பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-05-13
செய்தி வகைகள் : செய்திகள்
கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் பிலியந்தலை வலயக் கல்விப் பணிப்பாளர் குமுது ஹேமமாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர குறிப்பிடுகையில், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக அவர்கள் மத்தியில் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். மாணவர் பாராளுமன்ற முறைமையானது எதிர்காலத்தில் சுறுசுறுப்பான அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், மாணவர் பருவத்தில் படைப்பாற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் குழுக்களின் பிரதித் தவிசாளர் தனது உரையில் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.ஆர்.ஹேரத் அவர்கள் பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பாராளுமன்றத்தின் பணிகள் முன்னெடுக்கப்படும் முறைமை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.
இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.கே.கே.எம். பெர்னாண்டோ நன்றியுரையாற்றியதுடன், மாணவர்களின் எதிர்காலத்திற்காக இலங்கைப் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தொடர் நிகழ்ச்சிகளுக்கான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-05-12
இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் குழுவினர் சந்திப்புஅமைச்சரவை ஆலோசனைக் குழு மற்றும் நீதி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியன இணைந்த குழுக் கூட்டத்திலும் சீனத் தூதுக்குழுவினர் பங்கேற்புசீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக் குழுவின் உறுப்பினரும், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் தலைவருமான கௌரவ (பேராசிரியர்) சின் ஜன்யங் தலைமையிலான தூதுக்குழுவினர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (மே 07) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.இந்தத் தூதுக் குழுவில் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் உறுப்பினரும், தேசிய மக்கள் காங்கிரசின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் உப தலைவருமான கௌரவ கொங் பின், அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான குழுவின் உறுப்பினர் கௌரவ காவோ சிசெங் மற்றும் அதிகாரிகள் பலரும் உள்ளடங்கியிருந்தனர்.இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். தூதுக் குழுவினரை வரவேற்ற கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் 2000 வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் நீண்டகால, நெருக்கமான இருதரப்பு உறவுகளை வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வமான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டில் 70வது வருடம் பூர்த்தியடையவிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.நம்பிக்கையான நீண்டகால நட்பு நாடு என்ற ரீதியில் பல தசாப்தங்களாக சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களுக்கும் கௌரவ சபாநாயகர் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். தித்வா சூறாவளி தாக்கத்தின் பின்னரான சூழ்நிலை, அண்மைய பொருளாதார நெருக்கடி போன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும், சர்வதேச மற்றும் பல்தரப்பு தளங்களிலும் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களையும் அவர் நன்றியுடன் நினைவுபடுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ (பேராசிரியர்) சின் ஜன்யங் அவர்கள், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் வலுவான, நீடித்த உறவுகளை வலியுறுத்தியதோடு, இலங்கையின் தொடர்ச்சியான அபிவிருத்தி முயற்சிகளையும் பாராட்டினார். இரு நாடுகளின் சட்டமன்றங்களுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து சீனத் தூதுக்குழுவினர் சபை முதல்வரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சரும், இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான பிமல் ரத்னாயக்க அவர்களையும் சந்தித்தனர். சவால்மிக்க தருணங்களில் சீனா வழங்கிய உதவிகளுக்கு கௌரவ அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல், கொள்கை வகுப்பின் போதான ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிறுவன ரீதியான உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்தக் கலந்துரையாடலில் இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கௌரவ உறுப்பினர்களான தனுர திசாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.அதேநேரம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் சீனத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சட்டம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நஜித் இந்திக உட்பட குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இலங்கையில் நீதித்துறை மற்றும் சட்டத்துறையின் மேம்பாட்டுக்கு சீனா அளித்துவரும் ஆதரவிற்கு இரு குழுக்களின் தலைவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்தக் கலந்துரையாடலில் சட்ட மற்றும் நீதித்துறை நடைமுறைகள், ஆளுகை மற்றும் நிறுவன ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதியபோசன விருந்துபசாரத்திலும் சீனத் தூதுக்குழுவினர் பங்கேற்றனர்.
2026-05-08
இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையிலான பாராளுமன்ற இராஜதந்திரம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்வியட்னாம் சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் இலங்கை பாராளுமன்றத்திற்கு இன்று (08) விஜயம் மேற்கொண்டதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்ட கால உறவுகள் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன் போது வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி டோ லாம் அவர்கள், வியட்னாமின் அபிவிருத்திப் பயணம், பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம், சமாதானம், நிலைபேறான அபிவிருத்தி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட முன்னேற்றம் ஆகிய விடயங்களில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.வியட்னாம் ஜனாதிபதி டே லாம் அவர்கள் மு.ப 11.05 மணியளில் பாராளுமன்றத்தை வந்தடைந்ததுடன், அவரை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன, பிரதி படைக்கல சேவிதர் அசிந்த குரே, உதவி படைக்கல சேவிதர் சசிந்த லக்மால் கடிகமுவ ஆகியோர் பேரணியாக வியட்னாம் ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டடத்திற்கு அழைத்துச் சென்றனர்.இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், கௌரவ சபாநாயகருக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையில் காணப்படும் ஆளமான நட்புறவு மற்றும் நீண்டகால இராஜதந்திர உறவுகளை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர். வியட்னாமின் முன்னாள் தலைவர் ஹோ சி மின் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பாராளுமன்ற பரிமாற்றங்களை மேம்படுத்தி, இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்த வியட்னாம் ஜனாதிபதி டே லாம் அவர்கள், கௌரவ சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற தூதுக் குழுவை வியட்னாமுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், இலங்கையின் அரசியல் நிலைத்தன்மையையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முயற்சிகளையும் பாராட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற இராஜதந்திரத்தைப் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்தி அதற்கான வியட்னாமின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.இந்த விஜயத்தின் போது வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இட்டார்.இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, வியட்னாம் ஜனாதிபதி டோ லாம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோர் படைக்கல சேவிதர் மற்றும் பிரதி படைக்கல சேவிதர்களால் பேரணியாக சபா மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மு.ப 11.35 மணிக்கு சபா மண்டபத்திற்கு வருகைதந்த வியட்னாம் கௌரவ ஜனாதிபதி, கௌரவ சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்ததுடன், மு.ப 11.40 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். வியட்னாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் உரைநிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்னாம் ஜனாதிபதி பி.ப 12.30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டார்.
2026-05-08
இலங்கை பாராளுமன்ற பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் “லிட்டில் ரூட்ஸ்” பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி என்பன கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ‘கொவிஜன மந்திரய’ வளாகத்தில் அண்மையில் (மே 06) உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் (ACWF) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000,000 யுவான் பெறுமதியான (ஏறத்தாழ ரூ.43 மில்லியன்) உபகரணங்களைப் பயன்படுத்தி “லிட்டில் ரூட்ஸ்” புதிய பகல் நேரப் பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் அதேநேரம், பிள்ளைகளின் கல்வி மற்றும் சிறுவர் பராயத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாதுகாப்புடன்கூடிய, அவர்களை ஊக்கமளிக்கக் கூடிய சூழலை வழங்குவதே இந்தப் புதிய பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளியின் பிரதான நோக்கமாகும்.“லிட்டில் ரூட்ஸ்” பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் முன்பள்ளி, இலங்கை பாராளுமன்றம், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக உருவாகியுள்ளது. முதற்கட்டமாக இது பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணியாளர்களுக்காகத் திறக்கப்பட்டு, பின்னர் ஏனைய நிறுவனங்களுக்கும் விஸ்தரிப்பதே எதிர்பார்ப்பாகும்.இந்த நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன கௌரவ அமைச்சர் கே.டீ.லால் காந்த, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, வெகுசன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, பாராளுமன்றத்தின் குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் சமன்மலி குணசிங்க, இலங்கைக்கான சீன தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் ஜி லிலி (Ji Lili), இரண்டாவது செயலாளர் ஜியாங் சாங் (Jiang Chang), பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மேலும், பாராளுமன்றத்தின் அதிகாரிகள், அமைச்சுக்களின் அதிகாரிகள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
2026-05-07
வியட்னாம் சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி டோ லாம் (To Lam) அவர்கள் நாளையதினம் (08) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், பாராளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.வியட்னாம் ஜனாதிபதி அவர்கள் நாளையதினம் மு.ப 11.05 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், கௌரவ சபாநாயகருக்கும் இடையில் சிறியதொரு சந்திப்புக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை – வியட்னாம் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.இதன்போது வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இடவுள்ளார்.இதனைத் தொடர்ந்து சபா மண்டபத்திற்கு வருகை தரும் வியட்னாம் கௌரவ ஜனாதிபதி, கௌரவ சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் மு.ப 11.40 மணிக்கு அவர் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.வியட்னாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உரைநிகழ்த்தவிருப்பதுடன், பாராளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்னாம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்படுவார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks