பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-12-09
செய்தி வகைகள் : குழு செய்திகள்
2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2025 செப்டெம்பர் 04ஆம் திகதி 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் மற்றும் 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 2025 டிசம்பர் 03ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு கூடியது.
இக்கூட்டம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் ஒழுங்குவிதி குறித்து கலந்துரையாடிய குழு, மருந்துகளைப் பதிவுசெய்யும் செயற்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் தெளிவுத் தன்மை என்பனவற்றை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனையடுத்து, 2015ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் 2452/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
அத்துடன், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டம் குறித்தும் குழு கவனத்தில் எடுத்துக்கொண்டது. இத்திட்டத்திற்கு அமைய 2026ஆம் ஆண்டில் 3,508 கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது, 3,484 நிதிக் கணக்காய்வுகள், 11 செயல்திறன் கணக்காய்வுகள், 1 சுற்றாடல் கணக்காய்வு, 12 விசேட கணக்காய்வுகளை உள்ளடக்கியுள்ளது.
சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி கூட்டுறவுகள் என்பன தொடர்பான கணக்காய்வுகளும் 2026ஆம் ஆண்டு முதல் கணக்காய்வாளர் நாயகத்தின் விடயதானத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுகளை மேற்கொள்வதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனரா என்பது குறித்தும் குழு கரிசனை வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த பதில் கணக்காய்வாளர் நாயகம், தற்சமயம் இருக்கும் பணியாளர் எண்ணிக்கையைவிட 10%–15% பணியாளர்களுக்கான தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். பிராந்திய அலுவலகங்கள் மூலம் முன்னோடி கணக்காய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை பெப்ரவரி மாத இறுதிவரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அதன் பிறகு ஆட்சேர்ப்பு மூலமாகவோ அல்லது வெளியிலிருந்து பணிக்கு அமர்த்துவதன் ஊடாகவோ பணியாளர்களுக்கான தேவை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.
மேலும், வருடாந்த வேலைத்திட்டம் கணக்காய்வுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும், அதன் படி எந்தவொரு மறுஆய்வு அல்லது பரிந்துரையும் சபாநாயகர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, கணக்காய்வாளர் நாயகத்தின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு சமுர்த்தி தொடர்பான கணக்காய்வுப் பணிகளுக்கு வெளியாட்களுக்கு வழங்குவதை ஆதரிப்பதென்ற கருத்தை சபாநாயகரிடம் முன்வைப்பதற்கும் குழு இணங்கியது. இதற்கமைய, முன்னோடித் திட்டத்தை செயற்படுத்தி, 2026 பெப்ரவரி இறுதியில் அது பற்றிய அறிக்கையொன்றை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் 121(5)(ii) நிலையியற் கட்டளையின் கீழ் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அமைச்சுக்களுக்கான முன்மொழிவுகள் மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிக் குழுவின் கண்காணிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அவசரகால அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் சீர்குலைந்த வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஒதுக்கீடுகளை குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் வழங்குவதற்கான தீர்மானம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 05ஆம் திகதி விசேட கூட்டமொன்றைக் கூட்டியிருந்தது.
2025 சனவாி மாதம் 01 ஆம் திகதியில் தொடங்கி 2025 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியில் நிறைவடைகின்ற நிதியாண்டின் பயன்பாட்டிற்காக, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திரட்டு நிதியிலிருந்து அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வேறு ஏதேனும் நிதியத்திலிருந்து அல்லது நிதியிலிருந்து அல்லது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தற்றுணிவின் பிரகாரம் அரசாங்கத்தால் பெறப்பட்ட ஏதேனும் தொகையிலிருந்து ஐம்பதாயிரம் மில்லியன் ரூபாவினை (ரூபா 50,000,000,000) விஞ்சாத மேலதிக ஒரு தொகை செலுத்தப்பட வேண்டுமென்றும், அத்தகைய தொகை செலவிடப்படுமென்றும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சேர் பெறுமதி சட்டத்தின் 71வது பிரிவின் கீழான ஒழுங்குவிதி பற்றியும் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2026-01-19
இயலாமையுடய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார்.பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா அவர்களின் தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-01-19
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் அதிபர்களுடைய இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாடசாலைகளில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பில் ஆராயும் உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த உபகுழு கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.கல்வி தொடர்பான ஐந்து தொழில்முறை சேவைகளையும் தகுதிகள் மற்றும் பதவி நிலைகளுக்கு ஏற்ப நிலைப்படுத்தல் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வெற்றிடங்களின் கணிப்பு ஆகியவற்றைக் காண்பிக்கும் புதிய டிஜிட்டல் தரவுத்தளத்தை தயாரித்தல் போன்றவை தொடர்பில் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டன. அதிபர் சேவையில் முதல் தர அதிபர் பதவிகளில் உள்ள சகல அதிகாரிகளும் அதிபர் பதவிகளை மாத்திரம் வகித்தல், ஆறு வருட சேவையைப் பூர்த்தி செய்ததும் இடமாற்றங்களுக்கு உட்படுத்தல் போன்ற பல முன்மொழிவு குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இதற்கமைய, இந்த விடயங்கள் தொடர்பான அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் பின்னரே குறித்த விடயம் தொடர்பான இறுதிப் பரிந்துரைகள் தயாரிக்கப்படும் என குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.உபகுழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் சுதத் வசந்த.த சில்வா ஆகியோரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-01-16
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை அதிபர் சேவையில் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இணைப் பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் (தரம் 1) ஆகியோரிடையிலிருந்து துறைத் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்கும் துறைச் சபையை இயலச் செய்வித்தல், துறைத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் துறைத் தலைவர் ஒருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கு பேரவையை இயலச் செய்வித்தல் மற்றும் துறையொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலம் தொடர்பில் மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் அமைந்திருப்பதாக இங்கு கலந்துரையாடப்பட்டது.குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் கடந்த ஜன. 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரை நியமிக்கும் போது பேரவையினால் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறையைக் குறித்துரைத்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரினதும் பதவிக்காலம் முடிவடைய முன்னர் கற்கைப் பகுதியின் தலைவரொருவரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்குப் பேரவையை இயலச் செய்வித்தல், கற்கைப் பகுதியொன்றின் தலைவரொருவரின் பதவிக்காலங்கள் தொடர்பில் ஏற்புடையற்பாலனவான மட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வதும் இந்தச் சட்டமூலத்தின் சட்டப் பயனாக அமையுமென அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் குறித்த சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதி வழங்கியது.அத்துடன், இலங்கை அதிபர் சேவைக்கான ஆட்சேர்ப்புக் குறித்தும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 2019ஆம் ஆண்டில் 1918 வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக இங்கு அதிகாரிகள் குறிப்பிட்டனர். 2019ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றியவர்களிலிருந்து 2022ஆம் ஆண்டு 155 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருப்பதுடன், 2023ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய 4,672 பேரைக்கொண்ட தொகுதியினரும் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், 2019ஆம் ஆண்டு பிரிவில் தெரிவாகி அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்படாத சிலர் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.எனினும், பல்வேறு காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சையின் அடிப்படையில் தொடர்ச்சியாக ஆட்சேர்ப்புக்கள் இடம்பெற்றமையாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக குழு சுட்டிக்காட்டியது. ஏன் வருடாந்தம் போட்டிப் பரீட்சை நடத்தப்படவில்லையென்றும், புதிதாக ஏன் பரீட்சை நடத்தப்படவில்லையென்றும் குழு கேள்வியெழுப்பியது.இக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ்.இராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சுகத் வசந்த.த சில்வா, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, சுஜீவ திசாநாயக்க, சானக மாதுகொட, சஞ்ஜீவ ரணசிங்க, துரைராசா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-14
புதிய மூன்று தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் அமைச்சின் செயலாளர் ஒருவரின் நியமனத்திற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. உயர்பதவிகள் பற்றிய குழு கடந்த 09ஆம் திகதி கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தர்ஷன மகேந்திர பெரேரா அவர்களின் நியமனத்திற்கும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தசநாயக்க முதியன்சலாகே சுமித் பிரியந்த தசநாயக்க அவர்களை நியமிப்பதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.மேலும், அவுஸ்திரியா குடியரசிற்கான இலங்கைத் தூதுவரும், நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாக தயானி மென்டிஸ் அவர்களை நியமிப்பதற்கும், ரொமேனியாவுக்கான இலங்கைத் தூதுவராக சமந்த பிரியதர்ஷன வீரசிங்க பத்திரன அவர்களின் நியமனத்திற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.அதேநேரம், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடவலவ அவர்களின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks