பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-10-17
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இளைஞர் தொழில்முனைவு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு, இளைஞர்களிடையே திறமையான மற்றும் புதுமையான தொழில்முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பதற்கான விசேட குழுவொன்றை நியமித்தது.
குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (ஒக். 09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் கலந்துகொண்டார்.
அதற்கமைய, இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் குழுவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, அரச வங்கிகள், நிதியமைச்சு உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இந்தக் குழு கூடி நாடளாவிய ரீதியில் இளைஞர் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கும், சிறந்த தொழில்முனைவோரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு ஒத்துழைப்பதற்கான வேலைத்திட்டத்தையும் தயாரிப்பார்கள் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு தமது அமைச்சு ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட கௌரவ பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க, இளைஞர் தொழில்முனைவோருக்கான விசேட திட்டமொன்று தயாரிக்கப்படும் பட்சத்தில் அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க முடியும் என இங்கு தெரிவித்தார். அத்துடன், இளைஞர் தொழில்முனைவோர் தெரிவுசெய்யப்படும்போது அதற்கான அளவுகோல்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்றும், தொழில்முனைவு தொடர்பில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஏற்றுமதி சந்தையை நோக்காகக் கொண்டும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் தொழில்முனைவுகள் ஆரம்பிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) வி.எஸ். ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன் கலைச்செல்வி, சானக மதுகொட, இஸ்மாயில் முத்து முகமது மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
2026-03-31
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று 2026 மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.இந்த இலங்கைத் தூதுக் குழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, (சட்டத்தரணி) கீதா ஹேரத், கே.இளங்குமரன், கிங்ஸ் நெல்சன், தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர். குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற பணியாளர்களான உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி.சந்தன மற்றும் பிரதான உத்தியோகத்தர் எஸ்.டபிள்யூ.ரி.ஆர்.டி. சில்வா மற்றும் பாராளுமன்ற அதிகாரி டபிள்யூ.கே.ஏ.எம்.எம்.எம்.அர்த்தனாயக்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.மார்ச் 22ஆம் திகதி புதுடில்லியைச் சென்றடைந்த தூதுக் குழுவினர் மறுதினம் முதல் உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர். இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளரைச் சந்தித்த இக்குழுவினர், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரேர்னா ஸ்தல் பூங்காவில் மலரஞ்சலி செலுத்தினர். இவர்கள் லோக் சபாவின் கௌரவ சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தியப் பாராளுமன்ற அமைப்பு முறை குறித்து தெளிவுபடுத்தும் அமர்வொன்றும் நடத்தப்பட்டது. இதில் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சட்டமியற்றும் செயல்முறைகள் பற்றிய மதிப்புமிக்க புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இக்குழுவினர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றுடனும் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினர்.மார்ச் 24ஆம் திகதி இலங்கைத் தூதுக் குழுவினர் “PM Gati Shakti” தேசிய திட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்த தொடர் அமர்வுகளில் பங்கேற்றனர். அத்துடன், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரசபை, இந்தியாவின் சூரிய வலுசக்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய தொழில் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் இலங்கைத் தூதுக் குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இத்தூதுக் குழுவினர் புதுடில்லி மெட்ரோ ரயில் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நகர்புற ஆளுகை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான நகர்புற அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து ஆய்வுசெய்யும் நோக்கில் புதுடில்லி மாநகரசபையின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றிய கலந்துரையாடலிலும் இவர்கள் ஈடுபட்டனர். அத்துடன், பாரிய அளவிலான நீர் விநியோக முகாமைத்துவம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் குறித்து ஜல் சக்தி அமைச்சின் கீழ் உள்ள ஜல் ஜீவன் திட்டத்தின் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்தனர்.மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், இலங்கைத் தூதுக்குழுவினர் அடல் சேது பாலம், ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் நவி மும்பை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் தளங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் பவர் எக்ஸ்சேஞ்ச் இந்தியா லிமிடெட் நிறுவனத்தைப் பார்வையிட்டதோடு, மகாராஷ்டிர மாநிலத்தின் கௌரவ முதலமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதேவேளை, இலங்கைத் தூதுக்குழுவினர் மார்ச் 27ஆம் திகதி Gateway of India மற்றும் Elephanta Caves உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர். மேலும், இத்தூதுக்குழுவினர் மகாராஷ்டிர சட்டசபையின் கௌரவ சபாநாயகர் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி மற்றும் தொழில்துறைத் துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.இந்தப் பாராளுமன்ற ஆய்வுப் பயணத்தில் இலங்கைத் தூதுக்குழுவின் பங்கேற்பின் மூலம், இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பின் வாயிலாக உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தித் துறைகளில் நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்கும், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தனது தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
2026-03-30
2026 ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை குறித்த விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் குழு கவனம் செலுத்தியதுதொல்பொருளியல் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இங்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும், குறித்த திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்தும் ஆராயப்பட்டது.2021-2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டு கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் 2026.03.19ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டன.2026ஆம் ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி இக்குழு கூடியபோது தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாத தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள் இன்னும் குழுவிற்கு வழங்கப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது. அதன்படி, வர்த்தமானி அறிவித்தலில் தொல்பொருள் இடங்கள் குறித்த தரவுகள், அவற்றை வர்த்தமானியில் வெளியிடாதமைக்கான காரணங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள காலம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்திற்கு மையப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இது விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழுவிற்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.இதேவேளை, அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய மத்திய கலாசார நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானத்தில் 25% தேசிய மரபுரிமைகள் தொடர்பான அமைச்சுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆண்டுதோறும் அந்த ஒதுக்கீட்டை விடக் குறைவான தொகையையே கோரியுள்ளதாகத் தெரியவந்தது. எனவே, அமைச்சரவையின் அனுமதியுடன் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்தத் தொகை எஞ்சியிருப்பதாகவும், எதிர்காலத்தில் திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நிதியில் இத்தொகையைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.திணைக்களத்தில் நிலவும் வாகனங்களுக்கான பற்றாக்குறை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்த வாகனத் தட்டுப்பாடு காரணமாக செயலாற்றுகைக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். குழு என்ற ரீதியில் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக குழு தெரிவித்தது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஹெக்டர் அப்புஹாமி, சானக மாதுகொட, சந்தர சூரிஆரச்சி மற்றும் ருவன்தில ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-03-30
விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான ஒழுங்குவிதி 2026 ஜனவரி 16ஆம் திகதிய 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமனி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தது.கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் கௌரவ பிரதியமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க அவர்களின் பங்களிப்புடன் அண்மையில் (மார்ச் 20) இடம்பெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-03-30
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தில் வெளியேறும் சாம்பலை சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அகற்றுவதற்கான திட்டத்தை உடனயாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த மார்ச் 17ஆம் திகதி கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.மின்சார உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலக்கரியின் தரம் குறித்த பிரச்சினை காணப்படுவதால், அதனைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்போது வெளியேறும் சாம்பலின் அளவு கணிசமான அளவு அதிகரித்திருப்பதும் இங்கு தெரியவந்தது. இவை சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சுற்றுக்காட்டிய குழு, இதற்குத் தேவையான திட்டத்தை மாவட்ட செயலாளர் தலைமையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தியது. அகற்றப்படும் சாம்பலை மீள் உற்பத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறும், அதனால் ஈட்டப்படும் வருமானத்தை குறித்த மின்னுற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்படும் அப்பிரதேச மக்களின் நலன்புரித் திட்டங்களுக்குப் பயன்படுத்துமாறும் குழு ஆலோசனை வழங்கியது. அத்துடன், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் நீர் மாசு மற்றும் வளிமாசு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்குக் குழு அறிவுறுத்தல் வழங்கியது. அதேநேரம், நுரைச்சோலை மின்நிலையம் தொடர்பில் குழு அனுப்பும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்குமாறு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபைக்கு பரிந்துரைத்தது. இந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு அதிகரித்திருந்தாலும், பறக்கும் சாம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பு போதுமானதாக இருப்பதை அவதானிக்க முடிந்ததாக வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மின்னிலையத்திற்கு சுற்றாடல் அனுமதிப் பத்திரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், ரோஷன் அக்மீமன, (சட்டத்தரணி) சித்ரால் பெர்னாந்து, சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், உபுல் கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks