E   |   සි   |  

2025-08-27

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி

ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலத்திற்கு அக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. 

இக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க தலைமையில் அண்மையில் (ஆக. 22) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தை முன்வைப்பது குறித்து கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள், வர்த்தக மத்தியஸ்தம் சம்பந்தமான ஒரு நிலையத்தை நிறுவும் நோக்குடன் விசேடமாக உருவாக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையைச் சட்டத்தை, சில தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, அந்தச் சட்டத்தை நீக்குதல், வர்த்தக மத்தியஸ்தத்தை நடத்துவதற்கான குறைந்தபட்ச தரநிலைகளை உள்வாங்குதல் மற்றும் அத்தகைய ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு நீதிமன்றக் கட்டமைப்பு மூலம் மத்தியஸ்தத் தீர்ப்புக்களை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் ஒரு புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் பிணக்குகள் தீர்வுக்கான மாற்றுப் பொறிமுறையாக கட்டாய மத்தியஸ்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், தன்னார்வ மத்தியஸ்தத்தைப் பொறுத்தவரையில் அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது என்று அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

மத்தியஸ்த உடன்படிக்கை ஒன்றுக்கு வருதல் அல்லது அத்தகைய உடன்படிக்கை இல்லாத நிலையில் பிணக்கு சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினர் தன்னார்வமாக முன்வந்து மத்தியஸ்தத்தை நாடும் போது அல்லது நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள் தொடர்பான தன்னார்வ மத்தியஸ்தத்துக்கான ஒரு சட்டரீதியான கட்டமைப்பை அறிமுகப்படுத்துவது முக்கியம் என்றும், இதன் மூலம் சிறந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், நாட்டின் குடியியல் மற்றும் வர்த்தகத் துறைகளில் அர்த்தமுள்ள வளர்ச்சி ஏற்படும் என்றும் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், தன்னார்வ மத்தியஸ்தம் மூலம் சட்டக் கட்டமைப்புக்கு ஒரு மதிப்புமிக்க சேவை வழங்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.ஜி. பொன்னம்பலம், முஜிபுர் ரஹுமான், எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-02

மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்த தேசிய கொள்கையொன்று துரிதமாக வகுக்கப்பட வேண்டும் – சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, தேசிய கொள்கையொன்றை துரிதமாக வகுப்பதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், Coalition for Inclusive Impact (CII), ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) மற்றும் வறுமை பகுப்பாய்வு நிலையம் (CEPA) ஆகியன இணைந்து முன்னெடுத்த திட்டமொன்றின் ஆய்வு முடிவுகள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் தொடர்பான விளக்கங்கள் தொடர்புடைய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.இதன்போது, மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தல், காட்டு யானைகளின் உணவு மற்றும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாத்தல், முறைசாரா மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணப்படும் நீர் மூலங்கள் மற்றும் உணவு வளங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் குழு சுட்டிக்காட்டியது.அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களில் முன்னுரிமை அடிப்படையில் 06 யானை வழித்தடங்களைத் துரிதமாக வர்த்தமானியில் அறிவித்தல், வனவிலங்கு சரணாலயங்களில் வாழ்விடங்களை மேம்படுத்துதல் மற்றும் பிரதேச மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இதனிடையே, முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாப்பதற்காக, அங்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை முறையாக அளவீடு செய்து எல்லைகளை அடையாளப்படுத்துவதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறு அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மனித–யானை மோதல் உள்ளிட்ட சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்குப் பொருத்தமான வெற்றிகரமான வழிமுறைகளை ஆய்வு செய்தல் ஆகியவற்றின் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கிங்ஸ் நெல்சன், சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோருடன் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.


2026-09-02

தியவன்னா ஓயா நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமான தேசிய வேலைத்திட்டம் அவசியம் – துறைசார் மேற்பார்வைக் குழு வலியுறுத்தல்

தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்ஙக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர ஆரச்சி, ரவீந்திர பண்டார, சதுர கலப்பத்தி, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, அசித நிரோஷண எகொட விதான, தனுஷ்க ரங்கநாத் மற்றும் ஜகத் விதான ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-01

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.  ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக  நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks