01

E   |   සි   |  

2026-11-05

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை விமானப்படைக்கு 4,261 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொடுக்கும் குறைநிரப்பு மதிப்பீடு நிறைவேற்றம்

இலங்கை விமானப்படைக்கு ரூ.4,261 மில்லியனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் இன்று (நவ. 05) மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விவாதத்திற்கு உட்படுது்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்காக இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் செயற்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய வகையிலான தொடர்ச்சியான பாதகமான காலநிலை நிலைமைகளால் ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை விமானப்படையில் ஆளில்லா விமானக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலமும் இன்றையதினம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

(87வது அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்புக்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார அவர்களால் 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி முதலாவது மதிப்பீடுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-11-06

செயலிழந்துள்ள ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டித் தொகுதிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

செயலிழந்த நிலையில் காணப்படும் ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டித் தொகுதிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கௌரவ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.இதற்கமைய, இரத்மலான பிரதான இயந்திரப் பொறியியல் பிரதி திணைக்களத்தின் பணிமனைகள் ஊடாக உரிய திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பிரதான பொறியியல் (இயக்க சக்தி) பிரதி திணைக்களத்தின் வேலைத்தளத்தின் ஊடாக சிறியளவிலான திருத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சில ரயில் என்ஜின்களை வெளித் தரப்பினரின் ஊடாகத் திருத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கநாத் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.தித்வா அனர்த்தத்திற்கு முன்னர் நாளொன்றுக்கு 331 பயணிகள் ரயில் சேவைகளும், 28 சரக்கு ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தித்வா அனர்த்தத்திற்குப் பின்னர் தற்போது நாளொன்றுக்கு 200 பயணிகள் ரயில் சேவைகளும், 28 சரக்கு ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.மொத்த ரயில் சேவைகளையும் முன்னெடுப்பதற்கு 84 ரயில் என்ஜின்களும், 106 ரயில் பெட்டித் தொகுதி என்ஜின்களும் அவசியமாக உள்ள போதிலும், தற்போது 49 ரயில் என்ஜின்களும், 82 ரயில் பெட்டித் தொகுதி என்ஜின்களும் மாத்திரமே சேவையில் ஈடுபடும் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் 47 ரயில் என்ஜின்களும், 48 ரயில் பெட்டித் தொகுதி என்ஜின்களும் காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


2026-11-05

பெண்கள் தலைமைத்துவம் தொடர்பான மனப்பாங்கில் ஏற்பட்டுவரும் மாற்றம் உலக மற்றும் இலங்கை அரசியலில் சாதகமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது – பிரதி குழுக்களின் தவிசாளர்

வலுவான எதிர்காலப் பெண் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதில், மனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக அரசியல் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான பெண்களின் அணுகுமுறைகளில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வருவது உலக மற்றும் இலங்கை அரசியலில் காணக்கூடிய சாதகமான நிலைமையாகும் என பிரதி குழுக்களின் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்றத்தின் சபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற மாரவில புனித குடும்ப மகளிர் மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதி குழுக்களின் தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.தற்காலத்தில் பெண்கள் திறமை, அறிவு மற்றும் கல்வி ஆகியவற்றின் ஊடாக வலுவடைந்து வருவதால், எதிர்காலத்தில் அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பெண்களின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு தொடர்பில் நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடியும் எனவும், அதனை நனவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதி குழுக்களின் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஜனாதிபதி நிதியம் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். தற்போது நிலவும் சிறந்த மரபுகளைத் தொடர்ந்து பேணுவதுடன், எப்போதும் நேர்மறையான மாற்றத்திற்கும் சமூக மாற்றத்திற்கும் பங்களிப்பது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.வீட்டிலும் பாடசாலையிலும் ஆரம்பமாகும் நற்பழக்கவழக்கங்களை கிராமத்திற்கும், அங்கிருந்து நாடு முழுவதற்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும், சமூகப் பொறுப்புணர்வையும் சுய ஒழுக்கத்தையும் பேணுவது பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய நிறுவனங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தி, ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படைக் கூறுகள் மற்றும் அவற்றின் பணிகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சூலா ஹேரத் அவர்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.  ஜனநாயகம், அதன் நடைமுறைச் செயற்பாடுகள், அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகள், மரபுகள் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பில் மாணவிகளுக்கு நடைமுறை ரீதியான புரிதலையும் அவர் வழங்கினார்.மாரவில புனித குடும்ப மகளிர் மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்திற்கான சபாநாயகர் தெரிவும் இடம்பெற்றது. அத்துடன், மாணவர் பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் தமது அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்க எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.இந்நிகழ்ச்சியை ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


2026-11-05

ரஷ்யத் தூதுவர் பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்; 2027ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள அழைப்பு

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் மாண்புமிகு லெவான் எஸ்.டிகேரியன்  அவர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (நவ. 04) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.இச்சந்திப்பில் ரஷ்ய ஃபெடரல் அசம்பிளியின் மேல் சபை தலைவர் கௌரவ வி. மட்வியென்கோ அவர்கள் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதத்தை ரஷ்யத் தூதுவர் கௌரவ சபாநாயகரிடம் கையளித்தார். இதற்கமைய, இரு தரப்பினருக்கும் வசதியான ஒரு திகதியில் 2027ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் இடையிலான நிலையான, நம்பிக்கையின் அடிப்படையிலான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த அழைப்புக் கடிதம் வலியுறுத்துகிறது. அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.இச்சந்திப்பின்போது, இரு தரப்பினருக்கும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்துவது தொடர்பிலும் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.


2026-11-04

2026ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு நாளை விவாதத்திற்கு

2026ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (நவ. 04) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து 4,261 மில்லியன் ரூபாவை (ரூ.4,261,000,000.00) இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்காக இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மாறிவரும் செயற்பாட்டுச் சூழல், வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய வகையிலான தொடர்ச்சியான பாதகமான காலநிலை நிலைமைகளால் ஏற்படக்கூடிய உடனடி அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இலங்கை விமானப்படையில் ஆளில்லா விமானக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்படவுள்ளது.இதற்கு மேலதிகமாக, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இடம்பெறவுள்ளது. (அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில்) வெள்ளிக்கிழமை (06) பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் இல்லை. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks