பார்க்க

E   |   සි   |  

2026-05-21

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஐந்து செயலாற்றுகை அறிக்கைகளுக்கு அங்கீகாரம்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவல் பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் ஐந்து செயலாற்று அறிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 

இதற்கு அமைய 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி செயலகத்தின் செயலாற்று அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடல் இடம்பெற்று அங்கீகாரம் அளிக்கப்பட்டது, அத்துடன், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான பிரதமர் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் குழுவில் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

அத்துடன், பதிவுசெய்யப்பட்ட நில அளவையாளர்களினால் தயாரிக்கப்படும் வரைபடங்களைப் பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் 2002ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க நில அளவைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா சமர்ப்பித்த முன்மொழிவு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, முஜிபுர் ரஹுமான், (ஜனாதிபதி சட்டத்தரணி) பைஸர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் மேஜர் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-05-21

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு உப குழு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் அவர்கள் தலைமையில் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து கலந்துரையாடுவதற்கு சுற்றூடல் அமைச்சு, வலுசக்தி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இதில் பங்கெடுத்திருந்தனர். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்தும், அதற்குப் பொறுப்பான தரப்பினர் மற்றும் நிறுவனங்களால் ஏதேனும் குறைபாடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பின்னரே குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக உப குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.இலங்கையில் உள்ள ஜேர்மன், ஜப்பான் மற்றும் சீன தூதுரகங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் போன்றவற்றுடன் கலந்துரையாடி அந்தந்த நாடுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ள சூழல்களில் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்வது தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சித் திட்டமொன்றை வழங்குவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கவிருப்பதாக குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.


2026-05-19

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் ரூ. 10,000 கொடுப்பனவு – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலையீட்டுடன் எடுக்கப்பட்ட முடிவு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர்.குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது.சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனால் சமூகத்தில் எழும் பிரச்சினைகளில் தலையிடுமாறு இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளருக்கு (உள்நாட்டு விவகாரங்கள்) வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதற்கு அமைய வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்ற பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலராக இருந்தாலே இந்தக் கொடுப்பனவு ஏற்புடையது என்றும், இதனை நடைமுறைப்படுத்த முதற்கட்டமாக ரூ.10 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அதேநேரம், இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இதன் பின்னர் மாவட்ட செயலகங்களின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பகல் நேர பராமரிப்பு நிலையங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவும் சாதகமான இந்தப் பணி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இங்கு தெரிவித்தார்.இதற்கு முன்னர் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய பெண் பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதுவரையில் 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதற்கும், 2600 பெண் கான்ஸ்டபில்களை இணைத்துக் கொள்வதற்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது. அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு சமூக ஊடகங்களில் பிரசார நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ லங்கா பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். தமிழ் மொழியில் கல்வி பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையைப் பூர்த்தி செய்த மாணவ மாணவியர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது பற்றி விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களில் காணப்படும் இந்நாட்டு சிறுவர்கள் பற்றிய சகல தகவல்களையும் சேகரித்து தேசிய தகவல் கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தலையீட்டுடன் தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணி இடம்பெற்று வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீதியை விரைவில் நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் மற்றும் இதன் பின்னரான சூழ்நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்கு சகல நிறுவனங்களும் உடனடியாக ஒன்றிணைந்த முறையில் செயற்பட வேண்டிதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. இதற்கு அமைய, பிரதேச செயகங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, ஸ்ரீலங்கா பொலிஸ் உள்ளிட்ட சகல நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை ஒரு குழுவாக ஒன்றிணைத்து செயற்படுத்த வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அல்லது ஏனைய சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது அவசர நடவடிக்கை குறித்து  விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். அத்துடன், வட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரிவிக்க முடியும் என்றும், கூடிய விரைவில் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல், சகல முன்பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவை இலவசமாக வழங்குதல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பங்களிப்புடனான  ஓய்வூதியம் வழங்குவது ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளை அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.அரசாங்க சேவையில் உள்ள பெண்களின் இடமாற்றங்ளின் போது காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள், முன்பள்ளி மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.அதேபோல, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததுடன், இது தொடர்பில் குழு குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ரி. வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-05-15

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தூதுக் குழுவினரின் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தினால் இரு தரப்பு மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்பு வலுப்பெற்றது

கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையிலான இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தூதுக் குழுவினர் மே 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பையேற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண்களை வலுவூட்டுவது, பாராளுமன்ற விவகாரங்கள், சமூக அபிவிருத்தி மற்றும் பாலின உணர்வுடனான ஆளுகை போன்ற விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால பாராளுமன்ற, கலாசார மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும். இந்திய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய இலங்கைத் தூதுக் குழுவினர், லோக் சபாவின் சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.இந்தியாவின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இலங்கைத் தூதுக் குழுவினர் இந்திய மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கௌரவ அமைச்சர் அன்னபூர்ணா தேவியுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இச்சந்திப்பில் பெண்களை வலுவூட்டும் திட்டங்கள், சிறுவர் நலன்புரி முயற்சிகள், பாலின உணர்திறன் மிக்க கொள்கைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள், சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.இலங்கைத் தூதுக் குழுவினர் டில்லி பொலிஸ் கமிஷனரைச் சந்தித்து கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தனர். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பது, அவை தொடர்பில் பின்பற்றக் கூடிய வினைத்திறனான மூலோபாயத் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக ரீதியான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பெண்களைத் தலைமையாகக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் மற்றும் இந்திய வணிக மற்றும் கைத்தொழில் பெண்கள் அமைப்பின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளையும் இத்தூதுக் குழுவினர் சந்தித்தனர்.இந்திய பாராளுமன்றத்தின் ஜனநாயகத்துக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விரிவான நிகழ்ச்சிகளிலும் இத்தூதுக் குழுவினர் பங்குபற்றுகின்றனர். இந்திய பாராளுமன்ற முறைமை, குழு முறைமை, பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இதில் ஆராயப்படுவதுடன், பெண்களை முன்னுரிமையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்களை இந்தியா கையாழும் முறைமைகள் பற்றியும் கலந்துரையாடப்படும்.புதுடில்லி  முதலமைச்சருடனான சந்திப்பு, தாஜ் மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை உள்ளிட்ட கலாசார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கான விஜயம் என்பவற்றிலும் இவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.பாலின சமத்துவம், பெண்களை வலுவூட்டல், சமூக ஒருங்கிணைப்பை முன்னெடுக்க பாராளுமன்ற ஈடுபாடு மற்றும் பொதுமக்கள் தொடர்பு என்பவற்றின் மூலம் நடவடிக்கைகளை எடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முக்கிய பங்காற்றி வருகின்றது.உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பெண் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) சமிந்திரானி கிரியல்ல, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சதுரி கங்கானி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, (சட்டத்தரணி) (சட்டத்தரணி) அனுஷ்கா திலகரத்ன, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) கீதா ஹேரத் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.இக்குழுவில் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர, உதவி பிரதான உத்தியோகத்தர் ஹஷ்மி பெர்னாந்து, சிரேஷ்ட பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சமிலா நிசங்க, சிரேஷ்ட உதவி பாராளுமன்ற ஒழுங்கு மரபு உத்தியோகத்தர் ரணில் நாணயக்கார ஆகியோரும் இணைந்துள்ளனர்.


2026-05-15

அரசுடமை நிறுவனங்களின் (SOEs) உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்களுக்கு கோப் குழுவினால் செயலமர்வு

அரசுடமை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உள்ளகக் கணக்காய்வு நடைமுறை அவசியமானது – அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய கோப் குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தெரிவிப்புஅரசுடமை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கு உள்ளகக் கணக்காய்வு நடைமுறைகள் அவசியம் என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தெரிவித்தார். அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறை தலைவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார். அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித்துறைத் தலைவர்களை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அனுசரணையுடன் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் ஸ்ரீ ஜயவரத்தனபுர கோட்டே மொனாக் இப்பீரியல் ஹோட்டலில்  இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இங்கு கருத்துத் தெரிவித்த கோப் குழுவின் தலைவர், அரசுடமை நிறுவனத்துறையில் காணப்படும் ஒழுங்கீனங்களைத் தவிர்ப்பதற்கான தலையீடு அவசியம் என்றும், அரசுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகள் என்ற ரீதியில் உயர்ந்த செயல்திறன் காண்பிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். சகல அரசுடமை நிறுவனங்களின் தலைவர்களையும் வரவழைத்து வெற்றிகரமான செயலமர்வு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நிதி ஒழுக்கம் மற்றும் உள்ளகக் கணக்காய்வு செயன்முறையை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்து நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் நிதித் துறைத் தலைவர்களை அழைத்து விளக்கமளிக்கத் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.அத்துடன், 457 அரசுடமை நிறுவனங்கள் காணப்படுவதால் அனைத்து நிறுவனங்களையும் கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை நடத்துவது நடைமுறைச் சாத்தியம் இல்லையென்பதால்,  அந்நிறுவனங்களின் செயலாற்றுகையைப் பரிசீலனை செய்ய டிஜிட்டல் முறைமையொன்றை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினர்.“அரசாங்க கணக்காய்வு மற்றும் அரசாங்க நிறுவனங்களின் வகிபாகம், பொறுப்பு மற்றும் ஒத்துழைப்பு” தொடர்பில் கணக்காய்வாளர் தலைமையதிபதி சமுத்திகா ஜயரத்ன இங்கு விளக்கமளித்தார். அரசுடமை நிறுவனங்களின் நிதியங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதால் அவை தொடர்பில் உரிய நிதி ஒழுக்கம் மற்றும் உள்ளகக் கணக்காய்வுகளை மேற்கொண்டு அரசாங்கத்தின் கணக்காய்வுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி.குறும்பலாப்பிட்டிய, “பொது மக்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த உள்ளகக் கணக்காய்வின் வகிபாகம்” எனும் தலைப்பில் விளக்கமளித்தார். கோப் மற்றும் கோபா குழுக்களின் ஆலோசகர், முன்னாள் கணக்காய்வாளர் தலைமையதிபதி சரத் மாயாதுன்னே அவர்கள், “பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறுவதில் அரசுடமை நிறுவனங்களின் பங்கு” எனும் தலைப்பில் விளக்க உரை நிகழ்த்தினார். அரசுடமை நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான அவகாசமும் இங்கு வழங்கப்பட்டது. உள்ளக கணக்காய்வாளர் பதவியை குறித்த நிறுவனத்தின் தலைவரின் கீழ் நியமிப்பதற்கு பதிலாக, அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையிடும் சுயாதீன பதவியாக மாற்றுவதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா, 300ற்கும் அதிகமான அரசுடமை நிறுவனங்களின் உள்ளகக் கணக்காய்வாளர்கள் மற்றும் நிதித் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks