பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-04-23
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இயலாமையுடைய நபர்களின் தேவைகள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதன் ஊடாக சாதகமான திசையை நோக்கி போக்குவரத்துத் துறையை வழிநடத்துவது தொடர்பான இரண்டாவது உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது.
இந்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் (ஏப். 10) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த த. சில்வா, பல்வேறு இயலாமையுடைய நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து இதில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இயலாமையுடைய சமூகத்தினருக்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாமை அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரியதொரு பிரச்சினையாக இருப்பது இங்கு அடையளம் காணப்பட்டது. பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் முறையான அணுகல் வசதிகள் இல்லாமை காரணமாக இயலாமை உடைய நபர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பயணிக்கும் நிலை காணப்படுவதாகவும், இதற்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் குழுவில் ஆஜராகியிருந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
2006ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் குறித்த ஒழுங்குவிதி பற்றிய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இயலாமையுடைய சமூகத்தினருக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அதன்படி, அந்தச் சட்டங்கள் நடைமுறையில் செயல்படுத்தப்படும்போது இயலாமையுடைய சமூகம் பெறும் நிவாரணம் குறித்தும் அவர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
சில பேருந்து நடத்துனர்களின் செயல்களால் இயலாமையுடைய நபர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும், இயலாமையுடைய நபர்கள் தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்தவும் சட்டம் இயற்ற வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஆசனங்கள், சட்டரீதியாக இயலாமையுடைய நபர்களுக்கான ஆசனங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம், பேருந்துகளில் நிபந்தனையின்றி இயலாமையுடைய நபர்களுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியம், புகையிரத நிலையங்களில் இயலாமையுடைய நபர்களுக்கான தகவல் தொடர்பு வசதியை எளிதாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. செவிப்புலன் அற்ற சமூகத்தினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து வினவப்பட்டதுடன், அவர்களுக்கு அவற்றை மீண்டும் வழங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, இயலாமையுடைய நபர்களின் பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக இந்தக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளைப் பரிசீலித்த பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் உபகுழுவின் தலைவர் தெரிவித்தார்.
2025-11-27
அரசாங்க நிறுவனங்கள் மூன்றின் தலைவர்களுடைய நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் நேற்று (நவ. 26) கூடிய பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக கலாநிதி டி.பி.பி.எச்.திசாபண்டார அவர்களின் நியமனத்துக்கும், தேசிய லொத்தர் சபையின் தலைவராக எம்.டி.சி.ஏ.பெரேரா அவர்களின் நியமனத்துக்கும், கஹட்டகஹா கிரபைஃட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் தலைவராக (பொறியியலாளர்) பி.வி.ஏ.ஹேமலால் அவர்களின் நியமனத்துக்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் கூடிய உயர்பதவிகள் பற்றிய குழுவில் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-27
சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் செயற்பாடு மற்றும் அதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான தடைகளை தளர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக தெரிவித்தார். குறித்த மேற்பார்வைக் குழு அண்மையில் (20) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றுக்கான 2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விசேட திட்டங்களின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டது.போதைப் பொருளை ஒழிப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியிருக்கும் நிலையில், போதைப் பாவனையின் பின்னர் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான உபகரணங்கள் விசேட தேவையைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கான கொள்முதல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்டரீதியான கட்டுப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதுதவிரவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் தமது சபையின் முன்னேற்றங்கள் குறித்து குழுவுக்கு விளக்கமளித்தனர். இதேவேளை, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்திருப்பதாகவும், இடைநிறுத்தப்பட்டிருந்த பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2025-11-26
இலங்கைக்குள் தனியார் பல்கலைக்கழகங்கள் செயற்படும் முறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அவை அனுமதி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களாக அங்கீகரிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களின் தலைமையில் 21.11.2025ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வியடம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், நாட்டில் குறைந்த தரத்திலான பட்டப்படிப்புக்களை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் விளக்கிக் கூறினார். இந்த நிறுவனங்கள் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், இலாபம் ஈட்டுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கமைய பட்டம் பெறவிரும்பும் மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது முதல் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் வரையிலான செயற்பாடுகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்பார்வை செய்யவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.இங்கு கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர், இவ்வாறு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பட்டப்படிப்புக்களை வழங்கும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது மற்றும் ஒழுங்குறுத்துவதற்கு உயர் கல்வி ஆணைக்குழுவொன்றையும் உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். இதன் ஊடாகத் தேவையான தரவு அமைப்புகளைத் தயாரித்து, உலகின் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைத்து, அவற்றுக்கிடையே நல்ல ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகங்களின் தன்மை, பாடநெறிகளின் தரம் போன்ற அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையில் திறக்க எதிர்பார்க்கப்படும் தனியார் பல்கலைக்கழகங்களகங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (அரசசார்பற்ற உயர் கல்வி), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் பல்கலைக்கழகங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, சானக மாதுகொட, துரைராஜா ரவிகரன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2025-11-26
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்குரிய 12 செயற்திறன் அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அண்மையில் (நவ. 18) பரிசீலிக்கப்பட்டன.இந்தக் குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.அதற்கமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் உள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செயற்திறன் அறிக்கைகள், உயர் நீதிமன்ற வளாக முகாமைத்துவச் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள், கைதிகள் நலன்புரி நிதியத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளும் இவ்வாறு பரிசீலிக்கப்பட்டன.இந்த நிறுவனங்களுக்குரிய கணக்காய்வு வினவல்கள் குறித்தும் குழு இங்கு வினவியதுடன், அதற்குரிய அதிகாரிகள் விளக்கங்களை அளித்தனர். அத்துடன், இந்த நிறுவனங்களின் தற்போதைய பணிகள், நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மிகவும் வினைத்திறனான சேவைக்காக மேற்கூறிய நிறுவனங்களின் சட்டக் கட்டமைப்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் குழுவுக்குத் தெரியப்படுத்துமாறும், அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.இங்கு, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கை சம்பந்தமான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, புத்தளம் நீதிமன்றத்தில் சட்ட உதவி மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்திற்காக நிர்மாணிக்கப்படும் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையாதது தொடர்பில் அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டது.அதற்கமைய, சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தவிர்ந்த, ஏனைய செயற்திறன் மற்றும் வருடாந்த அறிக்கைகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.டி. சூரியபண்டார ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks