E   |   සි   |  

2025-08-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பட்டியலிடப்பட்ட கம்பனிகளுக்கான முதலீட்டுக்கான மட்டுப்பாடுகள் 500,000 அமெரிக்க டொலரில் இருந்து 750,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு, பட்டியலிட்படாத கம்பனிகளுக்கான மட்டுப்பாடுகள் 150,000 அமெரிக்க டொலரிலிருந்து 200,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு – அமெரிக்க டொலர் 2 மில்லியனுக்கும் அதிகமான எந்தவொரு முதலீட்டுக்கும் விசேட அனுமதி அவசியம்

  • துறைமுகத்தில் 1,000க்கும் மேற்பட்ட BYD கார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன - நாட்டின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சுங்க அதிகாரிகளிடம் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார்
  • இலத்ததிரனியல் வணிகத் தளங்களுக்கான வரிவிதிப்புத் தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட்டன – அரசாங்க நிதி பற்றிய குழுவில் அதிகாரிகள் தெரிவிப்பு

 

வெளிப்புற முதலீடுகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான அதிகரித்த வரம்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய விரிவாக்கத்தை எளிதாக்குவதற்கான செயல்முறைகளை நெறிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டளை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் 2025.06.18ஆம் திகதியிடப்பட்ட 2441/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கட்டளை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் 2025.07.29ஆம் திகதி பாராளுமன்றத்தில்  கூடியபோதே இவ்விடயம் ஆராயப்பட்டது.

இதற்கமைய பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் முதலீட்டுக்கான  எல்லை 500,000 அமெரிக்க டொலரிலிருந்து 750,000 அமெரிக்க டொலர் வரையில் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், பட்டியலிடப்படாத கம்பனிகளுக்கான முதுலீட்டுக்கான எல்லை 150,000 அமெரிக்க டொலரில் இருந்து 200,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைக்கு அப்பால் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் இப்போது வெளிநாட்டு மூலங்களிலிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான கடன் வாங்க முடியும் என்பதுடன், மத்திய வங்கி மேற்பார்வையுடன், 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான முதலீட்டைச் செய்வதற்கு விசேட அனுமதி தேவைப்படும்.

வெளிப்புற முதலீடுகளுக்கான நிதி இலங்கையிலிருந்து மாற்றப்பட முன்னர் அவை வெளிமுக வெளிநாட்டுக் கணக்குகள் ஊடாகக் கொடுப்பனவுகள் செய்யப்பட வேண்டும். இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இந்தப் பரிவர்த்தனைகளை விரைவாக எளிதாக்குவதற்கான பொதுவான அனுமதியை வழங்கியுள்ளது, இதனால் நிறுவனங்கள் தேவையற்ற தாமதங்கள் இல்லாமல் வாய்ப்புகளை அணுக முடியும்.

இந்தத் திருத்தங்கள் இலங்கை வணிகங்களை, குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில், மூலதனப் போக்குகளைக் கண்காணித்து உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். முன்னைய கட்டுப்பாடுகள் சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயரத் தூண்டுகின்றன என்ற பின்னணியிலேயே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள், குறுகியகால விநியோகக் கடன்கள் மேலதிக கட்டுப்பாடுகள் இல்லாமல், நடைமுறைக்கணக்குப் பரிவர்த்தனையாக வகைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர்.

அத்துடன், 2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2025.06.30ஆம் திகதியிடப்பட்ட 2443/14ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள் குழுவில் நீண்டநேரம் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன. 

வாகன இறக்குமதி தொடர்பான சர்வதேச கடன் உறுதிப்பத்திரம் (Cross-border LC) மற்றும் பதிவு நீக்கத் தேவைகளையும் குழு ஆய்வு செய்தது. மேலும் சீட்டாட்ட தொழில் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை மற்றும் இலத்திரனியல் வணிகத் தளங்களுக்கான வரிவிதிப்புத் தொடர்புடைய விடயங்களில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கேட்டறிந்தது.

2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 35ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதியை மறுபரிசீலனை செய்வதன் மூலம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் புதிய கட்டமைப்பின் கீழ் சர்வதேச கடன் வாங்குவதற்கான தடையற்ற அணுகலை இனி கொண்டிருக்காது. திறைசேரியிலிருந்து இறையாண்மை உத்தரவாதங்களுக்குத் தகுதி பெற சர்வதேச நாணய நிதியம் அறிமுகப்படுத்தியுள்ள அடைவுமட்டங்களை அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த வழிமுறை கடன் வழங்குபவர் வட்டி விகிதங்களுக்கு கூடுதலாக கடன் இடர் மீதான அடிப்படைகளைத் தீர்மானிப்பதுடன், அரச சார்பு நிறுவங்களின் நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் கடன் வாங்குவதை அதிக விலை கொண்டதாக ஆக்குகின்றது.

அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின்படி, இலங்கை தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.5% அளவில் கடன் பெறும் வரம்புக்குள் செயல்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% பயன்படுத்தப்பட்டுவிட்டதால், எதிர்கால வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி நிதியளித்தலுக்காக மீதமுள்ள கடன் பெறும் திறன் 2.5% மட்டுமே உள்ளது.

மேலும், குழு உறுப்பினர்கள் BYD வாகன விவகாரம் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பினர். இவ்விவகாரத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கார்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையில் நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றுக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். சுங்க வரிகள் இயந்திரக் கொள்ளளவின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்ற நிலையில் வாகனங்களின் இயந்திரக் கொள்ளளவைக் குறைத்துக் காண்பித்து வரிவிலக்கு பெற முயற்சித்திருக்கும் சந்தேகத்திற்கு உட்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனெனில், விசாரணைகள் தொடரும் அதேவேளையில், சாத்தியமான இராஜதந்திர தாக்கங்கள் குறித்துக் குழுவின் தலைவர் கவலை தெரிவித்தார், சர்வதேச அளவுகோல்களை பூர்த்தி செய்யாத உள்ளூர் விசாரணைகளை விட சர்வதேச தரங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

சீட்டாட்ட தொழில் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட மேம்பாடுகள் குறித்தும் குழு  ஆராய்ந்தது. தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலத்திரனியல் வர்த்தகத் தளங்கள் மீதான வரிவிதிப்புக் குறித்த விவகாரம் தீர்க்கப்பட்டிருப்பதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். எச்.எஸ் குறியீட்டின் அடிப்படையில் வரி அறவீட்டுக்குப் பதிலாகப் பழைய முறையின் அடிப்படையில் வரி அறவீட்டுக்குச் சென்றமையால் முன்னர் காணப்பட்ட காலதாமதங்கள் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-02

“இன்சா” திட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்புரியையும், அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள “இன்சா” (InSA – Integrated Systematic Approach for the Family Development of Migrant Workers) திட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டம், 2026 ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நிதி முகாமைத்துவம், சிறுவர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழில் பயிற்சி, சிறுதொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி ஆகிய பிரதான துறைகளில் கவனம் செலுத்தி குடும்ப அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக, 2 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்லும் போது, அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் முறையான திட்டமொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குழுவில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இரண்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இதற்காக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மற்றும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் என மூன்று கட்டங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன்புரி தொடர்பில் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அதன்படி, பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்படும் மாற்று பராமரிப்புத் திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துதல், ஆபத்தான நிலைமைகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் விசேட பராமரிப்புத் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவற்றில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து மீண்டும் நாடு திரும்பும் குடும்பங்களுக்கு குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உளவியல் மற்றும் சமூக ஆதரவுகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், பிரதேச செயலக மட்டத்தில் “இன்சா குழுக்கள்” (InSA) அமைக்கப்படவுள்ளதுடன், உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய துறைசார் உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது.சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை தயாரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொள்வதன் முக்கியத்துவமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது. சுற்றுலா விசா உள்ளிட்ட முறைசாரா வழிகளின் ஊடாக வெளிநாடு செல்லும் நபர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பங்களுக்கான நலன்புரி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் முறையான தரவுத் தொகுதியொன்றைப் பேணுவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, மாவட்ட மட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் கண்காணிக்கப்படவுள்ளதுடன், “இன்சா” (InSA) திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையொன்றை 2027 பெப்ரவரி மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது.


2026-09-02

பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சடடமூலம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்)  சட்டமூலம் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கப் பாதுகாப்புப்  பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி சட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்கேற்ற தேவைகளுக்கு அமைவாக, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.எனினும், நாட்டில் தற்போது நிலவும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தனியான அலுவலகமொன்றையோ பதவியொன்றையோ தொடர்ந்து பேண வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால், தற்போது முன்னெடுக்கப்படும் முப்படைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ், குறித்த ஒருங்கிணைப்புப் பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, குறித்த அலுவலகத்தின் பணிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுச் சுமையைக் குறைக்க முடியும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-02

மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்த தேசிய கொள்கையொன்று துரிதமாக வகுக்கப்பட வேண்டும் – சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, தேசிய கொள்கையொன்றை துரிதமாக வகுப்பதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், Coalition for Inclusive Impact (CII), ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) மற்றும் வறுமை பகுப்பாய்வு நிலையம் (CEPA) ஆகியன இணைந்து முன்னெடுத்த திட்டமொன்றின் ஆய்வு முடிவுகள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் தொடர்பான விளக்கங்கள் தொடர்புடைய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.இதன்போது, மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தல், காட்டு யானைகளின் உணவு மற்றும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாத்தல், முறைசாரா மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணப்படும் நீர் மூலங்கள் மற்றும் உணவு வளங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் குழு சுட்டிக்காட்டியது.அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களில் முன்னுரிமை அடிப்படையில் 06 யானை வழித்தடங்களைத் துரிதமாக வர்த்தமானியில் அறிவித்தல், வனவிலங்கு சரணாலயங்களில் வாழ்விடங்களை மேம்படுத்துதல் மற்றும் பிரதேச மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இதனிடையே, முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாப்பதற்காக, அங்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை முறையாக அளவீடு செய்து எல்லைகளை அடையாளப்படுத்துவதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறு அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மனித–யானை மோதல் உள்ளிட்ட சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்குப் பொருத்தமான வெற்றிகரமான வழிமுறைகளை ஆய்வு செய்தல் ஆகியவற்றின் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கிங்ஸ் நெல்சன், சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோருடன் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.


2026-09-02

தியவன்னா ஓயா நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு துரிதமான தேசிய வேலைத்திட்டம் அவசியம் – துறைசார் மேற்பார்வைக் குழு வலியுறுத்தல்

தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்ஙக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர ஆரச்சி, ரவீந்திர பண்டார, சதுர கலப்பத்தி, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, அசித நிரோஷண எகொட விதான, தனுஷ்க ரங்கநாத் மற்றும் ஜகத் விதான ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks