logo

02

E   |   සි   |  

2026-01-08

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2025.01.08 ஆம் திகதி அங்கீகரிக்கப்படவுள்ள (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2452/40 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம், ‘வீதியொன்றில் மோட்டார் வாகனமொன்றைச் செலுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் எவரேனும் ஒருவர் போதைப்பொருள் பாவித்துள்ளதாகப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நியாயமான சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அந்த நபரை மேலதிகப் பரிசோதனைக்காக அரசாங்க வைத்திய அதிகாரி ஒருவரிடமோ அல்லது வைத்தியசாலையினால் இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு அதிகாரியிடமோ முன்னிலைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியின் மூலம், ‘அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஒவ்வொருவரும் பாதுகாப்பு ஆசனப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், நாட்டில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இந்தக்கூட்டத்தின் போது குழுவில் விளக்கமளித்தனர். அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 1,481 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட 287 வீதிப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை மீண்டும் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 86 பில்லியன் ரூபா என அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அதேபோன்று, புகையிரதத் திணைக்களத்திற்கு சுமார் 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் 63 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கையின் வீதிக் கட்டமைப்பில் அந்தந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, https://road-lk.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட சேதங்கள் குறித்துத் தெரியப்படுத்தும் வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

இந்தக் கூட்டத்தில், குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் ஏனைய கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-07

கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்த அரசாங்க நிதி பற்றிய குழு, கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளத்தை அங்கீகரித்தது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில், பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், திலின சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டிஆராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் அண்மையில் (ஆக. 04) பாராளுமன்றத்தில்  கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் நாயகத்தின் சம்பளம் தொடர்பான பிரேரணை குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இதன்போது, கணக்காய்வாளர் நாயகத்தின் பொறுப்புகள், அரச நிதி மேற்பார்வை மற்றும் கணக்காய்வுத் துறையின் சுயாதீனத் தன்மை உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, சம்பள மட்டம் தொடர்பாக குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது கருத்துகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.மேலும், அரசியலமைப்பின் 170 ஆம் உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் நாயகம் ஒரு அரசாங்க ஊழியர் அல்ல என்பதையும், நடைமுறையில் உள்ள அரசாங்க சம்பள அளவுகோலுக்கு வெளியே இப்பதவிக்கான சம்பளத்தை விசேடமாக பரிசீலிக்க முடியும் என்பதையும் குழு சுட்டிக்காட்டியது.முன்மொழியப்பட்ட சம்பளத் தொகை, முன்னர் பதவி வகித்த கணக்காய்வாளர் நாயகங்களின் சம்பளங்களையும் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னர், சம்பளங்கள் மற்றும் பணியாளர் ஆணைக்குழுவே இத்தகைய சம்பளங்களை நிர்ணயித்து வந்த போதிலும், தற்போது அத்தகைய ஆணைக்குழு இல்லையெனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.கணக்காய்வாளர் நாயகத்திற்கான முன்மொழியப்பட்ட சம்பள மட்டத்தை குழு அங்கீகரித்திருந்தாலும், அப்பதவிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்தச் சம்பளம் மேலும் உயர்ந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்ற கருத்தை குழுத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்வைத்தனர்.அதன்படி, எதிர்காலத்தில் இச்சம்பள மட்டம் தொடர்பாக மேலும் கவனம் செலுத்தி தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குழுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தரமானதும் சுயாதீனமானதுமான சம்பள மற்றும் பணியாளர் ஆணைக்குழுவை நிறுவுவதற்கான யோசனையையும் குழுத் தலைவர் முன்வைத்தார்.


2026-08-07

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கிடைத்துள்ள 31 முன்மொழிவுகளை ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழு நிபுணர் குழுவை நியமித்தது

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கிடைத்துள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் இதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுக்களின் அறிக்கைகளையும் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளது.கௌரவ பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குறித்த விசேட குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.2004, 2007 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பாராளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகள் மற்றும் தனிநபர்கள், அமைப்புகள் ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைக்காக கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல், சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துதல், மின்னணு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துதல், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.விசேட குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, கிடைத்துள்ள 31 முன்மொழிவுகளையும் முந்தைய பாராளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நடைமுறைக்கு ஏற்ற பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையொன்றைத் தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பரிந்துரைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க குழு தீர்மானித்தது.இக்கூட்டத்தில், குழு உறுப்பினரான அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ருவந்திலக ஜயக்கொடி மற்றும் கதிரவேலு சண்முகம் குகதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-08-07

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் கம்பஹா மாவட்ட இளைஞர்களுக்கு ஓகஸ்ட் 16ஆம் திகதி செயலமர்வு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் செய்யப்படும் பிராந்திய மட்ட செயலமர்வு தொடரின் முதலாவது நிகழ்வு, கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு ஆகஸ்ட் 16ஆம் திகதி நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக குறித்த ஒன்றியத்தின் இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்  அவர்கள் தெரிவித்தார். திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் கௌரவ உறுப்பினரின் தலைமையில் அண்மையில் (5) நடைபெற்றபோது, இச்செயலமர்வுக்கான ஏற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த செயலமர்வு தொடர் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.இந்த செயலமர்வுகளின் ஊடாக, இளைஞர் சமூகத்திற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள், சட்டவாக்க செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றத்தின் எண்ணக்கரு தொடர்பில் விழிப்புணர்வூட்டவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் இச்செயலமர்வு தொடருக்கான அபிவிருத்தி பங்காளராக அனுசரணை வழங்கும் CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இந்த செயலமர்வில் பங்கேற்க விரும்பும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 18 – 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் இங்கே தரப்பட்டுள்ள https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


2026-08-05

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது அதிகாரிகளின் மரியாதையற்ற நடத்தை தொடர்பில் விளக்கம்

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய செயலாற்றுகை ஆகியவற்றை ஆராய்வதற்காக 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, குறித்த அதிகாரசபையின் பணிப்பாளர் சபையின் இரண்டு உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் கரிசனைகள் எழுந்தன என்பதை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.  பாராளுமன்றக் குழுக்களின் முன் சமூகமளிக்கும் போது பின்பற்ற வேண்டியதாக நிர்ணயிக்கப்பட்ட ஆடை நடைமுறைக்கு இணங்காத வகையிலேயே அதிகாரிகளில் ஒருவர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பதைக் குழு அவதானித்தது. மேலும், தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நடைமுறை மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முரணான வகையில், தவிசாளரின் முன் அனுமதியைப் பெறாமலேயே இரு அதிகாரிகளும் குழுவின் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறினர்.  இச்சம்பவங்களைத் தொடர்ந்து, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கௌரவ தவிசாளரினால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையினையடுத்து, பாராளுமன்றத்தை அவமதித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் இரு அதிகாரிகளும் 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன்னிலையில் ஆஜராகினர். இந்த நடவடிக்கைகளின் போது, அவர்கள் தமது நடத்தைக்காக மனப்பூர்வமான மன்னிப்பைக் கோரினர்.  உரிய பரிசீலனையின் பின்னர், அதிகாரிகள் தமது செயல்களின் தீவிரத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதையும், பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கௌரவம் மற்றும் தாபிக்கப்பட்ட நடைமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துள்ளமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் கவனத்திற்கொண்டு, ஒழுக்கநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவானது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளருடன் இணைந்து அவர்களது மன்னிப்பை ஏற்றுக்கொண்டது.பாராளுமன்றக் குழுக்களின் முன்னிலையில் ஆஜராகும் அனைத்து தனிநபர்களும் மிக உயர்ந்த நடத்தை தரநிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும் நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று இந்தக் குழு வலியுறுத்த விரும்புகிறது.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுஇலங்கை பாராளுமன்றம்






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks