பார்க்க

01

E   |   සි   |  

2025-09-18

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், நிதி ஸ்திரத்தன்மை, நிலைபேறான தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்பவற்றுடன் இணங்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டண முறை குறித்து அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் செலவு மீட்பு மற்றும் செலவுப் பிரதிபலிப்பு ஆகிய இரண்டும் வலுவான மற்றும் வெளிப்படையான மின்சாரத் துறைக்கு இன்றியமையாத கொள்கைகள் என கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டினர்.

IMF - நீடிக்கப்பட்ட நிதி வசதி (EEF) திட்டத்துடன் இணைந்தாக மின்சாரக் கட்டண முறையை மறுபரிசீலனை செய்வதற்காக IMF பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. 2025 நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு முன்நிபந்தனை நடவடிக்கையாக இது பரிந்துரைக்கப்பட்டதால் திருமதி டெல்ஃபைன் பிரடி (FAD இன் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்) தலைமையிலான குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஏனைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்தத் தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் கௌரவத் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கௌரவ தலைவர் கபீர் ஹஷீம், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பாலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, திலின சமரகோன், திலித் ஜயவீர, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். 

செலவு மீட்பானது சம்பந்தப்பட்ட துறை அதன் மொத்தச் செலவினங்களை ஈடுகட்டுவதை உறுதிசெவதன் மூலம் வினைத்திறனின்மைகளைத் தடுத்து, நவீனமயமாக்கலுக்குத் தேவையான முதலீடு மற்றும் கடன் ஈர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும் என கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டது. இதேவேளை, செலவுப் பிரதிபலிப்பு என்பது நுகர்வோர் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உண்மையான செலவின் அடிப்படையில் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, நியாயமற்ற இடை-மானியங்களைக் குறைப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், செலவுகளை மீட்டெடுக்காவிட்டால், வினைத்திறன் இன்மைகள் பெருகி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகள் இல்லாமல் போகும் என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கு தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இதனை அடைவதற்கு இலங்கை சரியான உட்கட்டமைப்பு, நிதி மற்றும் ஊக்குவிப்புக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தினர். சூரிய சக்தி, நீர்மின்சக்தி மற்றும் காற்றாலை வலுசக்தி என்பவற்றை விரிவுபடுத்துவதுடன், களஞ்சிய மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைந்த முதலீடுகள் அத்தியாவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. அனல் மின்சாரம் தொடர்ந்து ஒரு பங்கை வகித்தாலும், அது மிகவும் விலையுயர்ந்தது என்றும் உலகளாவிய விலை அதிர்ச்சிகளுக்கு உள்ளாகின்றமையால் மிகவும் நிலையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உயர்ந்தளவிலான போட்டித்தன்மை வாய்ந்தது என்றும் ஆனால் அதற்கு முன்கூட்டிய முதலீட்டுத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

நிலையற்ற உற்பத்திச் செலவுகள், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது என இங்கு எச்சரிக்கப்பட்டது. திடீர் செலவு அதிகரிப்புகள் வீட்டுத்துறை மற்றும் வணிகங்கள் மீது சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் கவனமான திட்டமிடலின் தேவை இதன்போது வலியுறுத்தினர். இதனால் கட்டண முறையானது, செலவு மீட்பை மட்டுமல்லாமல், முன்னறிவிக்கக்கூடிய தன்மையையும் வழங்க வேண்டும் என்பதோடு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான உற்பத்திக்கு முதலீட்டை செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

இதேவேளை, மறுசீரமைப்புகள் மனிதாபிமான ரீதியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய வீட்டுத்துறையினரைப் பாதுகாப்பதற்கான இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாப்பது மற்றும் செயற்திறன் வருமானங்கள் இறுதிப் பயனாளர்களுக்கு நியாயமான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதி செய்வது என்பவற்றின் முக்கியத்துவத்தை கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினர்.

தரவுகளின் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் (PPAs) காணப்படும் இடைவெளிகள், முழுமையற்ற செலவு வகைப்படுத்தல்கள் மற்றும் பலவீனமான தகவல் கட்டமைப்புக்கள் தொடரிப்பிலும் கரிசனைகள் எழுப்பப்பட்டன. வலுவான நிர்வாகம் மற்றும் சுயாதீன ஒழுங்குமுறைபடுத்தல் இல்லாமல் ஒரு நவீன மற்றும் வினைத்திறனான கட்டண முறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியாது என கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. 

கட்டண மறுசீரமைப்பை முற்றிலும் ஒரு தொழில்நுட்ப ரீதியான செயற்பாடாக கருதக்கூடாது என்றும் இது நிதி ரீதியான ஸ்திரத்தன்மை கொண்ட மின்சாரத் துறையை ஏற்படுத்துதல், 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு நிலைபேறான வகையில் மாறுவதை உறுதி செய்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழிற்துறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய கொள்கை ரீதியான நோக்கங்களில் அடிப்படையாக இருக்க வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டது.



தொடர்புடைய செய்திகள்

2026-11-14

காட்டு யானைகளுக்கும் ரயில்களுக்கும் இடையிலான மோதல்களைக் குறைப்பதற்கான நிலைபேறான தீர்வுகள் அறிமுகம்

ரயில்களில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நிலைபேறான தீர்வுகளை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில்வே ஊழியர்களைத் தெளிவூட்டுதல், காட்டு யானைகளின் வாழ்விடங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் நவீன கண்காணிப்பு மற்றும் அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக ரயில்களில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைக் குறைப்பதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குச் சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி சமர்ப்பித்த எழுத்துமூலப் பதிலில் மேற்கண்ட விடயங்கள் தெரியவந்தன.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலுக்கு அமைய, ரயில்வே திணைக்களத்தின் கிழக்கு ரயில் பாதையின் இருபுறங்களிலும் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலும், சிறந்த முறையில் வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், கல்ஓயா சந்தியிலிருந்து ஹிங்குராங்கொட வரையிலும், கல்ஓயா சந்தியிலிருந்து கந்தளாய் வரையிலும் காட்டு யானைகள் ரயில் பாதையைக் கடக்கும் 27 கிலோமீற்றர் நீளமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் காட்டு யானைகள் இலகுவாகப் பயணிப்பதற்கு ஏதுவாக, ரயில் பாதையின் தண்டவாளத் தூண்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்பும் வகையில் 800 கொங்கிறீட் கற்துண்டுகள் பதிக்கும் பணி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.ரயில் பாதையின் சில பகுதிகளிலும் வளைவுகளிலும் நடமாடும் காட்டு யானைகளை ரயில் சாரதிகளால் அவதானிக்க முடியாத நிலை காணப்படுவதால், அத்தகைய இடங்களில் 10 முதல் 20 மீற்றர் வரையான தூரத்திற்கு அடர்ந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 20 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.ரயில்வே திணைக்களத்தின் சாரதிகள், ரயில் நிலைய அதிபர்கள், ரயில் பாதைகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் ரயில் சாரதிகளின் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 2025.05.16 மற்றும் 17ஆம் திகதிகளில் நடத்தப்பட்டுள்ளன.ஹபரணை ரயில் நிலையத்தைக் கடந்து கந்தளாய் நோக்கிப் பயணிக்கும்போது அமைந்துள்ள வனப் பாதுகாப்பு ஒதுக்குப் பகுதிக்குள், ரயில் பாதையிலிருந்து கணிசமான தூரத்தில் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இரண்டு குளங்களை அமைத்தல் மற்றும் அவற்றைப் போஷிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 25.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.கல்ஓயா மற்றும் மின்னேரியவுக்கு இடையிலான 141ஆம் இடத்தில், காசிக்கோட்டை ரயில் பாதையைக் கடந்து யானைகள் பயணிக்கும் பகுதியைக் கண்காணிப்பதற்காக CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை அனுராதபுரம் கட்டுப்பாட்டு அறையினூடாகக் கண்காணிக்கப்படுகின்றன.மேலும், காட்டு யானைகளை அடையாளம் காண்பதற்காக ரயில்களில் வெப்ப உணர்திறன் கமராக்களை (Thermal Detector Cameras) பொருத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றினால் தொடர்ச்சியான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ரயில்களில் மோதுண்டு 2020ஆம் ஆண்டு முதல் 2026.10.12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 81 யானைகள் உயிரிழந்துள்ளதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2026-11-12

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 6.30 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான விவாதம் (வரவுசெலவுத்திட்ட விவாதம்) நவம்பர் 13 ஆம் திகதி  முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் இடம்பெறும்.2026 ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்  மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை  04 சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


2026-11-12

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.11.12

இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கைக் கிரிக்கெட்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (நவ. 12) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.சபாநாயகரின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டமூலத்தின் 29 ஆம் வாசகம் அரசியலமைப்பின் 14(1)(இ) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின் போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம், மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேலும், சட்டமூலத்தின் 7(1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்படலாம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.எவ்வாறாயினும், குழுநிலைப் பரிசீலனையின்போது உயர் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மேற்படி முரண்பாடு நீங்குவதுடன், சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்.மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு உட்பட்டு, சட்டமூலத்தின் ஏனைய ஏற்பாடுகள் எவையும் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் மேலும் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம்  தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றியும் சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.பின்வரும் திருத்தங்களை (அவற்றில் மூன்று மேலதிக மன்றாடியார் அதிபதி அவர்களினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன) குழுநிலையில் மேற்கொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது:-குழுநிலைப் பரிசீலனையின் போது, 26(2) ஆம் உட்பிரிவில் “அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில்” என்னும் சொற்றொடரை உட்புகுத்துவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேற்படி உட்புகுத்தலுடன், 26(2) ஆம் உட்பிரிவு பின்வருமாறு அமைய வேண்டும்:-“(1) ஆம் உட்பிரிவின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நீதவான் முன்னிலைக்கு கொண்டு வரப்படுவதன் போது, புலனாய்வை மேற்கொள்கின்ற பொலிசு அலுவலர், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக சந்தேகநபரை மேலும் நீடிக்கப்பட்ட காலத்திற்கு தடுத்து வைத்திருப்பது அவசியமானது என நியாயமான ஏதுக்களைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நீதவான், எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களின் அடிப்படையில், அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில், அத்தகைய சந்தேகநபரை மேலும் இருபத்துநான்கு மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு பொலிஸ் காவலில் வைத்திருக்கப்படுவதற்கு  அதிகாரமளிக்கப்படலாம்;நீதித்துறை மேற்பார்வையை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, 59(5)(ஆ) ஆம் பந்தியில் “மேன்முறையீட்டு நீதிமன்றம்” என்னும் சொற்றொடருக்குப் பதிலாக “உயர் நீதிமன்றம்” என்னும் சொற்றொடரை இடுவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.தேவையற்றதாகக் கருதப்படுவதன் அடிப்படையில், சட்டமூலத்திலிருந்து 60(7) ஆம் உட்பிரிவை நீக்குதல்; மற்றும்66(1) ஆம் உட்பிரிவை பின்வருமாறு மீளமைத்தல் வேண்டும்”:-“இச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட அல்லது ஆக்கப்பட்ட ஒரு பணிப்புரை, பணிப்பு அல்லது கட்டளை அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு பணிப்பு, அரசியலமைப்பின் 126  ஆம், 140 ஆம் அல்லது 141 ஆம் உறுப்புரைகளின் கீழான நடவடிக்கைளில் கேள்விக்குட்படுத்தலாம்.”“குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குடிவரவு” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருமாறு, தற்போதைய வடிவிலுள்ள சட்டமூலத்தின் வாசகம் 43(3) அரசியலமைப்பின் 12(1) மற்றும் 14(1)(ஐ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுகிறது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான நிபந்தனைகளின் அடிப்படையில், 43(3) ஆம் வாசகத்திற்குப் பதிலாகப் புதிய வாசகமொன்றை இடுவதன் மூலமும், புதிய 43(4) ஆம் வாசகமொன்றை உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 169 ஆம் வாசகம், அரசியலமைப்பின் 76 ஆம் உறுப்புரையையும் கருத்திற்கொண்டு நோக்கும்போது, அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் 169(1) மற்றும் 169(3) ஆம் வாசகங்களில்  திருத்தங்களை மேற்கொள்வதன்  மூலம் மேற்படி முரண்பாடு நீங்கும்.தற்போதைய வடிவிலுள்ள 45 மற்றும் 65 ஆம் வாசகங்கள், அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுகின்றன. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, 45(1) ஆம் வாசகத்தைத் திருத்துவதன் மூலமும், குடிவரவு வசதிகளுக்கான செலவுகள் தொடர்பான முன்மொழியப்பட்ட ஏற்பாட்டை உரிய இலக்கமிடலுடன் உட்புகுத்துவதன் மூலமும் மேற்படி முரண்பாடுகள் நீங்கும்.பரிசீலிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அரசியலமைப்புடன் வேறு எத்தகைய முரண்பாடும் இல்லை. எனினும், 174 ஆம் வாசகத்திலிருந்து “எழுத்திலான” என்னும் சொல்லை நீக்குவதன் மூலம் அதனைத் திருத்துவதற்கான உறுதிமொழியையும் உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.அடையாளங்காணப்பட்ட முரண்பாடுகளை நீக்குவதற்குத் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், தொடர்புடைய ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விசேட பெரும்பான்மை தேவைப்படும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்தார்.


2026-11-11

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் கௌரவ பிரதிச் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் டேவிஸ் மயர்ஸ் அண்மையில் கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கௌரவ பிரதிச் சபாநாயகர் டேவிஸ் மயர்ஸை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சவால்மிக்க காலப்பகுதிகளில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர், பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) ஊடாக வழங்கப்பட்ட ஆதரவையும் பாராட்டினார்.இந்தச் சந்திப்பின்போது, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் அண்மைய அமெரிக்க காங்கிரஸ் விஜயம் தொடர்பில் குறிப்பிட்டார். அத்துடன், USAID ஊடாக பாராளுமன்றத்தின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.இலங்கைக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை டேவிஸ் மயர்ஸ் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்றக் கட்டடத்தின் அழகியல் மற்றும் அதன் கட்டடக்கலை முக்கியத்துவம் குறித்தும், இலங்கையின் இயற்கை அழகு குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டேவிஸ் மயர்ஸ் பாராளுமன்றக் கட்டடத்தையும் பார்வையிட்டார்.இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks