பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2026-01-14
செய்தி வகைகள் : குழு செய்திகள்
புதிய மூன்று தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் அமைச்சின் செயலாளர் ஒருவரின் நியமனத்திற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. உயர்பதவிகள் பற்றிய குழு கடந்த 09ஆம் திகதி கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய, மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தர்ஷன மகேந்திர பெரேரா அவர்களின் நியமனத்திற்கும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தசநாயக்க முதியன்சலாகே சுமித் பிரியந்த தசநாயக்க அவர்களை நியமிப்பதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், அவுஸ்திரியா குடியரசிற்கான இலங்கைத் தூதுவரும், நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாக தயானி மென்டிஸ் அவர்களை நியமிப்பதற்கும், ரொமேனியாவுக்கான இலங்கைத் தூதுவராக சமந்த பிரியதர்ஷன வீரசிங்க பத்திரன அவர்களின் நியமனத்திற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
அதேநேரம், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடவலவ அவர்களின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
2026-01-14
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக அவர்களின் தலைமையில் கடந்த ஜன. 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆள்கடலில் அபாயகரமான அவுடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.இந்த இரண்டு சட்டமூலங்கள் குறித்தும் நீண்டநேரம் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், குழு உறுப்பினர்கள் இச்சட்டமூலங்களில் சேர்க்கப்பட வேண்டிய பல திருத்தங்களை முன்மொழிந்தனர். இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய, எதிர்காலத்தில் குழு கூடி இந்த விடயத்தை மீண்டும் மதிப்பாய்வு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.அதேநேரம், அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் அறிக்கை தாமதமைடைவது, eZ-cash மற்றும் mCash ஆகியன போதைப்பொருள் கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்படுவது குறித்து குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், இவை தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி பெரேரா, (ஜனாதிபதி சட்டத்தரணி) பைசர் முஸ்தபா, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க மற்றும் சந்தன சூரியஆராச்சி, (மருத்துவர்) செல்லத்தம்பி திலகநாதன், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-13
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நலன்புரி மற்றும் வலுவூட்டல் திட்டங்கள் உள்ளிட்ட சகல நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் சுயாதீன மதிப்பாய்வை மேற்கொள்ளவும் – அரசாங்க நிதி பற்றிய குழு அறிவுறுத்தல்அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை மிகவும் வினைத்திறன் மிக்கதாக்குவதற்கு தற்பொழுது காணப்படும் அளவுகோல்களைத் திருத்துமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவினால், நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.தற்பொழுது அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்யப் பயன்படும் 22 அளவுகோல்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றியிருப்பதால், எதிர்காலத்தில் அஸ்வெசும பயனாளிகளின் தெரிவைப் புதிய அளவுகோல்களுக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 08) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. அன்றையதினம் 2025.12.15ஆம் திகதி 2467/03 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2002ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 09வது பிரிவின் கீழ் அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தை நீடிப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நன்மைகளைப் பெற்ற நிலைமாறும் நிலையில் உள்ளவர்கள், பாதிப்புக்கு உட்படக்கூடியவர்கள், வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் போன்ற பிரிவுகளில் நிலைமாறும் நிலையில் உள்ளவர்களுக்கான சலுகைகள் 2025 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளன. இதற்கமைய அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய திருத்தத்தின் ஊடாக பாதிப்புக்கு உட்படக்கூடியவர்கள், வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய பிரிவுகளுக்கு மாத்திரம் இத்திட்டம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் எதிர்பாராத பேரிடர் சூழ்நிலையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூகப் பொருளாதார பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு 2025.12.31ஆம் திகதியுடன் முடிவடையவிருக்கும் பாதிப்புக்கு உட்படக்கூடிய பிரிவுக்கான கொடுப்பனவு 2026ஆம் ஆண்டு யூன் மாதம் வரையில் நீடிப்பதற்கும் முன்மொழியப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இயலாமையுடைய நபர்கள், சிறுநீரக நோய்க்கான உதவிகளைப் பெறுபவர்கள் மற்றும் முதியோருக்கான உதவி பெறுகின்றவர்களுக்கான சலுகைகள் மாற்றமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து அத்திணைக்களத்தின் அதிகாரிகளிடம் குழு கேட்டறிந்தது. இருபது இலட்சம் குடும்பங்களைப் படிப்படியாக வலுவூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கான சம்பளங்களை வழங்குதல் உள்ளிட்ட நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வருடாந்தம் செலவாகும் மொத்தத் தொகை குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. அண்ணளவாக வருடாந்தம் 22 பில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதாகவும், 2026ஆம் ஆண்டில் சம்பளம் மற்றும் வலுவூட்டல் நடவடிக்கைகளுக்காக 27.38 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.இங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வலுவூட்டல் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் பெருந்தொகையான நிதி சம்பளம் உள்ளிட்ட செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேள்வியெழுப்பினார். அத்துடன், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் திட்டங்கள் குறித்த ஏதேனும் பின்தொடர்தல்கள் அல்லது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்றும் குழுவின் தலைவர் வினவினார். எனினும், அவ்வாறான மதிப்பாய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வலுவூட்டல் திட்டங்கள் உள்ளிட்ட சகல நலன்புரித் திட்டங்களையும் சுயாதீன மதிப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான நிஷாந்த ஜயவீர, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பளிஹேன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, திலின சமரக்கோன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-13
கிடைத்த நஷ்டஈட்டுத் தொகை எஞ்சியிருந்தால் சேதத்துடன் நேரடியாக தொடர்புடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்த குழு பரிந்துரைஎக்ஸ்பிரஸ் பேர்ள் (X – Press Pearl) கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பில் கிடைத்த நஷ்டஈட்டுத் தொகையை மீனவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது மற்றும் கரையோர அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.அதன்படி, இதுவரை பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகை, மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட தொகை, கரையோரப் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் தற்போது மீதமுள்ள தொகை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் குழு அறிவுறுத்தியது.சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 08) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இந்தக் கப்பலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் முன்னேற்றம் தொடர்பிலும் குழுவில் ஆஜராகியிருந்தவர்களிடம் வினவப்பட்டது. அத்துடன், இலங்கையில் வழக்குத் தாக்கல்செய்தமைக்கு மேலதிகமாக சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நடைமுறை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இந்த விடயம் குறித்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்றை எதிர்காலத்தில் ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித்.பி பெரேரா, ரொஷான் அக்மீமன, எம்.ஏ.சி.எஸ். சதுர கங்கானி, சுசந்த குமார நவரத்ன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, (சட்டத்தரணி) பாக்ய சிறி ஹேரத் மற்றும் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுற்றாடல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சுற்றாடல் சுற்றாடல் அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அதிகாரசபை போன்றவற்றின் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-01-13
உத்தேச தேசிய மின்சாரக் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்களின் தலைமையில் கடந்த ஜன. 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.தேசிய வலுசக்திக் கொள்கையின் ஓர் அங்கமாகத் தேசிய மின்சாரக் கொள்கைக்கான வரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் மற்றும் ஏனைய பங்காளர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் தேசிய மின்சாரக் கொள்கையைத் தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். செலவுச் சிக்கனமான விலையில், வினைத்திறனான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கொள்கை வரைபைத் தயாரித்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். விரிவான கலந்துரையாடல்களுடன் இந்தக் கொள்கைத் தயாரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட குழுவின் தலைவர், மின்சாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட தனியார் துறையினர் உள்ளிட்டவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். உத்தேச மின்சாரக் கொள்கை வரைபில் முன்மொழியப்பட்டுள்ள கட்டணக் கொள்கை உள்ளிட்ட விடயங்கள் இக்குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் இது பற்றிய விளக்கங்களை வழங்கினர். இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா, அசித நிரோஷன எகொட விதான, ஜகத் விதான, தனுஷ்க ரங்கநாத், ரவீந்திர பண்டார, (சட்டத்தரணி) கீதா ஹேரத், சாந்த பத்மகுமார சுபசிங்க, மஞ்சுள சுரவீர ஆராச்சி மற்றும் குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks