logo

02

E   |   සි   |  

2026-08-07

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் ஆதரவு

  • கௌரவ சபாநாயகருக்கும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் சந்திப்பு
  • சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக மாற்றுவதற்குத் திட்டம்

இலங்கை பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களுக்கும், சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் (Max Planck Foundation for International Peace and the Rule of Law) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. 

இலங்கைப் பாராளுமன்றத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராக ஆதரவளிக்கும் மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் நிர்வாகப் பணிப்பாளர் யோஹன்னஸ் க்ரூஸ்மார்க் (Johannes Krusemark), மூத்த ஆராய்ச்சி அதிகாரி ஹெய்லி நிக்கோல் எவன்ஸ் (Hailey Nicole Evans) மற்றும் சட்ட ஆலோசகர் ருவினி பெரேரா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்திற்காகத் தயாரிக்கப்பட்ட திட்ட முன்மொழிவு எனக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த மையமானது சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை மறுசீரமைத்து, இலங்கை பாராளுமன்றத்தின் பத்தாவது திணைக்களமாக நிறுவ எதிர்பார்ப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டார்.

இந்த மையத்தின் மூலம்:
•    உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் கொள்கை வகுப்பாளர்களாகப் பயிற்றுவித்தல்,
•    சட்ட ஆக்கச் செயற்பாடுகளுக்கு அவசியமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வாய்ப்புகளை விரிவாக்குதல்,
•    நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, அவற்றின் பயனுள்ள தன்மையை மீண்டும் மதிப்பீடு செய்தல் (Post-Legislative Scrutiny),
•    ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்களிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல்   ஆகிய நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் மக்களவை (Lok Sabha) மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) பாராளுமன்றத்தில் செயற்படுத்தப்படும் பாராளுமன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு இத்திட்ட முன்மொழிவை வலுப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

இந்த முக்கியமான தேசியப் பணிக்கு வளவாளராக ஆதரவளிக்க ஒப்புக்கொண்ட மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளைக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும், இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், குழுவால் தயாரிக்கப்பட்டு வரும் திட்ட முன்மொழிவு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  இச்செயல்முறையில் மாக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளும் பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், குறித்த அறக்கட்டளை நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார். இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பாராளுமன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் காந்தி பீரிஸ் மற்றும் பாராளுமன்றத்தின் நிதிப் பணிப்பாளர் சரத் குமார ஆகியோர் காணப்படுகின்றனர். இச்சந்திப்பில் கௌரவ சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜனக மகேஷ் அத்தபத்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-06

விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் என்பன பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 06) நிறைவேற்றப்பட்டன.குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இன்று முற்பகல் 11.45 மணி முதல் பிற்பகல் 5.40 மணி வரை நடைபெற்றது.விலங்குகள் (திருத்தச்) சட்டமூலத்தை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்  2026.07.21 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்திருந்தார்.இச்சட்டமூலத்தின் மூலம், இதற்கு முன்னர் மாடுகள் மற்றும் எருமைகளைப் போக்குவரத்து செய்வதற்கு மட்டுமே பொருந்தியிருந்த சட்ட ஏற்பாடுகளை மேலும் பல வகையான விலங்குகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்காலத்தில் பன்றிகள், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் போக்குவரத்து செய்யும்போது உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பரவுவதைத் தடுப்பது இதன் பிரதான நோக்கமாகும்.தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரினால் 2026.07.21 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டது.இச்சட்டமூலத்தின் மூலம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபையின் நிறுவன ரீதியான செயல்திறனை மேம்படுத்துதல், நீர் வழங்கல் சேவைகளின் முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் சபையின் பொறுப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


2026-08-06

மாணவர்கள் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக இருப்பது மிகவும் அவசியமானது – கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி

எதிர்காலத் தலைவர்களாக உருவாகக் கூடிய மாணவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருப்பதும் மிகவும் அவசியமானது என கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார். அதேபோன்று, மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும்போதும் அவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி செயன்முறை தொடர்பான புரிதலையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகம், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு மேலும் உரையாற்றிய கௌரவ பிரதி சபாநாயகர், மாணவர் பராயம் முதலே ஒழுக்கத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என்றும், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பெரியோருக்கு மதிப்பளித்து கஷ்டத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேறுவதில் மாணவர்கள் உறுதியான கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கல்வி பயின்று நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செலுத்துபவர்கள் என்றும், பாடநெறிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படாமல், தலைமைத்துவப் பண்புகள், குழுவாகப் பணியாற்றுதல் மற்றும் முடிவெடுக்கும் திறன் போற்றவற்றை வெளிப்படுத்துவது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மேலும் வழி வகுக்கும் என்றும் தெரிவித்தார்.இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட இணைச் செயலாளர் (ஜனாதிபதி நிதியம்) சுபாஷ் ரோஷன் அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார். அதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் பொதுசன தொடர்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மாணவர் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடையே உரையாற்றும் போது, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் மனிதாபிமானம் நிறைந்த குடிமக்களாக மாறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் சியாத் அஹமட் அவர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவ பிரதிசபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பி.பிரபாகரன் நன்றியுரையாற்றினார். இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினட் கேணல் நதீக தங்கொல்ல, பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-08-06

கல்வியின் வெற்றியையும், எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதையும் நோக்காகக் கொண்டு அல் ஹிதாயா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

“கல்வியின் வெற்றிக்காக நேர்மறையான மனப்பாங்கை வளர்த்து, நாளைய தலைவர்களை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட மேம்பாட்டு நிகழ்ச்சி  கொழும்பு 10, அல் ஹிதாயா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.குறித்த பாடசாலையில் தரம் 9, 10 மற்றும் 11 இல் கல்வி பயிலும் மாணவிகளை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், கல்வியில் சிறந்து விளங்குவதற்கு தேவையான நேர்மறையான மனப்பாங்கு, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்வது தொடர்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.அத்துடன், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக தலைமைத்துவம், பிரதிநிதித்துவம், பொறுப்புணர்வு, புதிய சிந்தனைகள், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு போன்ற பண்புகளை வளர்த்துக்கொண்டு “இன்றைய மாணவி – நாளைய தலைவி” என்ற நிலையை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவிகள் தெளிவுபடுத்தப்பட்டனர்.நாட்டின் சட்டவாக்கத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய எதிர்கால தலைவர்களாக மாணவர்களை உருவாக்குவதற்குத் தேவையான தலைமைத்துவ பண்புகள், பொறுப்புகள், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் ஜனநாயக தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி அவர்கள் இந்நிகழ்ச்சியின் வளவாளராகக் கலந்துகொண்டு, மாணவர்களுடன் ஊடாடும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, கல்வியில் சிறந்து விளங்குவதுடன், பொறுப்புமிக்க பிரஜைகளாகவும் எதிர்காலத்தில் தேசிய தலைவர்களாகவும் உருவாகுவதற்குத் தேவையான தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுமாறும் அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.


2026-08-06

2027 – 2029 காலப்பகுதியில் பல்வேறு புகையிரத சேவை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டம்

மக்களுக்கு மிகவும் திறமையானதும் பயனுள்ளதுமான புகையிரத சேவையை வழங்கும் நோக்கில், 2027 – 2029 காலப்பகுதிக்காக பல்வேறு ரயில் சேவை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்கள் எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.இதற்கமைய, கொழும்பு புறநகர் புகையிரதத் திட்டம், களனி பாலத்தை நவீனமயப்படுத்துதல், 10 ரயில் பாலங்களை (கொம்பனித்தெரு, நாரஹேன்பிட்ட, அளுத்கம, இந்துருவ, கிந்தோட்டை, தொட்டந்துவ, வெள்ளவத்தை, பிங்வத்தை, ஹிக்கடுவ, பாணந்துறை) புனரமைத்தல், இலங்கை புகையிரதச் சேவைக்காக 05 மின்சக்தி புகையிரதப் பெட்டித் தொகுதிகள் மற்றும் 05 டீசல் மின்சார இயந்திரங்களை கொள்வனவு செய்தல் ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.மேலும், குருநாகல் – பொல்கஹாவெல இரட்டை புகையிரதப் பாதைத் திட்டம், மருதானையிலிருந்து இரத்தினபுரி வரையிலான களனி பள்ளத்தாக்கு (களனிவெலி) புகையிரதப் பாதை அபிவிருத்தி, புதிய 05 புகையிரத இயந்திரங்கள் மற்றும் புறநகர் போக்குவரத்திற்கான இலகு புகையிரதப் பெட்டித் தொகுதிகள் 05 ஐ கொள்வனவு செய்தல், புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தரப்படுத்தும் வேலைத்திட்டம் (Dream Destination – 2027-2029), ரத்மலானை Shops 27 மற்றும் 28 புனரமைப்பு ஆகிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.கொழும்பு புறநகர் புகையிரத சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, சௌகரியமான மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்து சேவையை வழங்குவதன் மூலம் ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், கண்டி புறநகர் புகையிரதத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய புகையிரத இயந்திரங்களை சேவையில் இணைத்தல், புகையிரதப் பாதைகளை புனரமைத்தல், புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தரப்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அத்துடன் மின்னணு பயணச்சீட்டு (E-Ticket) முறையை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள புகையிரதப் பாதைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஒற்றை புகையிரதப் பாதை (A) 1,308.707 கிலோமீற்றராகவும், இரட்டைப் புகையிரதப் பாதை (B) 282.912 கிலோமீற்றராகவும், மூன்றாவது ரயில் பாதை (C) 40.938 கிலோமீற்றராகவும், நான்காவது புகையிரதப் பாதை (D) 7.580 கிலோமீற்றராகவும் காணப்படுவதுடன், மொத்த புகையிரதப் பாதை நீளம் 1,640.137 கிலோமீற்றராக உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து மூலம் (பயணிகள், சரக்கு மற்றும் ஏனைய சேவைகள்) கிடைத்த வருடாந்த வருமானம் தொடர்பிலும் அமைச்சர் சபையில் தகவல் வெளியிட்டார்.அதன்படி, 2021ஆம் ஆண்டில் ரூ. 2,678,724,988.46, 2022ஆம் ஆண்டில் ரூ. 10,335,603,440.66, 2023ஆம் ஆண்டில் ரூ. 16,079,474,195.75, 2024ஆம் ஆண்டில் ரூ. 16,468,344,008.55 மற்றும் 2025ஆம் ஆண்டில் ரூ. 17,165,992,777.48 வருமானமாக கிடைத்துள்ளதாக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் தனது பதிலில் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks