பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-22
செய்தி வகைகள் : செய்திகள்
பூரண மனிதநேயத்தை நோக்கி பயணிப்பதற்கு, தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அறிவு மாத்திரமன்றி இதயமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இலங்கைப் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர தெரிவித்தார்.
‘நான்’ என்ற கருத்தை விட ‘நாம்’ என்ற கருத்தில் ஒத்துழைப்பு, அன்பு, கருணை மற்றும் பரிவுணர்வு ஆகியன காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிரிபத்கொட விஹாரமஹாதேவி மகளிர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே குழுக்களின் பிரதித் தவிசாளர் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அனுபவத்தையும் ஜனநாயக ஆட்சி முறையின் செயற்பாடுகள் தொடர்பான புரிதலையும் மாணவியருக்கு வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த குழுக்களின் பிரதித் தவிசாளர், கல்வியின் ஊடாக பிள்ளைகளுக்கு சமூகத்துடன் இணைந்து செயற்படும் திறன், விழுமியங்களை அடையாளம் காணும் திறன் மற்றும் பொறுப்புமிக்க பிரஜைகளாக வளர்வதற்குத் தேவையான திறன்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய அவர், மனிதனின் பூரணத்துவத்திற்காக தனக்கும், பிறருக்கும் மற்றும் இயற்கைக்கும் இடையிலான உறவுகளைச் சிறந்த முறையில் பேணுவது அத்தியாவசியமானது என வலியுறுத்தினார்.
இந்த உறவுகள் சீர்குலைவதன் காரணமாக தனிநபர்களிடையே தன்னம்பிக்கை வீழ்ச்சி, சமூகத்தில் அவநம்பிக்கை, வெறுப்பு மற்றும் மோதல்கள் அதிகரித்தல், அத்துடன் சுற்றுச்சூழல் அழிவு மற்றும் காலநிலை நெருக்கடி தீவிரமடைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையிலும் வாக்காளர்களிலும் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருப்பதால், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கும் வகையில் மாணவிகள் தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக விழுமியங்களை நடைமுறையில் அனுபவிப்பதற்கான முக்கியமான வாய்ப்பாக மாணவர் பாராளுமன்றம் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேநேரம், “எதிர்காலத் தலைமைத்துவமும் மாணவர் பாராளுமன்றமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள், ஜனநாயகம், மக்கள் இறைமை, பாராளுமன்றத்தின் வகிபாகம், சட்டவாக்கச் செயன்முறை, குழுக்கள், பாராளுமன்ற ஒன்றியங்கள், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான சேவைகளை பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும், மாணவர் அமைச்சர்களினால் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் திருமதி எம். எல். என். எம். தமயந்தியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ஜனாதிபதி செயலகமும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வரும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத் தொடரின் மற்றுமொரு நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகள், விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks