01

E   |   සි   |  

2026-08-06

செய்தி வகைகள் : செய்திகள் 

2027 – 2029 காலப்பகுதியில் பல்வேறு புகையிரத சேவை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டம்

மக்களுக்கு மிகவும் திறமையானதும் பயனுள்ளதுமான புகையிரத சேவையை வழங்கும் நோக்கில், 2027 – 2029 காலப்பகுதிக்காக பல்வேறு ரயில் சேவை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்கள் எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதற்கமைய, கொழும்பு புறநகர் புகையிரதத் திட்டம், களனி பாலத்தை நவீனமயப்படுத்துதல், 10 ரயில் பாலங்களை (கொம்பனித்தெரு, நாரஹேன்பிட்ட, அளுத்கம, இந்துருவ, கிந்தோட்டை, தொட்டந்துவ, வெள்ளவத்தை, பிங்வத்தை, ஹிக்கடுவ, பாணந்துறை) புனரமைத்தல், இலங்கை புகையிரதச் சேவைக்காக 05 மின்சக்தி புகையிரதப் பெட்டித் தொகுதிகள் மற்றும் 05 டீசல் மின்சார இயந்திரங்களை கொள்வனவு செய்தல் ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மேலும், குருநாகல் – பொல்கஹாவெல இரட்டை புகையிரதப் பாதைத் திட்டம், மருதானையிலிருந்து இரத்தினபுரி வரையிலான களனி பள்ளத்தாக்கு (களனிவெலி) புகையிரதப் பாதை அபிவிருத்தி, புதிய 05 புகையிரத இயந்திரங்கள் மற்றும் புறநகர் போக்குவரத்திற்கான இலகு புகையிரதப் பெட்டித் தொகுதிகள் 05 ஐ கொள்வனவு செய்தல், புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தரப்படுத்தும் வேலைத்திட்டம் (Dream Destination – 2027-2029), ரத்மலானை Shops 27 மற்றும் 28 புனரமைப்பு ஆகிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு புறநகர் புகையிரத சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, சௌகரியமான மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்து சேவையை வழங்குவதன் மூலம் ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், கண்டி புறநகர் புகையிரதத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய புகையிரத இயந்திரங்களை சேவையில் இணைத்தல், புகையிரதப் பாதைகளை புனரமைத்தல், புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தரப்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், அத்துடன் மின்னணு பயணச்சீட்டு (E-Ticket) முறையை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள புகையிரதப் பாதைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஒற்றை புகையிரதப் பாதை (A) 1,308.707 கிலோமீற்றராகவும், இரட்டைப் புகையிரதப் பாதை (B) 282.912 கிலோமீற்றராகவும், மூன்றாவது ரயில் பாதை (C) 40.938 கிலோமீற்றராகவும், நான்காவது புகையிரதப் பாதை (D) 7.580 கிலோமீற்றராகவும் காணப்படுவதுடன், மொத்த புகையிரதப் பாதை நீளம் 1,640.137 கிலோமீற்றராக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து மூலம் (பயணிகள், சரக்கு மற்றும் ஏனைய சேவைகள்) கிடைத்த வருடாந்த வருமானம் தொடர்பிலும் அமைச்சர் சபையில் தகவல் வெளியிட்டார்.

அதன்படி, 2021ஆம் ஆண்டில் ரூ. 2,678,724,988.46, 2022ஆம் ஆண்டில் ரூ. 10,335,603,440.66, 2023ஆம் ஆண்டில் ரூ. 16,079,474,195.75, 2024ஆம் ஆண்டில் ரூ. 16,468,344,008.55 மற்றும் 2025ஆம் ஆண்டில் ரூ. 17,165,992,777.48 வருமானமாக கிடைத்துள்ளதாக கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் தனது பதிலில் மேலும் தெரிவித்தார்.



தொடர்புடைய செய்திகள்

2026-11-03

வெளிநாட்டு கடல் எல்லைகளில் கைது செய்யப்பட்ட 795 மீனவர்களில் 753 பேர் 66 மீன்பிடிப் படகுகளுடன் விடுவிப்பு

பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசித்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டு முதல் 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை 145 மீன்பிடிப் படகுகளுடன் 795 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 753 மீனவர்கள் 66 மீன்பிடிப் படகுகளுடன் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்காக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சார்பில் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.2024 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மொத்தம் 49,271 மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவற்றில் 4,869 பதிவு செய்யப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகுகள், 880 ஒருநாள் மீன்பிடிப் படகுகள் (IDAY), வெளிப்புற இயந்திரங்களைக் கொண்ட 24,823 படகுகள் (OFRP), இயந்திரங்களைக் கொண்ட 2,709 பாரம்பரியப் படகுகள் (MTRB), இயந்திரங்கள் அற்ற 15,037 பாரம்பரியப் படகுகள் (NTRB) மற்றும் இயந்திரமற்ற கரைவலைப் படகுகள் (NBSB) 953 என்பன உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.இவற்றில் 4,869 பலநாள் மீன்பிடிப் படகுகளும் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான சட்டபூர்வ அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சில சந்தர்ப்பங்களில், சீரற்ற காலநிலை, பலத்த காற்று அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மீன்பிடிப் படகுகள் பிற நாடுகளின் பிரத்தியேக பொருளாதார வலயங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, சில படகுகளின் மீகாமர்கள் வேண்டுமென்றே பிற நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் பிரவேசித்து, அங்குள்ள மீன் வளங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 7 மீன்பிடிப் படகுகளுடன் 40 மீனவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.வெளிநாடுகளில் கைது செய்யப்படும் மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட நாடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகங்கள் நேரடியாகச் செயற்படுவதாகவும், அதற்கமைய கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் தொடர்பில் தேவையான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான தலையீடுகளையும் அந்தந்தத் தூதரகங்கள் மேற்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், அனர்த்தங்களுக்கு உள்ளாகும் படகுகள் உள்ளிட்ட ஏனைய மீன்பிடிப் படகுகள் தொடர்பான தேவையான தொழில்நுட்ப அறிக்கைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வழங்குவதாகவும், சில சந்தர்ப்பங்களில் மீனவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமானப் பயணச்சீட்டுகளைக்கூட அத்திணைக்களம் வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


2026-11-03

2019 முதல் 2025 வரை கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 6,658 காசநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்

2019 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 6,658 காசநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், சனநெரிசல் மிக்க மற்றும் திருப்தியற்ற குடியிருப்புச் சூழல், போஷாக்கின்மை, வாழ்க்கை முறை சார்ந்த காரணிகள் மற்றும் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருத்தல் ஆகியவை காசநோய் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாக அமைவதாகவும் கௌரவ சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.Mycobacterium tuberculosis எனப்படும் பக்றீரியாவால் தொற்று ஏற்பட்ட பின்னர், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும் சந்தர்ப்பங்களில், அது காலப்போக்கில் செயலில் உள்ள காசநோயாக உருவாகக்கூடும் என அமைச்சர் தெரிவித்தார்.காசநோய் பரவுவதற்கான காரணங்களை விளக்கிய அமைச்சர், நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது சிரிக்கும்போது காசநோயை ஏற்படுத்தும் பக்றீரியாவைக் கொண்ட நுண்ணிய நீர்த்துளிகள் (airborne droplets) காற்றில் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டார். ஆரோக்கியமான ஒருவர் அந்த நீர்த்துளிகளைச் சுவாசிப்பதன் மூலம், பக்றீரியா அவரது சுவாசத் தொகுதிக்குள் நுழைவதால் நோய் பரவுவதாகவும் அவர் தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் காசநோய் பரவுவதைத் தடுப்பதற்காக, நோயாளர்கள் அனைவருக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படுவதுடன், நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சைகளும் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். அதிக ஆபத்துள்ள நகர்ப்புறப் பகுதிகளை இலக்காகக் கொண்டு, நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்களைப் பயன்படுத்தி இலவசப் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.மேலும், அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைச் சிகிச்சைகளும் வழங்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இதற்கு மேலதிகமாக, நகர்ப்புறச் சமூகத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், சுகாதார ஆலோசகர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியனவும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், அதிக ஆபத்துள்ள குழுக்களை அடையாளம் கண்டு அவர்களைச் சிகிச்சைக்கு வழிநடத்துதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடையே காசநோய் ஏற்படும் அபாயத்தைப் பரிசோதித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.


2026-11-03

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட 236 குற்றவாளிகள் வெளிநாடுகளில்

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள 236 இலங்கை குற்றவாளிகள் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களில் 97 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கவிந்த ஹேஷான் ஜயவர்தன அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இத்தகவல்களை வழங்கினார்.சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் கொலை, போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், பணத் துய்மையாக்கல், சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்தல், குற்றச் செயல்களுக்குச் சதித் திட்டம் தீட்டுதல் மற்றும் குற்றச் செயல்களுக்கு உதவுதல், உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.இவர்களில் 32 பேர் கொலைக் குற்றங்களைப் புரிந்துள்ளதாகவும், ஏனையவர்கள் போதைப்பொருள் கடத்தல் அல்லது வேறு பாரதூரமான சிக்கலான குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.ஒரு குற்றவாளிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், சர்வதேச பொலிஸ் அறிவித்தல்கள் ஊடாகச் சந்தேகநபர்களின் வாழ்க்கைத் தகவல்கள் சர்வதேச பொலிஸ் தகவல் கட்டமைப்புகளில் பரிமாறப்படுவதால், சந்தேகநபர் கைது செய்யப்படும் வரை அந்த அறிவித்தல் இரகசிய ஆவணமாகப் பேணப்படும் என்றும் தெரிவித்தார்.வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, 1977 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மீள ஒப்படைத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


2026-11-03

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கசகஸ்தான் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

கசகஸ்தான் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மாண்புமிகு செர்ஜி விக்டோரோவ் அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார்.1992 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து கசகஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள நீண்டகால நட்புறவை இச்சந்திப்பின் போது கௌரவ சபாநாயகர் நினைவுபடுத்தினார்.  இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை தயாராக உள்ளது எனத் தெரிவித்த அவர்,  2025 ஆம் ஆண்டு கொழும்பில் கசகஸ்தானின் முதலாவது வசிப்பிடத் தூதரகத்தை அமைத்தமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றும் குறிப்பிட்டார்.முதலீடு, வர்த்தகம், விவசாயம், சுற்றுலா மற்றும் வலுசக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான கணிசமான வாய்ப்புகள் இருப்பதை கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சர்வதேச ஈடுபாடு மற்றும் முதலீடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த வாய்ப்புகளை ஆராயுமாறு கசகஸ்தானுக்கு அழைப்பு விடுத்தார்.இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தூதுவர் விக்டோரோவ் வலியுறுத்தினார். மேலும், ஓரவை பாராளுமன்ற அமைப்பைக் கொண்டுள்ள கசகஸ்தானில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாராளுமன்ற முறைமை குறித்தும் அவர் சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.பாராளுமன்றப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும், நிறுவன ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் "இலங்கை – கசகஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை" அமைப்பதன் முக்கியத்துவத்தை தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார்.இதற்கு பதிலளித்த சபாநாயகர், இலங்கை – கசகஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததோடு, பாராளுமன்ற ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை வளர்ப்பதற்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.இச்சந்திப்பானது, இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதிலும், பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும், இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக பாராளுமன்ற இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதிலும் இலங்கை மற்றும் கசகஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பகிர்ந்தளிக்கப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks