logo

E   |   සි   |  

2025-11-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து

  • இயலாமை உடைய நபர்கள் பணியாற்றக் கூடிய வகையில் வேலைத் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் – இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ சுகத் வசந்த.த சில்வா 


இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படவேண்டிய அவசியமில்லை, அவ்வாறு அனுதாபப்படுவது அவர்களை ஒரு விதத்தில் அவமரியாதைப் படுத்துவதுபோன்றாகும். இயலாமை உடைய நபர்கள் தமது கடமைகளைச் சுயமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதையே செய்ய வேண்டியிருப்பதாக கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் கௌரவ பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார்.

இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயலமர்வுத் தொடரில், முதலாவது செயலமர்வு தொழில் அமைச்சில் கடந்த நவ. 20ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், தொழில் அமைச்சு மற்றும் நிறுவனங்களில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, இயலாமை உடைய நபர்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்கள் சமூகமயமாக்கப்படும் வரை, சட்டதிட்டங்கள் மூலம் ஒருங்கிணைப்பை அடைவதற்கு நடவடிக்கை எடுக்க  வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் மாத்திரம் இந்தக் குழுவினருக்குத் தேவையான ஆதரவை வழங்குவது போதுமானதாக இருக்காது என்றும், மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயலாமை உடைய நபர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தனியார் துறையிலும் இயலாமை உடைய நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு உரையாற்றிய இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, இயலாமை உடைய நபர்கள்  வேலைசெய்யக் கூடிய வகையில் பணியிடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார். இதைச் செயல்படுத்த, முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் இயலாமை உடைய நபர்கள் பங்கேற்பதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதன் ஊடாக இயலாமை உடைய நபர்களும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஓர் அங்கமாக இருப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இயலாமை உடைய நபர்கள் ஏனையவர்களைச் சார்ந்தவர்களாக அன்றி,  பொருளாதார செயல்முறைக்குப் பங்களிப்பவர்களாக இருக்கும் நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இயலாமை உடைய நபர்களைக் கொண்ட வளவாளர்களினால் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. மேலும் இந்தச் செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட இயலாமை உடைய நபர்கள் தங்கள் அனுபவங்களையும், தங்கள் பணியிடங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் அனைத்து அமைச்சுக்களையும் இலக்காகக் கொண்டு இதுபோன்ற செயலமர்வுகளை நடத்துவதற்கு இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

இச்செயலமர்வில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் இந்ரக உபேசேகர, இத்திட்டத்தின் அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள், இயலாமை உடைய நபர்களுக்கான அமைப்புக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


2026-08-18

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகள் “Voice to Policy“ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாகக் கையளிப்பு

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் மேற்கொண்டிருந்ததுடன், இதற்கான நிதியுதவியை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) வழங்கியிருந்தது.


2026-08-11

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் நவீனமயப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks