீதான விவாதம் நடைபெறும். வாக்கெடுப்புகள் நடைபெறும் நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 14 ஆகிய இரு தினங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து தினங்களிலும், பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்திற்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

2026-11-11

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் கௌரவ பிரதிச் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் டேவிஸ் மயர்ஸ் அண்மையில் கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கௌரவ பிரதிச் சபாநாயகர் டேவிஸ் மயர்ஸை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சவால்மிக்க காலப்பகுதிகளில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர், பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) ஊடாக வழங்கப்பட்ட ஆதரவையும் பாராட்டினார்.இந்தச் சந்திப்பின்போது, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் அண்மைய அமெரிக்க காங்கிரஸ் விஜயம் தொடர்பில் குறிப்பிட்டார். அத்துடன், USAID ஊடாக பாராளுமன்றத்தின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.இலங்கைக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை டேவிஸ் மயர்ஸ் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்றக் கட்டடத்தின் அழகியல் மற்றும் அதன் கட்டடக்கலை முக்கியத்துவம் குறித்தும், இலங்கையின் இயற்கை அழகு குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டேவிஸ் மயர்ஸ் பாராளுமன்றக் கட்டடத்தையும் பார்வையிட்டார்.இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-11

அநுராதபுரத்தின் 846 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக 18 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அநுராதபுரம் மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொல்பொருள் பெறுமதி மிக்க 846 இடங்களைப் பாதுகாப்பதற்காக இவ்வருடம் 18,058,884 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.இதற்கமைய, திணைக்களத்தின் ஒதுக்கீடுகளின் கீழ் 12,609,034 ரூபாவும், வெளி நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 5,449,850 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் தளங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக, ஒவ்வொரு தொல்பொருள் தளத்தின் முக்கியத்துவம், அவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தன்மை, அமைவிடம் மற்றும் சட்டப் பின்னணி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதற்கமைய, குறித்த இடங்களைக் கண்காணித்தல், பாதுகாப்புப் பணிகளை முன்னெடுத்தல், பாதுகாப்பு வேலிகளை அமைத்தல், எல்லைக் கற்களை நாட்டுதல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆய்வுகளை முன்னெடுத்தல், பராமரித்தல், உறுதிப்படுத்துதல், அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2026-11-11

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2025ஆம் ஆண்டில் 785 மில்லியன் ரூபாவையும், 2026 செப்டெம்பர் மாதம் வரை 673 மில்லியன் ரூபாவையும் வருமானமாக ஈட்டியுள்ளது

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2025ஆம் ஆண்டில் 785,411,317.92 ரூபாவையும், 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 673,114,357.25 ரூபாவையும் வருமானமாக ஈட்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட ஏனைய வருமான வழிகளின் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் மாத்திரம் 2025ஆம் ஆண்டில் 546,695,018.46 ரூபாவும், 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 439,157,062.25 ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.2026 ஒக்டோபர் 01ஆம் திகதியாகும் போது, மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளில் சேவையில் ஈடுபடுவதற்காக செல்லுபடியாகும் 2,966 பயணிகள் போக்குவரத்துச் சேவை அனுமதிப்பத்திரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வழங்கியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். அவற்றுள் 1,826 சாதாரண சேவை அனுமதிப்பத்திரங்களும், 257 அரை சொகுசு சேவை அனுமதிப்பத்திரங்களும், 651 சொகுசு சேவை அனுமதிப்பத்திரங்களும், 232 அதிசொகுசு சேவை அனுமதிப்பத்திரங்களும் உள்ளடங்குகின்றன.தற்போது இலங்கை போக்குவரத்துச் சபையிடம் 7,130 பேருந்துகள் உள்ளன. அவற்றுள் 6,987 பேருந்துகள் சாதாரண பேருந்துகளாகும். ஏனைய 143 பேருந்துகளும் சொகுசு பேருந்துகளாகும். அத்துடன், 2006ஆம் ஆண்டில் 114 மெட்ரோ பேருந்துகளும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.இலங்கையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையை மாகாண ரீதியாகத் தெளிவுபடுத்திய பிரதி அமைச்சர், மேல் மாகாணத்தில் 5,520 பேருந்துகளும், மத்திய மாகாணத்தில் 2,433 பேருந்துகளும், தென் மாகாணத்தில் 1,326 பேருந்துகளும், வட மாகாணத்தில் 976 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.அத்துடன், கிழக்கு மாகாணத்தில் 520 பேருந்துகளும், வடமேல் மாகாணத்தில் 1,324 பேருந்துகளும், வடமத்திய மாகாணத்தில் 509 பேருந்துகளும், ஊவா மாகாணத்தில் 1,043 பேருந்துகளும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,816 பேருந்துகளும் சேவையில் ஈடுபடுவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


2026-11-09

அரசாங்க நிதி பற்றிய குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இலங்கைப் பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவின் (CoPF) சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 121 இன் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு,  பகிரங்க நிதி முகாமைத்துவம், அரச கொள்கை, பொது நிர்வாகம், பொருளியல் அல்லது அதனுடன் தொடர்புடைய துறையில் நிபுணத்துவ அறிவும், வலுவான பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சித் திறன்களும் கொண்ட  விண்ணப்பதாரர் ஒருவரை ஆட்சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.விண்ணப்பங்கள் 2026 நவம்பர் மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில், பதிவுத் தபால் மூலம் “பாராளுமன்றச் செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே” எனும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.விண்ணப்பிக்கும் பதவியை கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.மேலதிக விபரங்கள்: https://www.parliament.lk/en/get-involved/announcement/view/104






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks