பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-05-28
செய்தி வகைகள் : செய்திகள்
களனி, ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு 2025.05.27ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தலைமையில் நடைபெற்றது.
இங்கு களனி, ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அவர்கள், பாராளுமன்றத்தின் பாரம்பரியம், அதன் வகிபாகம் மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
அத்துடன், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், பாடசாலைகளின் ஊடாக சமூகத்தில் மற்றவர்களை மதிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்றும், இதன்மூலம் வலுவான மற்றும் படைப்பாற்றல் மிக்க தனிநபர்களாக மிளிருவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க உரையாற்றுகையில், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம் குறித்த அடிப்படை அறிமுகமொன்றை வழங்கியதுடன், சிறந்த நாட்டை உருவாக்க மாணவர்களின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வையடுத்து சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவியருக்கு பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் மற்றும் ஏனைய அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.விஜேபண்டார, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய, களனி வலயக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எஸ்.நந்தசிறி, ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் அதிபர் ஆர்.கே.குணதிலக, பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2026-06-08
பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை 02 இல் அண்மையில் நடைபெற்றது. இதில் 2026 ஆம் ஆண்டிற்கான பதவி தாங்குனர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.இதற்கமைய பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக திரு. பி.எம். ரஸீல் அவர்களும், உப தலைவராக திரு. எம்.ஐ.எம். பாஸி அவர்களும், செயலாளராக திரு. சி. மணிமாறன் அவர்களும், பொருளாளராக திரு. எம்.ரீ. செய்னுர் ரிஃபா அவர்களும், உதவிச் செயலாளராக செல்வி டி. துலாங்கனி அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக திரு. எம். மயூரேஷன் திருமதி. ஏ.ஏ.எஸ். சபாயா ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள், பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி திரு. சீ.ஜே. கருணாரத்ன மற்றும் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு. ஏ.ஜி.எம். பிக்ரி, திரு. அ. சரவணபவானந்தன், திருமதி என்.பி.சி.ஜே. நிஸ்ஸங்க ஆகியோருடன் குழுப் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டனர்.
2026-06-03
பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 01) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், மு.ப 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் நிலையியற் கட்டளை 119இன் கீழான தீர்மானம் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தச்) சட்டமூலம், நிதி (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறும்.ஜூன் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 1.30 மணி வரை மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தில் சட்டத்தின் கீழான கட்டளை என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள், குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பாக 2026.05.20 அன்று ஆரம்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதம் தொடர்ச்சியாக இரண்டாவது நாள் முன்னெடுக்கப்படும். மேலும், கௌரவ தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்றை எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2026-06-03
இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இணைந்துகொண்டார்.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும், சட்டவாக்கங்களுக்கிடையில் காணப்படும் நீண்டகால உறவுகளையும் வலுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பிரதி உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தரர். இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற அதிகரிரகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.கலாநிதி பாண்டே அவர்கள், இலங்கையில் வழங்கிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டிய கௌரவ சபாநாயகர், கடுமையான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக தித்வா சூறாவளித் தாக்கத்தின் பின்னரான சூழல் மற்றும் மத்திய கிழக்கில் தற்பொழுது காணப்படும் நிலைமையால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிப்பதற்கு இந்தியா வழங்கும் உதவிகளையும் அவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கும் சபாநாயகர் நன்றி பாராட்டினார்.அத்துடன், கலாநிதி பாண்டே அவர்கள், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கையில் பதவி வகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்குப் பிரதி சபாநாயகர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி பாண்டே அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவாக்கங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் நன்றியைத் தெரிவித்தார்.இந்தச் சந்திப்பில் கலாநிதி பாண்டே அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு கௌரவ சபாநாயகர் மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
2026-06-02
புத்த பெருமானின் முப்புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை பாராளுமன்ற வளாகம் வாரஇறுதி நாட்களில் வெசாக் விளக்குகளினால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.வெவ்வேறு வர்ணங்களைக் கொண்ட வெசாக் கூடுகள், ஒளிமயமான விளக்குகள், பௌத்த கொடிகள் உள்ளிட்டவற்றால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அவை பார்ப்பவர்களுக்கு ஆன்மீகரீதியான புத்துணர்ச்சியையும், ஆறுதலையும் அளித்தன.இந்த அலங்காரங்கள் ஊடாக பௌத்த மதத்தில் போதிக்கப்படும் அன்பு, கருணை, ஒற்றுமை மற்றும் ஒழுக்க விழுமியங்கள் என்பன குறித்து சமூகத்திற்கு நினைவூட்டப்பட்டதுடன், வெசாக் பண்டிகையின் உண்மையான நோக்கமும் மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இரவு நேரத்தில் மின்விளக்குகள் மற்றும் வெசாக் கூடுகளினால் ஜொலித்த அலங்காரங்கள் பாராளுமன்ற வளாகத்திற்கு தனி அழகையளித்தன.இனம், மதம் மற்றும் கலாசாரம் கடந்த பௌத்த மதத்தின் உலகளாவிய செய்தியும், அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதின் முக்கியத்துவமும் இந்த வெசாக் அலங்காரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.அத்துடன், இலங்கை பாராளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா போதி மரத்தைச் சுற்றியும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இந்த மதச் சடங்குகளின் போது, புத்த பகவானின் ஸ்ரீ தர்மம் நினைவுகூரப்பட்டதுடன், நாட்டிற்கும் மக்களுக்கும் அமைதி, செழிப்பு மற்றும் நன்மை உண்டாக வேண்டிய பிரார்த்தனைகளும் முன்வைக்கப்பட்டன.வெசாக் பண்டிகையின் ஒளிமயமான பிரகாசத்துடன் மிளிர்ந்த இலங்கை பாராளுமன்றம், பௌத்த கலாச்சாரத்தின் பெருமிதத்தையும் அதன் ஆன்மீக பாரம்பரியத்தின் மதிப்பையும் தனித்துவமான முறையில் வெளிப்படுத்தியது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks