2026-10-02
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 29) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
குறிந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகளும், நிதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆணைக்குழுவின் வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை அங்கீகரித்தல், நிதி மற்றும் செயற்பாட்டு சுயாதீனம், நிதியக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின்படி, ஆணைக்குழுவின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சின் ஊடாக அல்லாமல் நேரடியாக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அவதானிப்புகளைப் பெற்றுக்கொண்டு சபாநாயகர், 10 நாட்களுக்குள் அதனைப் பாராளுமன்றத்திற்கு (அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு) சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், பாராளுமன்றத்தினால் மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானிக்கப்படும் திருத்தங்களுடன், தேசிய வரவு செலவுத் திட்ட ஆவணத்தில்/ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்காக நிதி அமைச்சரிடம் அது அனுப்பி வைக்கப்படும்.
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் நிதி அமைச்சரின் அவதானிப்புகளுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு செப்டெம்பர் மாதம் வரை காலதாமதம் ஏற்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதனால் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் கால அட்டவணைக்கு பாதிப்பு ஏற்படுவதால், எதிர்வரும் ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டச் செயன்முறையை உரிய காலத்திற்குள் முன்னெடுப்பதற்காக, ஆணைக்குழுவின் மதிப்பீடுகளை மே 30ஆம் திகதிக்குள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டின் திறைசேரி சுற்றறிக்கையொன்றினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. வாகனங்களை கொள்வனவு செய்தல்/குத்தகைக்கு எடுத்தல், பிராந்திய அலுவலகங்களுக்காக கட்டடங்களை வாடகைக்கு எடுத்தல் மற்றும் கடமைத் தேவைகளின் அடிப்படையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த நடவடிக்கைகளுக்காக நிதி அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதன் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ஆணைக்குழுவின் நிதியத்தின் தன்மை மற்றும் அதன் பயன்பாடு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கென தனியான நிதியம் நிறுவப்பட்டுள்ளமை மற்றும் ஒருங்கிணைந்த நிதியம் மற்றும் ஆணைக்குழுவின் பொதுநிதியத்தின் ஊடாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் வழங்கப்பட வேண்டும் என குழுவின் தவிசாளர் இந்தக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் குழுவினால் விசாரிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்துடனான கடப்பாடுகள் மற்றும் நாட்டின் ஊழல் எதிர்ப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்தார்.
இதற்கமைய, ஆணைக்குழுவிற்காக 971 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2026 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 23 பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக தற்போது காணப்படும் அரசாங்கக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. அவற்றில் சில கட்டடங்களைப் புனரமைத்து பயன்படுத்துவதற்கும், ஏனைய கட்டடங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
மேலும், ஜப்பான் அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் கீழ், பிராந்திய அலுவலகங்களுக்குத் தேவையான கணினிகள் மற்றும் நிழற்படப் பிரதியெடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 109 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், புதிய சட்டத்தின் கீழ் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்களில் சுமார் 34,000 பேர் தாமதக் கட்டணங்களை அறவிடுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தச் செயன்முறையின் மூலம் பெறப்படும் அபராதத் தொகைகள் ஆணைக்குழுவின் நிதியத்திற்கு வரவு வைக்கப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளக் கட்டமைப்பு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. முன்னதாக குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, ஆணைக்குழுவின் தவிசாளரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளரின் (President of the Court of Appeal) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு சமமானதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
குழு உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோர் இணையவழித் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கூட்டத்தில் இணைந்துகொண்டனர்.
2026-11-13
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும். பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு குழு அங்கீகாரம் வழங்கியது. குழுவின் உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-11-13
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் விரிவாக ஆராயப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையில் 2014 ஒக்டோபர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் “புதிய நியமனம்” எனக் கருதப்படுவதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, சம்பள அதிகரிப்புகளுக்கு இடையிலான பாரிய வேறுபாடு காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைவதாக அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன், 03/2014 சுற்றறிக்கையின் மூலம் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக சரிசெய்தல் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது ஆசிரியர் சேவையில் தொடர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய உயர்ந்த சம்பள அதிகரிப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சம்பள இடைவெளி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.இதன் காரணமாக ஆசிரியர் சேவையின் முதலாம் மற்றும் 2-Iஆம் தரங்களில் உள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இது விடயம் தொடர்பில் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து சம்பள ஆணைக்குழுவுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அது மாத்திரமன்றி, அதிபர் சேவையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் உபகுழு இங்கு தீர்மானித்தது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, சுகத் வசந்த.த சில்வா மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், நிலவும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆராச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுக் கூட்டத்தில், 2026ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.இதன்போது, பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கல்விச் சீர்திருத்தங்கள், பாடநூல்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர் கல்வியின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், குறித்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைகளிலான தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்திறன், பரீட்சைகளை நடத்துதல், பாடநூல்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன. விசேட தேவையுடைய சிறுவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சீருடைகளை விநியோகித்தல் மற்றும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. புலமைப்பரிசில் கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துவதற்காக புதிய கணினி முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதன் ஊடாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை வைப்பிலிடுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளுடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டன.இதன்போது, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தமது நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். குறித்த அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.மேலும், வருட இறுதியில் மாத்திரமன்றி, வருடத்தின் இடைப்பட்ட காலத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து, அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அத்துடன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-12
மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்களின் பங்கேற்புடன் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வருடாந்த அறிக்கை, 2023ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.இதன்போது, இலங்கை தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திடம் காணப்படும் மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலங்களைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மின்கலங்களின் கொள்ளளவு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பரிசோதிக்கும் ஆற்றல் இந்நிறுவனத்திடம் காணப்படுவதாகத் தெரியவந்தது.எனினும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள், மின்கலங்கள், கட்டுப்படுத்திகள் (Controllers) மற்றும் மின்னேற்ற நிலையங்கள் ஆகியவற்றுக்கான கட்டாய ஒழுங்குமுறைகள் மற்றும் தரநிலைகள் இல்லாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, உரிய தரநிலைகளைத் தயாரித்து, அவற்றைப் பரிசோதித்தல் மற்றும் சான்றளித்தல் ஆகியவற்றைக் கட்டாயமாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் குழுவிடம் வலியுறுத்தினர்.பாரம்பரிய எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், பயிற்சித் திட்டங்கள் மற்றும் அவ்வாறு மாற்றியமைக்கப்படும் வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பான தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் தகைமையுடைய பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் பொருத்தமான சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையொன்றின் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரச ஆராய்ச்சி நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துதல், நிலவும் குறைபாடுகளைக் குறைத்தல், ஆராய்ச்சி முடிவுகளைப் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒரேவிதமான பணிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அதிகாரிகள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இலங்கை புத்தாக்குனர்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கான மின்சார வேலித் திட்டங்கள், பல்கலைக்கழகங்களை மையமாகக் கொண்ட புத்தாக்க விருத்தி மையங்கள் (Incubation Centers) மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஊடாக புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.நடைமுறைப்படுத்தப்பட்ட நான்கு மின்சார வேலித் திட்டங்களில் மூன்று வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.மேலும், புத்தாக்குனர்களின் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாத்தல் மற்றும் புத்தாக்கங்களை வணிகமயமாக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, 'சிறிய காப்புரிமைகள்' (Petty Patents) முறையை அறிமுகப்படுத்துவதற்காக அறிவுசார் சொத்துச் சட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, சதுர கலப்பத்தி, தனுர திசாநாயக்க, சட்டத்தரணி ஹசாரா லியனகே மற்றும் சந்திம ஹெட்டிஆரச்சி ஆகியோருடன் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.