logo

02

E   |   සි   |  

2026-07-23

செய்தி வகைகள் : செய்திகள் 

திறந்த பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு விஜயம்

இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பொதுச் சேவை நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு நிகழ்வு கடந்த ஜூலை 22ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் தலைமையில், மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சட்ட மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் பாராளுமன்றத்தின் பொது மக்கள் கலரிக்கு வருகை தந்து, பாராளுமன்ற அமர்வுகளை அவதானித்தனர்.

இதற்கு மேலதிகமாக, சட்டவாக்கச் செயற்பாடு, பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகள் பாராளுமன்ற பொதுமக்கள் வெளித்தொடர்பு சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புதிய அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சியானது இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அதுலசிறி சமரகோன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-07-22

பூரண மனிதநேயத்தை நோக்கி பயணிக்க அறிவும் இதயமும் விழிப்புடன் இருக்க வேண்டும் –குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர

பூரண மனிதநேயத்தை நோக்கி பயணிப்பதற்கு, தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அறிவு மாத்திரமன்றி இதயமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கைப் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.‘நான்’ என்ற கருத்தை விட ‘நாம்’ என்ற கருத்தில் ஒத்துழைப்பு, அன்பு, கருணை மற்றும் பரிவுணர்வு ஆகியன காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.கிரிபத்கொட விஹாரமஹாதேவி மகளிர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே குழுக்களின் பிரதித் தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி முறையின் செயற்பாடுகள் தொடர்பான புரிதலையும் மாணவியருக்கு வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுக்களின் பிரதித் தவிசாளர், கல்வியின் ஊடாக பிள்ளைகளுக்கு சமூகத்துடன் இணைந்து செயற்படும் திறன், விழுமியங்களை அடையாளம் காணும் திறன் மற்றும் பொறுப்புமிக்க பிரஜைகளாக வளர்வதற்குத் தேவையான திறன்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய அவர், மனிதனின் பூரணத்துவத்திற்காக தனக்கும், பிறருக்கும் மற்றும் இயற்கைக்கும் இடையிலான உறவுகளைச் சிறந்த முறையில் பேணுவது அத்தியாவசியமானது என வலியுறுத்தினார்.இந்த உறவுகள் சீர்குலைவதன் காரணமாக தனிநபர்களிடையே தன்னம்பிக்கை வீழ்ச்சி, சமூகத்தில் அவநம்பிக்கை, வெறுப்பு மற்றும் மோதல்கள் அதிகரித்தல், அத்துடன் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் காலநிலை நெருக்கடி தீவிரமடைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையிலும் வாக்காளர்களிலும் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கும் வகையில் மாணவிகள் தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக விழுமியங்களை நடைமுறையில் அனுபவிப்பதற்கான முக்கியமான வாய்ப்பாக மாணவர் பாராளுமன்றம் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.அதேநேரம், “எதிர்காலத் தலைமைத்துவமும் மாணவர் பாராளுமன்றமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள், ஜனநாயகம், மக்கள் இறைமை, பாராளுமன்றத்தின் வகிபாகம், சட்டவாக்கச் செயன்முறை, குழுக்கள், பாராளுமன்ற ஒன்றியங்கள், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கினார்.ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான சேவைகளை பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும், மாணவர் அமைச்சர்களினால் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் திருமதி எம். எல். என். எம். தமயந்தியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடரின் மற்றுமொரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள், விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


2026-07-21

மாணவர் பாராளுமன்றம் தொடர்பில் அல்-ஹிதாயா கல்லூரியில் செயலமர்வு

மாணவர் பாராளுமன்றம் தொடர்பில் மாணவர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று கொழும்பு – 10 அல்-ஹிதாயா கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும், குறித்த கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எஃப்.சரூக் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.இந்தச் செயலமர்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் எஸ்.எல். ஸியாத் அஹமட் பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கினார்.தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரி ஏ.எஸ்.எம்.யஸ்ரி மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நடைமுறையிலான முன்னுதாரணங்களுடன் விரிவான விளக்கத்தை வழங்கினார். இச்செயலமர்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் மாணவர் பாராளுமன்றம் குறித்துத் தமக்குக் காணப்படும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டனர். 


2026-07-21

கோபா மற்றும் கோப் அறிக்கைகளை சட்டமா அதிபர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஆற்றுப்படுத்த பாராளுமன்றம் அங்கீகாரம்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஆகியவற்றினால் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் குறித்த விடயங்கள் அடங்கியதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை சட்டமா அதிபர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஆற்றப்படுத்துவது தொடர்பான தீர்மானங்கள் இன்று (21) பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டன.இதற்கமைய, வெளிநாட்டு பணமனுப்பல்களின் பிரகாரம், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரியதாக 2022 மே 01ஆம் திகதி தொடக்கம் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட உத்தேச திட்டம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2025.ஒக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 (4) இன் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டத்துறை தலைமையதிபதியின் அவதானிப்புக்கள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.அத்துடன், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்துவது தொடர்பான தீர்மானத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பொது வைத்தியசாலை சபை, காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, லங்கா சதொச லிமிடட், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய சேமிப்பு வங்கி ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளன. 2026.04.07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையியற் கட்டளை 1119(4) மற்றும் 120 (4) ஆகியவை தொடர்பான திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.


2026-07-21

தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய சூழல் (திருத்த) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஜுலை 21) சான்றுரைப்படுத்தினார்.1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சூழல் சட்டம், அத்துடன் 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்த) சட்டங்கள் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கணிசமாக வலுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சுற்றாடல் மற்றும் நிறுவன ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்பதைக் கருத்திற்கொண்டு இந்தத் திருத்தச் சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தச் சட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல், கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஒழுங்குமுறை பொறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும் பொறிமுறைகளை நவீனமயப்படுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய இச்சட்டமூலம் சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க தேசிய சூழல் (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks