பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-02-03
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட சமூகத்தினரின் உரிமைகள், உள்ளடக்கிய தன்மை மற்றும் தேசிய அபிவிருத்திக்கான அவர்களின் பங்களிப்பு குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்திற்கும் (AKASA) இடையில் கடந்த ஜன. 22 ஆம் திகதி பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் தலைவர் செல்வி என்.ஜி. கமலாவதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் பணிகளும், தற்போது இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இயலாமையுள்ள சமூகத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமைகள் மற்றும் சவால்கள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.
பொது இடங்களுக்குச் செல்வதற்கான வசதிகள் இல்லாமை மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சில வசதிகள் தரமானதாக இல்லாமை, போக்குவரத்துப் பிரச்சினைகள், சில வங்கிகள் மூலம் கணக்கொன்றைத் தொடங்கக்கூட முடியாமை உள்ளிட்ட சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான ஆலோசனைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இயலாமையுள்ள சமூகத்தினரை அனுதாபத்துடன் நோக்குவதை விடுத்து, அவர்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தினர்.
வரலாற்றில் முதன் முறையாக இயலாமையுள்ள நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்க முடிந்தமை ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் இங்கு குறிப்பிட்டார். இயலாமையுள்ள பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகத்தினருக்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு இயலாமையுள்ள பெண்களின் சங்கத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் அனுசரணையுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த ஆரம்பகட்ட விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-02-06
சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் நேற்று (பெப். 05) கோரிக்கை விடுத்துள்ளது.அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் திகழ்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் கொண்ட ஒரு நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக, அவர்கள் பாராளுமன்ற சபைக்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும்" பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின்" ஒரு பகுதியாக ஆண்டுதோறும் "செம்மஞ்சள் தினம்" போன்ற அடையாள நிகழ்வுகளை நாங்கள் நடத்தியிருந்தாலும், இந்த சபையின் செயல்பாடுகள் மூலம் அவற்றை அர்த்தமுள்ள வகையில் விளக்க முடியவில்லை என்பது தமது அவதானிப்பாகும் என பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சாரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கையளித்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்து வாய்மொழியிலான துஷ்பிரயோகம் இடம்பெறும் போக்கு அண்மைய காலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூற்றுகள் முன்னால் உள்ள சவால் வெறுமனே தனிநபர்களை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக மக்களின் இறையாண்மை மற்றும் பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசியலில் பங்கேற்கவும் உள்ள உரிமையை இலக்காகக் கொண்டது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த சமூகத்திலும் அரசியலில் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்பதற்கு பாதகமான முன்னுதாரணமாகவும் அமைகிறது என்றும் ஒன்றியத்தின் கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் ஆண் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய இரு தரப்பினரினதும் நடத்தை அல்லது கூற்றுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பரிந்துரையாகும். நிலையியற் கட்டளைகளின் கீழ் "பாராளுமன்றத்தில் ஒழுக்கம்" பிரிவின் மூலம் இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன்படி, மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில், புதிய நிலையியற் கட்டளையைச் சேர்த்து நிலையியற் கட்டளைகளைத் திருத்துமாறு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சந்தர்ப்பத்தில் பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
2026-01-30
தித்வா சூறாவளியினால் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் 2026.01.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது, தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என அந்தந்த அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளிடம் குழுவின் தலைவர் வினவினார். அதற்கமைய, ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாகக் குழுவிற்குச் சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளும் தமது நிறுவனங்கள் வசமுள்ள தரவுகளைக் குழுவில் சமர்ப்பித்தனர்.தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்தந்தச் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் அந்த இழப்பீடுகளைக் கணக்கிடும் முறை குறித்துக் குழுவின் தலைவர் வினவினார். அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இழப்பீடு வழங்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக அந்தத் தகவல்களைச் சமர்ப்பிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதன்போது, இழப்பீடு வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையைத் தயாரிப்பது முக்கியம் எனச் சுட்டிக்காட்டிய குழு, இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியது. அத்துடன், தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்தந்த அமைச்சுகளினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.இந்தச் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, ரொஷான் அக்மீமன, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் உபுல் கித்சிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-29
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2026.01.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் உள்நாட்டு வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.இளைஞர் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தயாரிக்க உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்திற்குரிய அளவுகோல்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் உள்நாட்டு வங்கிகள் மூலம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளைத் தொழில்முயற்சியாண்மை துறையில் இணைத்துக் கொள்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்த உப குழுக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்க மாதுகொட, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் சுஜீவ திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-29
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோரின் பங்குபற்றலுடன் 2026.01.27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பல்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது துறைசார்ந்த பிரச்சினைகள் குறித்துக் குழுவிற்கு விளக்கமளித்தனர். இதன்போது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு நீண்டகால தேசியக் கொள்கை இல்லாததால் தமது கைத்தொழில் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சுட்டிக்காட்டிய அவர்கள், வலுவான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். அத்துடன், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தற்போதுள்ள ஒழுங்குமுறைகளை தளர்த்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிகளை மீளாய்வு செய்தல், வருமான வரிக்கு பாதுகாப்பான துறைமுக விதிகளை அறிமுகப்படுத்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான சேர்பெருமதி வரி (VAT) சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், முறைசாரா வகையில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமது கைத்தொழிலை மேம்படுத்த முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், இரத்தினக்கல் அகழ்வின் போது ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்காமை மற்றும் தற்போதுள்ள அகழ்வு நிலங்கள் குறைந்து வருவதால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகள் தொடர்பிலும் அந்தத் தொழிற்துறையினர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், தாராளமயமாக்கல் (வரி மற்றும் பௌதீக), நிர்வாகம் மற்றும் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கொள்கை விடயங்கள் போன்ற பிரதான துறைகள் தொடர்பில் தொழித்துறையினுள் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் காண முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த விடயங்களை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து விரிவான கலந்துரையாடல் ஆவணமொன்றைத் தயாரித்து, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் வினைத்திறனான தொடர் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகக் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks