logo

E   |   සි   |  

2026-02-06

செய்தி வகைகள் : செய்திகள் 

'எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடைமை' பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது

இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எதிர்காலத்திற்குத் தயாரான இந்து-லங்கா பங்குடமை: பகிரப்பட்ட நாளைய தினத்திற்கான கலந்துரையாடல்' எனும் தலைப்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (பெப். 05) இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த கொள்கைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறிப்பாக வலுசக்தி பங்குடைமை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஆழமான மற்றும் வளர்ந்து வரும் பங்குடைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தொழிநுட்ப ஆதரவை ஃபெக்டம் (Factum) நிறுவனம் வழங்கியது.

இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவரும் கௌரவ அமைச்சருமான (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸவின் ஆரம்ப உரையுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகியது. வளர்ந்து வரும் பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களின் பின்னணியில், நிலையான மற்றும் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய ஒத்துழைப்பை அடைவதற்கு இத்தகைய கலந்துரையாடல்களில் முக்கியத்துவத்தை கௌரவ அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். 

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வைத்தியர் சத்யஞ்சல் பாண்டே, இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தமைக்காக இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்திற்கும்  இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிலையான பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய உந்துசக்தியாக கடன் சார்ந்த நிதி வழங்கலை விட, முதலீட்டு அடிப்படையிலான வளர்ச்சி மற்றும் நிதி வழங்கலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடல்கள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டன. முதலாவது அமர்வில் வலுசக்தி  பங்குடைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவரும் முன்னாள் உலக வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய நிர்வாக அதிகாரியுமான சிஷிர் பிரியதர்ஷி மற்றும் இலங்கை மின்சார சபையின் நிலைமாற்றம் தொடர்பான பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஆகியோர் இதில் நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர். மின் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி மற்றும் கூட்டு ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் உள்ளிட்ட வலுசக்தி  ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. 

இரண்டாவது அமர்வின் போது, இந்து சமுத்திரத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கடல்சார் ஒத்துழைப்புக் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் துறையில் நிலைபேறான ஒத்துழைப்பு, கடல்சார் மையமாக இலங்கையின் சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான சவால்கள் குறித்து இக்கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. சிந்தன் ஆராய்ச்சி மன்றத்தின் ஆய்வாளர் கலாநிதி சவி வசிஷ்ட் மற்றும் கடல்சார் ஆய்வாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வை.என். ஜயரத்ன ஆகியோர் இது தொடர்பான நிபுணத்துவக் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்தக் கலந்துரையாடல்களை ஃபெக்டம் (Factum) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒமர் ராஜரத்னம் வழிநடத்தினார். இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிகழ்வை நிறைவுசெய்யும் வகையில், இலங்கை - இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான (வைத்தியர்) காவிந்த ஜயவர்தன கருத்துத் தெரிவித்ததுடன், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன மற்றும் இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks