பார்க்க

01

E   |   සි   |  

2025-10-17

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு ரூ. 15,157,031,018 நஷ்டம் - கோப் குழுவில் புலப்பட்டது

  • முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை - கோப் குழு சுட்டிக்காட்டியது 
  • ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதால், அதிகாரிகள் அடிக்கடி மாறுவதனால் நிறுவனத்தின் பொறுப்புக்கூறலில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் - கோப் குழு தெரிவிப்பு 
  • திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்பட்ட பல கொடுப்பனவுகள்
  • நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் முறைமை (ERP system) தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது
  • எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சதொச கட்டியெழுப்பப்பட வேண்டும் - கோப் தலைவர்

 

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக லங்கா சதொசவிற்கு ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டதாக கோப் குழுவில் தெரியவந்தது.

லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்தின் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்திறனை ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 10) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயங்கள் புலப்பட்டன. 

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்காக ரூ. 27,011,980,142 செலவிடப்பட்ட போதிலும், அந்த அரிசி கையிருப்பை விற்பனை செய்ததன் மூலம் ரூ. 11,854,949,124 மாத்திரமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என இதன்போது கோப் குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, உள்நாட்டு அரிசிச் சந்தை நிலைமை, நெல் அறுவடை மற்றும் அரிசிக்கான களஞ்சிய வசதிகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், முறையான கொள்வனவு நடைமுறைகளுக்கு முரணாக அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் சதொச நிறுவனத்திற்கு சுமார் ரூ. 15,157,031,018 நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் குழு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டதா என்று அதிகாரிகளிடம் குழு வினவியபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்கு வழங்கியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், முறையான கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 கட்டட உரிமையாளர்களிடமிருந்து நிறுவனத்திற்குச் சேர வேண்டிய நிதி இன்னும் அறவிடப்படவில்லை என்று கோப் குழு சுட்டிக்காட்டியது. கட்டடங்களை வாடகைக்கு எடுக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, எதிர்காலத்தில் கடைகள் ஆரம்பிக்கும் அனுமானத்தின் பேரில், கட்டடங்கள் இல்லாத வெற்று நிலங்களுக்கு முற்பணம் செலுத்தக்கூடாது என்றாலும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதிவரை 29 ஒப்பந்தங்களின் கீழ், மதிப்பீடு பெறப்படாமல், கட்டட நிர்மாணங்களுக்காக ரூ. 34,234,996 முற்பணமாகச் செலுத்தப்பட்டுள்ளது என்று குழு சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களில் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கட்டுமானங்களை மேற்கொள்ளாத 18 நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக ரூ. 27,435,000 அறவிடுவதற்காக நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது என்று இதன்போது புலப்பட்டது. 

மேலும், அத்தியாவசிய பதவிகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய குழு, இந்தத் தற்காலிக ஆட்சேர்ப்பு காரணமாக அதிகாரிகள் அடிக்கடி மாறுவதால் நிறுவனத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியது. அதற்கமைய, இந்த நிலைமை தற்போது புரிந்து கொள்ளப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இந்த நியமனங்களின் காலத்தை 5 ஆண்டுகள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 

அத்துடன், தற்காலிக நியமனங்கள் உள்ளிட்ட வேறு சில நியமனங்களுக்காக திறைசேரியின் அனுமதியின்றி வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் குறித்தும் குழு இங்கு சுட்டிக்காட்டியதுடன், இந்த நிலைமைகளை முறைமைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

இதற்கு மேலதிகமாக, நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் முறைமை (ERP system) தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்த முறைமையை விரிவுபடுத்துவதற்காக அதிக செலவு செய்யப்பட்ட போதிலும் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதன் பின்னர், எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக சதொச கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இதற்காக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லெப்டினன் கொமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, சுதத் பலகல்ல, சந்திம ஹெட்டியாராச்சி, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, திலின சமரகோன், எம்.கே.எம். அஸ்லம் மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-11-14

இலங்கையின் இறக்குமதி வரிக் கொள்கைகள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது

இலங்கையின் இறக்குமதி வரிக் கொள்கைகள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் கூடிய வழி வகைகள் பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.வணிகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (பதில்) சோமசேன மகாதிவுல்வேவ அவர்கள் இது பற்றிய விரிவான விளக்கத்தைக் குழுவுக்கு வழங்கினார். இலங்கையின் இரு தரப்பு மற்றும் பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகளின் நிலைமைகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடல் மட்டத்தில் இருக்கும் வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து சாத்தியக் கூற்று ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழு வலியுறுத்தியது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, எரங்க வீரரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக சபுமல் ரண்வல, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சதுர கலப்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


2026-11-13

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை  அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும். பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு குழு அங்கீகாரம் வழங்கியது. குழுவின் உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


2026-11-13

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் உபகுழுவில் ஆராய்வு

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் விரிவாக ஆராயப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையில் 2014 ஒக்டோபர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் “புதிய நியமனம்” எனக் கருதப்படுவதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, சம்பள அதிகரிப்புகளுக்கு இடையிலான பாரிய வேறுபாடு காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைவதாக அவர்கள் குறிப்பிட்டார்.  அத்துடன், 03/2014 சுற்றறிக்கையின் மூலம் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக சரிசெய்தல் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது ஆசிரியர் சேவையில் தொடர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய உயர்ந்த சம்பள அதிகரிப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சம்பள இடைவெளி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.இதன் காரணமாக ஆசிரியர் சேவையின் முதலாம் மற்றும் 2-Iஆம் தரங்களில் உள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இது விடயம் தொடர்பில் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து சம்பள ஆணைக்குழுவுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அது மாத்திரமன்றி, அதிபர் சேவையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் உபகுழு இங்கு தீர்மானித்தது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, சுகத் வசந்த.த சில்வா மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர். 


2026-11-12

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளின் முன்னேற்றம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறைகளுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், நிலவும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆராச்சி அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடிய இக்குழுக் கூட்டத்தில், 2026ஆம் ஆண்டுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.இதன்போது, பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கல்விச் சீர்திருத்தங்கள், பாடநூல்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஆசிரியர் கல்வியின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், குறித்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைகளிலான தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்திறன், பரீட்சைகளை நடத்துதல், பாடநூல்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகிப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன. விசேட தேவையுடைய சிறுவர்களுக்குத் தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், பாடசாலை மாணவர்களின் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சீருடைகளை விநியோகித்தல் மற்றும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. புலமைப்பரிசில் கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துவதற்காக புதிய கணினி முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதன் ஊடாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை வைப்பிலிடுவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர்.உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளுடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபை, தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபை மற்றும் இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு செய்யப்பட்டன.இதன்போது, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தமது நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பான முழுமையான அறிக்கைகளை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். குறித்த அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.மேலும், வருட இறுதியில் மாத்திரமன்றி, வருடத்தின் இடைப்பட்ட காலத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து, அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அத்துடன், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks