பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-08-22
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தமது பிரதான பணியான 'ஒழுங்குபடுத்தல்' பணியை முறையாக செய்வதற்கு தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பில் பணியாற்றுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் (கோப்) ஆலோசனை வழங்கப்பட்டது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறனைப் பரிசீலிப்பதற்காக, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், 2008 மே 22ஆம் திகதிய 1550/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் 07 மற்றும் 08 ஆம் பிரிவுகளின்படி, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அறவிடப்பட்ட வெளிநாட்டு விற்பனைக்கான மிகைக்கட்டணம் (OSS) ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்பட வேண்டுமாக இருந்தாலும், வர்த்தமானி அறிவிப்பு வெளியானதிலிருந்து, இந்த வெளிநாட்டு விற்பனைக்கான மிகைக்கட்டணம் ஒருங்கிணைந்த நிதியத்தில் வரவு வைக்கப்படாமல், அதிகாரசபையின் வருமானமாகவே அடையாளம் காணப்பட்டு, அதிகாரசபையினால் தக்கவைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். மேலும், 2023 நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, அறவிடப்பட்ட இந்த வருமானத்தில், அதிகாரசபையின் செலவுகளுக்காக மாதாந்தம் 90 மில்லியன் ரூபாய் தக்கவைக்கப்பட்டு, மீதமுள்ள தொகை திறைசேரிக்கு அனுப்பப்பட வேண்டும் என்றாலும், 2018 முதல் 2023 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட 20,630 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்பது கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்றும் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறு தக்கவைக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்படும் வருமானமே இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதானமான வருமான வழியாகும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், தக்கவைக்கப்பட்ட இந்த நிதி மூலம் ஒழுங்குபடுத்தல் சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெற்றனவா என்று குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியதுடன், இந்த நிதி தொடர்பான அமைச்சரவை தீர்மானமும் மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் வீரவிலவில் பராமரிக்கப்படும் பங்களாவின் புனரமைப்புப் பணிகள் குறித்து குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. கொள்வனவுத் திட்டத்தில் 4.5 மில்லியன் ரூபாய்க்கு அங்கீகரிக்கப்பட்டு, புனரமைப்புப் பணிகளின் இடைநடுவில் அது 24 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகளிடம் குழு வினவியது. எனினும், இங்கு கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், இந்தத் தகவல்கள் சரியானவை அல்ல என்றும், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பின்னர் கணக்காய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதற்கமைய , சரியான தகவல்களை கணக்காய்வுக்கு வழங்காதது குறித்து குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சரியான தகவல்களை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், அதற்கு முன்னர் இருந்த பிரதான குறைபாடுகள் அப்படியே தொடர்வதாக பௌதீக பரிசோதனைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். கதவுகளைப் பழுதுபார்ப்பதற்காக மாத்திரம் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது குறித்தும் இதன்போது குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இந்தக் கட்டடங்களில் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட செயன்முறை குறித்து மீண்டும் முழுமையான விசாரணை நடத்துமாறு குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் நிலவும் பணியாளர் வெற்றிடங்கள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, தற்போது 14 சிரேஷ்ட நிலை வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிலவி வருவது குறித்து அதிகாரிகளிடம் குழு வினவியது. இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொள்ளும் பணிகளின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன், திறன் மற்றும் அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் சம்பள வேறுபாடுகள் காரணமாக இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை எனத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் சம்பந்தப்பட்ட அனுமதிகள் கிடைத்தவுடன் இந்த பதவிகள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், தற்போது இலங்கையைப் பற்றி பிரஜைகளிடையே ஒரு நல்ல மனப்பாங்கு உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக திறமையும் தகுதியும் கொண்டவர்கள் சம்பளத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட தொழில்களின் மீதுள்ள விருப்பம் காரணமாக பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையில் உள்ள பதவிகளுக்கான சம்பளங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார். அத்துடன், இந்தத் துறை தொடர்பான அறிவுடைய நபர்களை நாட்டிற்கு உருவாக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் குழு அறிவுறுத்தியது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலித் ஜயவீர, லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, சுனில் ராஜபக்ஷ, சந்திம ஹெட்டியாராச்சி, தினேஷ் ஹேமந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-02
மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, தேசிய கொள்கையொன்றை துரிதமாக வகுப்பதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், Coalition for Inclusive Impact (CII), ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) மற்றும் வறுமை பகுப்பாய்வு நிலையம் (CEPA) ஆகியன இணைந்து முன்னெடுத்த திட்டமொன்றின் ஆய்வு முடிவுகள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் தொடர்பான விளக்கங்கள் தொடர்புடைய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.இதன்போது, மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தல், காட்டு யானைகளின் உணவு மற்றும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாத்தல், முறைசாரா மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணப்படும் நீர் மூலங்கள் மற்றும் உணவு வளங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் குழு சுட்டிக்காட்டியது.அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களில் முன்னுரிமை அடிப்படையில் 06 யானை வழித்தடங்களைத் துரிதமாக வர்த்தமானியில் அறிவித்தல், வனவிலங்கு சரணாலயங்களில் வாழ்விடங்களை மேம்படுத்துதல் மற்றும் பிரதேச மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இதனிடையே, முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாப்பதற்காக, அங்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை முறையாக அளவீடு செய்து எல்லைகளை அடையாளப்படுத்துவதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறு அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மனித–யானை மோதல் உள்ளிட்ட சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்குப் பொருத்தமான வெற்றிகரமான வழிமுறைகளை ஆய்வு செய்தல் ஆகியவற்றின் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கிங்ஸ் நெல்சன், சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோருடன் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
2026-09-02
தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்ஙக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர ஆரச்சி, ரவீந்திர பண்டார, சதுர கலப்பத்தி, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, அசித நிரோஷண எகொட விதான, தனுஷ்க ரங்கநாத் மற்றும் ஜகத் விதான ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks