பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-07-14
செய்தி வகைகள் : செய்திகள்
ஜூலை 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவிக்கின்றார். 2026.07.10 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜூலை 21 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்ட 119 மற்றும் 120இன் கீழான இரண்டு தீர்மானங்கள் குறித்த விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
வெளிநாட்டு பணமனுப்பல்களின் பிரகாரம், வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்குரியதாக 2022 மே 01ஆம் திகதி தொடக்கம் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட உத்தேச திட்டம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2025.ஒக்டோபர் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119இன் ஏற்பாடுகளுக்கு அமைய சட்டத்துறை தலைமையதிபதியின் அவதானிப்புக்கள் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.
அத்துடன், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகளுக்கு அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்துவது தொடர்பான தீர்மானமும் விவாதிக்கப்படவுள்ளது. (இத்தீர்மானங்கள் இரண்டும் 2026.07.10 ஆம் திகதி 164 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தின் *87 மற்றும் *88ஆம் இலக்க விடயமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.)
இதன் பின்னர் பி.ப.2.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை பத்தாவது பாராளுமன்றத்தின் பொது மனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கை முறை மற்றும் செயலாற்றுகை பற்றிய ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதம் இடம்பெறவுள்ளது.
ஜூலை 22 ஆம் திகதி, புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப 10.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை வாய்மூல விடைக்கான ஐம்பது வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.ப. 4.30 மணி வரை பி.ப. 5.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 23 ஆம் திகதி, வியாழக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப.10.00 மணி முதல் மு.ப. 11.00 மணிவரையில் வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும், மு.ப.11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மு.ப.11.30 மணி முதல் பி.ப. 2.30 மணிவரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுபாட்டு) சட்டத்தின் கீழ் 2493/03 மற்றும் 2493/39 ஆகிய இலக்க வர்த்தமான பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட இரண்டு விதிமுறைகள் குறித்த விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் பி.ப. 2.30 மணி முதல் பி.ப. 5.30 மணிவரையில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.
ஜூலை 24 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப.10.00 மணி முதல் மு.ப. 11.00 மணிவரையில் வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும், மு.ப.11.00 மணி முதல் மு.ப. 11.30 மணிவரையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மு.ப 11.மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
| பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள் | தனியார் உறுப்பினர் பிரேரணை |
| கந்தசாமி பிரபு | பால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல் |
| ஹெக்டர் அப்புஹாமி | சதுப்புநிலப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல் |
| எம்.எஸ். உதுமாலெப்பை | மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் |
| இம்ரான் மகரூப் | கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல் |
| சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர | இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல் |
| சுசந்த குமார நவரத்ன | இலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல் |
| சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் | அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல் |
பி.ப.5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவுள்ளது.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2026-08-20
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks