பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-05-15
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இயலாமையுள்ள நபர்களுக்குத் தாக்கம் செலுத்தும் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் இயலாமையுள்ள நபர்கள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடியது.
இந்த ஒன்றியம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா தலைமையில் அண்மையில் (மே 08) பாராளுமன்றத்தில் கூடிய போதே அந்தப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றியத்தை அறிவுறுத்தியதுடன், இவ்வாறு முன்வைக்கப்படும் அனைத்து கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும், அது தொடர்பில் எடுக்கக்கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.
இயலாமையுள்ள நபர்களுக்காக அனைத்துத் தேர்தல்களிலும் குறிப்பிட்ட ஒரு ஒதுக்கீட்டை ஒதுக்குமாறு பிரதிநிதிகள் முன்மொழிந்தனர். அத்துடன், இயலாமையுள்ள நபர்களுக்கான தகவல்கள் அடங்கிய இணையத்தளமொன்றை தயாரிக்குமாறு ஒன்றியத்துக்கு முன்மொழிந்ததுடன், இந்த இணையத்தளத்தை கையடக்கத்தொலைபேசி ஊடாகவும் பிரவேசிக்க முடியுமான வகையில் தயாரிக்குமாறு தெரிவித்தனர்.
அத்துடன், பிரேல் ஊடாக கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பது தொடர்பிலும் ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும், இயலாமையுள்ள நபர்கள் தொடர்பில் புதிய சட்டமொன்றை கொண்டுவருவது தொடர்பில் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பற்றி கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, செவிப்புலன் குறைபாடு கொண்ட நபர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காகக் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இயலாமையுள்ள நபர்களுக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு முன்மொழியப்பட்டது.
இந்த ஒன்றியத்தின் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-06-08
அனுராதபுரம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் (05) கூடியது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு அமைய செயற்படுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. அத்துடன், இவ்வழக்கிற்கான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய வைத்திய அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட சிறுமி தொடர்பில் தற்பொழுது அனுராதபுரத்திற்கு மேலதிகமாக அத்தனகல்ல மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதால், வழக்கு விசாரணைகளை மேற்பார்வை செய்யுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒன்றியம் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துடன், இந்த வழக்கு மூன்று நீதிமன்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சிறுமி மேலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும், நீதிமன்ற மற்றும் சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையிலும் அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கப்பாட்டை வெளியிட்டது.சம்பந்தப்பட்ட சிறுமியின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒன்றியம் பரிந்துரைத்தது.அதேநேரம், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வதில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், இது விடயத்தில் எதிர்கால நடவடிக்கைகளில் உரிய தலையீடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளை அறிக்கையிடும்போது சிறுவர்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் அவர்களின் கௌரவம் என்பவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் ஊடக மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து வழிகாட்டல்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்ட உபகுழு தலையீடு செய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் ஏற்படுகின்ற சட்ட மற்றும் நடைமுறை ரீதியான தடைகளை தாண்டுவதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உபகுழு செயற்படும்.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன ஆகியோர் நிகழ்நிலை (சூம்) தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டனர்.
2026-06-03
பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.
2026-06-03
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.பொலிஸ் நிலையங்களை வலுப்படுத்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் கிளிநொச்சி மையமாகக் கொண்டு இடம்பெறும் மணல் வியாபாரத்தைத் தடுத்தல் உள்ளிட்ட பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகளைக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-02
நெல் உலர்த்துதல், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திடமிருந்து ரூ.1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான இயந்திரங்கள் தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாகவும் கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் தெரிவித்தார்.வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கருத்தை முன்வைத்தார்.கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் உலரவைக்கும் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க ரூ.500 மில்லியன் பெறுமதியான நிகழ்ச்சித்திட்டமும், உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களுக்கு உற்பத்தி மற்றும் பொதியிடும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய ரூ.100 மில்லியன் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமும் இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நெல்லை அரிசியாக மாற்றுவதற்கும் கிழங்கைக் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் தலையிட்டிருப்பதாகவும், ஒரு கிலோ கிழங்கை ரூ.220 இற்கு கொள்வனவு செய்து வரையறுக்கப்பட்ட லங்கா சதோச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், சம்பா மற்றும் கீரி போன்றவற்றுக்கு மாற்று அரிசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதுடன், ஏப்ரல் மாதத்தில் 120,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மாத்திரமே அரிசி இறக்குமதி குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.சில கூட்டுறவு சங்கங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களை எந்தவித தண்டனையுமின்றி அந்தச் சங்கங்களில் மீண்டும் பதவிகளில் நியமிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மகாபொல புலமைப்பரிசிலைப் பெற்ற பழைய மாணவர்களின் சங்கம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சகல பழைய மாணவர்களும் இணைந்துகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார். இந்தச் சங்கம் எதிர்கால மாணவர் சமூகத்தின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.கம்பனி பதிவாளர் திணைக்களத்தில் தகவல் கட்டமைப்பை புதுப்பிப்பது மற்றும் அதன் செயல்திறனை அதிகரித்தல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன மற்றும் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks