logo

E   |   සි   |  

2026-02-05

செய்தி வகைகள் : செய்திகள் 

கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் கௌரவ லீ ஹேக் யங், இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (பெப். 03) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். 

கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கௌரவ பாக் கிவாங், கௌரவ சாங் ஜேபாங் மற்றும் கௌரவ ஜங் ஹேக்யுங், தேசிய சட்டமன்றச் செயலகத்தின் ஆசிய-பசிபிக் அலுவல்கள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் செல்வி லீ ஜெயங் மற்றும் கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ  மியோன் லீ ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகளுக்காகவும், அண்மையில் தித்வா  சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட ஆதரவிற்காகவும் கொரிய அரசாங்கத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். கல்வி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர் வள அபிவிருத்தி ஆகிய துறைகளில், குறிப்பாக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) ஊடாக கொரியக் குடியரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில்  கௌரவ சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார். இலங்கையின் அரச துறைக்காக வழங்கப்பட்ட திறன் விருத்தித் திட்டங்களுக்காகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார நிலை தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட கௌரவ சபாநாயகர், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன், எதிர்காலத்தில் கொரியக் குடியரசில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் பிரதி சபாநாயகர் கௌரவ லீ ஹேக் யங், தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக கௌரவ சபாநாயகருக்குத் தனது நன்றியைத்  தெரிவித்ததுடன், இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். இலங்கை - கொரியா இராஜதந்திர உறவுகள் அடுத்த ஆண்டில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மை மற்றும் அபிவிருத்திக்காக மேலும்  பரந்த அளவிலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொரிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் விசா வசதிகளை வழங்குதல், வலுசக்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் கொரிய நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற மட்டத்திலான மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. 

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, தூதுக்குழுவினர் பாராளுமன்றத்தை பார்வையிட்டதுடன், பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். அத்துடன் பிரமுகர்களுக்கான கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வையும் பார்வையிட்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.


2026-08-21

கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.


2026-08-20

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


2026-08-20

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் இன்று (ஆக. 20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டத்தின் கீழ், இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்காக, பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தம்) சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks