2026-09-01
கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் 2026 ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.
கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது. “சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.
கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அதிமேதகு ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான கௌரவ ‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’ அவர்களுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் கௌரவ ‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’ அவர்களுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
2026-09-21
செப்டம்பர் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற வாரத்தில், செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இன்று (செப். 21) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாம் மதிப்பீடு), செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 23 புதன்கிழமை மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகச் சட்டமூலத்தைச் சமர்பிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அத்துடன், செப்டம்பர் 23 ஆம் திகதி மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபா நிதி மானியத்தை வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீடும் அங்கீகரிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு 2026.09.22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டிற்குத் தேவையான நிதியொதுக்கீடானது, 2026 ஆம் ஆண்டிற்காக நிரல் அமைச்சுகளுக்கு (Line Ministries) ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதி வரை பயன்படுத்தப்படமாட்டாது என அடையாளம் காணப்பட்ட நிதியொதுக்கீடுகளின் மூலமே பெறப்படுகின்றது. அதற்கமைய, இந்நிதியொதுக்கீட்டு பரிமாற்றமானது 2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொத்தச் செலவின எல்லைக்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்சக் கடன் பெறும் எல்லைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளுக்குத் தீர்மானிக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
2026-09-18
இலங்கை மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜேர்மன் பாராளுமன்றத்தின் தெற்காசிய பாராளுமன்றக் குழுவின் தூதுக்குழுவொன்று செப்டெம்பர் 16ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டது.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிக்லஸ் காப்பே அவர்கள் தலைமையிலான இந்தக் குழுவில், கௌரவ கெரோல்ட் ஓட்டன், கௌரவ ஜோஹன் சாத்தோஃப் மற்றும் கௌரவ உல்லே ஷாவுஸ் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். அத்துடன், இலங்கைக்கான ஜேர்மன் பிரதித் தூதுவர் சாரா ஹாசல்பார்த், பாராளுமன்றச் செயலகப் பணியாளர் கதரீனா பீனெர்ட் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் தாரிணி தழுவத்தே ஆகியோரும் இத்தூதுக்குழுவில் இணைந்திருந்தனர்.கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள் இத்தூதுக் குழுவை வரவேற்றதுடன், இலங்கை - ஜெர்மனி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் மதிய போசனத்துடனான கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இலங்கைப் பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.இச்சந்திப்பில், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் குழு முறைமை, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் தலைமையை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், மற்றும் அரசியல் செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரின் அதிகளவிலான பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், நேர்மை மற்றும் சட்டத்தை மதித்தல் தொடர்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன், இன மற்றும் மத ரீதிதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் அனைத்துச் சமூகங்களிடையேயும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மதிய போசனக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஜேர்மன் தூதுக் குழுவினர், மூன்று அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் மற்றும் இரண்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடனான இணைந்த கலந்துரையாடலிலும் பங்கேற்றனர். வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எஸ். எம். மரிக்கார் ஆகியோருடன் மேற்படி குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேரா உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் சிலரும் இணைந்துகொண்டனர்.தூதுக்குழுவினரால் அடையாளம் காணப்பட்ட ஆர்வமுள்ள துறைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்திய கருத்துப் பரிமாற்றத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் இக்குழுக்கள் வட்டமேஜைக் கலந்துரையாடலில் பங்கேற்க அழைக்கப்பட்டன. இக்கலந்துரையாடலானது அந்தந்தக் குழுக்களின் முக்கிய பங்களிப்புகள், தற்போதைய செயற்பாடுகள் மற்றும் மூலோபாய முன்னுரிமைகள் குறித்த பார்வைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது. இதில் கழிவு மேலாண்மை, நீர் விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு, மின்சாரம் மற்றும் சக்தி, அத்துடன் பொருளாதாரம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.இந்தக் கலந்துரையாடல்கள் இலங்கை மற்றும் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே அனுபவங்களையும் பார்வைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்த உதவியது.
2026-09-14
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததாகச் சமர்ப்பித்த கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.எம்.எஸ். அப்துல் வாஹித் அவர்களின் கடிதத்திற்கமைய, குறித்த பதவி விலகல் 2026 செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்தாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-09-11
சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மாண்புமிகு வெய் ஹுவாசியாங் அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (10) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.கௌரவ சபாநாயகர் அவர்கள் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்களை அன்புடன் வவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து சீனா வழங்கிய உதவிகளையும், பாடசாலைச் சீருடைத் துணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கௌரவ சபாநாயகர் அவர்கள், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பாராளுமன்றப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இலங்கை–சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக மேலும் பல முயற்சிகளும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். பட்டுப்பாதை மற்றும் கடல்வழிப் பாதைத் திட்டங்களின் கீழ் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ சபாநாயகர் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள், இலங்கை மக்களின் நட்புணர்வும் புன்னகையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையை “புன்னகைகளின் அழகிய தீவு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு வந்தது முதல் தமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் பாராட்டினார்.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கடல்சார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அண்மைய உயர்மட்ட சந்திப்புகள் தொடர்பில் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட தனித்தனி விஜயங்களின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களையும் சந்தித்ததாக தூதுவர் வெய் தெரிவித்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் மேலும் வளர்ச்சிக்கான புதிய மூலோபாய திசையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.2027ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும், இரப்பர்–அரிசி உடன்படிக்கையின் 75ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ள நிலையில், அந்த ஆண்டின் முக்கியத்துவத்தையும் இருதரப்பினரும் எடுத்துரைத்தனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள் மேலும் தெரிவித்தார்.