பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-10-28
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் கடந்த ஒக். 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாகப் பயணங்கள் தாமதமடைந்த தொழிலாளர்களின் பயண வசதிகளை ஏற்படுத்துவதற்காக விசேட விமான சேவைகளைப் பயன்படுத்துதல், தேவையான சந்தர்ப்பங்களில் தற்காலிக தங்குமிட மற்றும் உணவு வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அத்துடன், இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும்போது அவர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதிப்படுத்தப்படும் வகையில் வெளிநாட்டு நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ரஷ்யாவுடனான வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களின்போது ரஷ்ய ரூபிளைப் பயன்படுத்துவதில் நிலவும் தடைகள் மற்றும் மாற்றுக் கொடுப்பனவு முறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதனுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மற்றும் சுற்றுலாத்துறைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-10-28
2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள், அரச வருமானம் மற்றும் செலவினங்களை முகாமைத்துவம் செய்தல், முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 22) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துகொண்ட நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, திலிண சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.2027ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள அரச செலவினங்கள், மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அரச வருமான இலக்குகள் மற்றும் கடன் சேவைக்கான செலவுகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பேரினப் பொருளாதார முன்னறிவிப்புகள் மற்றும் அரச நிதி முகாமைத்துவம் தொடர்பான சட்டக் கட்டமைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.2027ஆம் ஆண்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த மூலதனச் செலவினங்களில், வீதி அபிவிருத்தி, சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துதல், மின்சாரக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் நகர அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களும் உள்ளடங்குகின்றன. இத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு நிதி வசதிகளை வழங்குதல், கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் வணிகத் துறைக்கு ஆதரவளித்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. அரச சேவையின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் அரச சேவைகளின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், 2027ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதற்கான தேவைகள், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நிதி வசதிகள் மற்றும் அரச கடன் முகாமைத்துவம் தொடர்பிலும் அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரச வருமான இலக்குகளை அடைதல், வரி நிர்வாகத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை முறையாகப் பயன்படுத்துதல் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
2026-10-28
மத்திய மாகாண சபையின் 2021–2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் மூன்றாண்டு அறிக்கை, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. 2026.05.21 ஆம் திகதி நடைபெற்ற கோபா குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான மீளாய்வும் இங்கு மேற்கொள்ளப்பட்டது.மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீதி அபிவிருத்தி மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களின் முன்னேற்றம், வீதி மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் இடம்பெற்ற குறைபாடுகள், தரநிலைகளுக்கு இணங்காத நிர்மாணப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட மேலதிக வேலைகளுக்காகப் பணம் செலுத்தப்பட்டமை தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், பயணிகள் போக்குவரத்துச் சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மற்றும் GPS/SIM தொழில்நுட்பக் கட்டமைப்புகள் முறையாகப் பயன்படுத்தப்படாமை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய்து, இக்கட்டமைப்புகளை வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசாரிக்கப்பட்டது.மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டடங்கள் சட்டபூர்வமான அனுமதியின்றி உள்வாடகைக்கு விடப்பட்டமை, நிலுவையிலுள்ள வாடகைத் தொகைகள் அறவிடப்படாமை மற்றும் அரச சொத்துக்களின் உரிமை தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, மலபார் ஹவுஸ் கட்டடம் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கருத்திட்ட அலுவலகமொன்றுக்கு வழங்கப்பட்டதையடுத்து, அதற்கான வாடகையை அறவிட முடியாமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இதற்கு மேலதிகமாக, KMTT திட்டங்களின் நோக்கங்கள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பங்களில் அவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை மீள அறவிடுதல், அரச சொத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்தளிக்கும்போது உரிய விதிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் பயன்பாடின்றிக் கைவிடப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் சொத்துக்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அலுவலகக் கோப்புகளை அழித்தமை தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் குழு விசாரணைகளை மேற்கொண்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, டீ. கே. ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சந்தன சூரியஆரச்சி, ஓஷானி உமங்கா மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-10-27
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.குறித்த விசேட குழு அதன் தலைவர், கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துக்கள் பெறப்பட்டன.இதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்கார் அவர்களும், புதிய சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நுவன் பெல்லந்துடாவ அவர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் தத்தமது கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறை தொடர்பில் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபர் அவர்களும், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க மற்றும் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
2026-10-27
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” செயலமர்வுத் தொடரில் இளைஞர் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களிடம் சமர்ப்பித்தல் மற்றும் அதற்காக இளைஞர் பிரதிநிதிகளின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை மேம்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இளைஞர் சமூகத்தின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” செயலமர்வுகள் அண்மைக் காலத்தில் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன.இந்தச் செயலமர்வுகளில் இளைஞர் யுவதிகளால் முன்வைக்கப்பட்ட பொதுவான பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகள் தொடர்பில், குறித்த மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.இளைஞர் சமூகத்தினால் அடையாளம் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுப் பரிந்துரைகளைப் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக முன்வைப்பதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தொடர்புடைய விடயங்கள் குறித்து இளைஞர் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றச் செயற்பாடுகளுடன் இணைப்பதன் மூலம் மக்கள் பங்கேற்பை மேலும் வலுப்படுத்துவதே இவ்வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.இக்கூட்டத்தில், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களும், “Voice to Policy” செயலமர்வுத் தொடருக்கு ஒத்துழைப்பு வழங்கும் CII (Coalition for Inclusive Impact) மற்றும் NDI (National Democratic Institute) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks