பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-10
செய்தி வகைகள் : செய்திகள்
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(இ) ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்திற்கு நியமனம் செய்வதற்கு கௌரவ ஜனாதிபதிக்கு விதப்புரையை மேற்கொள்வதற்கு சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோருகின்றது.
தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(அ)(i) கீழ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டம், ஆளுகை, பொது நிர்வாகம், சமூக சேவைகள், ஊடகத் துறை, அறிவியல் மற்றும் தொழினுட்பவியல் அல்லது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் அறிவு, அனுபவம் மற்றும் திறமையைப் பறைசாற்றி பகிரங்க வாழ்வில் தமக்கென சிறந்த நிலையினை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளைச் சட்டம் வழங்குகின்றது.
மேலும், 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(2) (அ) (ii) முதல் (v) வரை, அவ்வாறு பெயர் குறித்து நியமிக்கப்படுபவர்கள் -
• பாராளுமன்ற உறுப்பினராக, ஏதேனும் மாகாண சபை உறுப்பினராக அல்லது உள்ளூரதிகாரசபை உறுப்பினராக இல்லாதிருத்தல் வேண்டும்;
• ஏதேனும் பகிரங்க அல்லது நீதிசார் பதவியை அல்லது வேறேதேனும் இலாபமீட்டும் பதவியை வகிக்காதவராக இருத்தல் வேண்டும்;
• ஏதேனும் அரசியற் கட்சியுடன் சம்பந்தப்படாத ஆட்களாக இருத்தல் வேண்டும்;
• ஏதேனும் தொழிலைக் கொண்டு நடாத்தாதவர்கள் அல்லது ஏதேனும் உயர்தொழிலைப் புரியாத ஆட்களாகவிருத்தல் வேண்டும்.
பெயர் குறித்த நியமனங்கள் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் குறித்த நியமனங்கள்;
அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம்
அரசியலமைப்புப் பேரவை அலுவலகம்
இலங்கைப் பாராளுமன்றம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
எனும் முகவரிக்கு, 2026 பெப்ரவரி 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனங்கள்’ எனக் எனக் குறிப்பிட வேண்டும்.
2026-02-10
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.அரசியலமைப்பின் பிரிவு 153அ இன் கீழ், கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் பின்வரும் நியமனங்களுக்கு பொருத்தமான நபர்களை அரசியலமைப்பு பேரவை, கௌரவ சனாதிபதிக்கு பரிந்துரைக்கும்: i. பிரதி கணக்காய்வாளர் தலைமையதிபதியாக அல்லது அதற்கு மேற்பட்ட பதவி வகித்த கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் ஒய்வு பெற்ற இரண்டு அலுவலர்கள்;ii. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதி மன்றம் அல்லது இலங்கை மேல் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியொருவர்; அத்துடன் iii. இலங்கை நிருவாக சேவையின் ஓய்வுபெற்ற வகுப்பு I அலுவலர்.இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள்;அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம்அரசியலமைப்புப் பேரவை அலுவலகம்இலங்கைப் பாராளுமன்றம்ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேஎனும் முகவரிக்கு, 2026 பெப்ரவரி 20 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.
2026-02-10
பாராளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும்பாராளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி செவ்வாயக்கிழமை முதல் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் கூடவுள்ளது. கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் 2026.02.06ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளதுடன், பி.ப 5.00 மணிக்கு தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 18ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள், (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2464/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட தீர்மானம், (203 ஆம் அத்தியாயம்) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.2026 பெப்ரவரி 19ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.2026 பெப்ரவரி 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் “வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்” என்ற தலைப்பிலான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-02-06
ஜோர்ஜியா நாட்டின் (புது டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும்) இலங்கைக்கான தூதுவர் கௌரவ வாக்டாங் ஜாவோஷ்விலி, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை நேற்று (பெப். 05) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக சுற்றுலா, விவசாயம், தொலைத்தொடர்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய இரு தரப்பினரும், 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை சுட்டிக்காட்டினர்.இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை அடைந்துவருவதால், வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் உள்ளன என்று கௌரவ சபாநாயகர் குறிப்பிட்டதுடன், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் விருந்தோம்பல் குறித்து அவர் வலியுறுத்தியதுடன், இலங்கையின் வளமான பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை அனுபவிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோர்ஜிய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த ஜோர்ஜிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மாணவர்கள் ஜோர்ஜியாவில் உயர்கல்வியைத் தொடருவதற்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - ஜோர்ஜியா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பையும் கௌரவ சபாநாயகர் இதன்போது வெளிப்படுத்தினார்.
2026-02-06
இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை: பகிரப்பட்ட நாளைய தினத்திற்கான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (பெப். 05) இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த கொள்கைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறிப்பாக வலுசக்தி பங்குடைமை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஆழமான மற்றும் வளர்ந்து வரும் பங்குடைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தொழிநுட்ப ஆதரவை ஃபெக்டம் (Factum) நிறுவனம் வழங்கியது.இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆரம்ப உரையுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகியது. வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களின் பின்னணியில், நிலையான மற்றும் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய ஒத்துழைப்பை அடைவதற்கு இத்தகைய கலந்துரையாடல்களில் முக்கியத்துவத்தை கௌரவ அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வைத்தியர் சத்யஞ்சல் பாண்டே, இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்திற்கும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிலையான பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய உந்துசக்தியாக கடன் சார்ந்த நிதி வழங்கலை விட, முதலீட்டு அடிப்படையிலான வளர்ச்சி மற்றும் நிதி வழங்கலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.இந்தக் கலந்துரையாடல்கள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டன. முதலாவது அமர்வில் வலுசக்தி பங்குடைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் முன்னாள் உலக வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய நிர்வாக அதிகாரியுமான சிஷிர் பிரியதர்ஷி மற்றும் இலங்கை மின்சார சபையின் நிலைமாற்றம் தொடர்பான பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஆகியோர் இதில் நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர். மின் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் கூட்டு ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் உள்ளிட்ட வலுசக்தி ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. இரண்டாவது அமர்வின் போது, இந்து சமுத்திரத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கடல்சார் ஒத்துழைப்புக் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் துறையில் நிலைபேறான ஒத்துழைப்பு, கடல்சார் மையமாக இலங்கையின் சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான சவால்கள் குறித்து இக்கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் ஆய்வாளர் கலாநிதி சவி வசிஷ்ட் மற்றும் கடல்சார் ஆய்வாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வை.என். ஜயரத்ன ஆகியோர் இது தொடர்பான நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர்.இந்தக் கலந்துரையாடல்களை ஃபெக்டம் (Factum) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒமர் ராஜரத்னம் வழிநடத்தினார். இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிகழ்வை நிறைவுசெய்யும் வகையில், இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான (வைத்தியர்) காவிந்த ஜயவர்தன கருத்துத் தெரிவித்ததுடன், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன மற்றும் இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks