E   |   සි   |  

2025-04-04

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் இடம்பெற்ற பாரிய மோசடி கோபா குழுவில் தெரியவந்தது

  • அனுமதிப் பத்திரங்களை வழங்கும்போது நிதிச் சுத்திகரிப்பு இடம்பெற்றுள்ளதா என்பது சந்தேகம் – கணக்காய்வாளர் நாயகம்
  • 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விலக்கு எல்லை உயர்த்தப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 2.42 பில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு
  • இரு பிரதான நிறுவனங்கள் 640 அனுமதிப்பதிர உரிமையாளர்களுக்கு இறக்குமதிக்கான வசதிகளை வழங்கும் நிறுவனங்களாகச் செயற்பட்டமை புலப்பட்டது
  • அனுமதிப்பத்திரம் வழங்குவது என்ற போர்வையில் வணிகம் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது – கோபா குழு
  • குறிப்பிட்ட காலப் பகுதியில் வெளிநாட்டுக்குச் சென்றிருக்காத நான்கு நபர்களுக்காக இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டமை வெளிப்பட்டது
  • முன்னாள் அமைச்சரின் தேவைக்கு ஏற்ப முன்னர் காணப்பட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது – கோபா குழுவின் தலைவர்


வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 01ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் அண்மையில் (ஏப். 02) கூடி ஆராய்ந்தபோதே இந்த விடயம் தெரியவந்தது.

இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிதிச் சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆராய்ந்துபார்க்கும்போது இது தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் 1077 வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 77 அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயகம், 640 அனுமதிப்பத்திரங்களுக்காக இரண்டு பிரதான நிறுவனங்கள் வசதிகளை வழங்கும் இறக்குமதியாளர்களாகச் செயற்பட்டிருப்பதாகவும் குழுவுக்குத் தெரியப்படுத்தினார். இதன் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்குவது என்ற போர்வையில் வணிகம் இடம்பெற்றுள்ளமை வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விலக்கு எல்லை 6 மில்லியன் ரூபாவிலிருந்து 12 மில்லியன் ரூபா வரை உயர்த்தப்பட்டமையால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 2.42 பில்லியன் ரூபா என்றும் கணக்காய்வாளர் நாயகம் குழுவில் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிநாட்டுக்குச் சென்றிராத நபர்கள் நான்கு பேருக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது. இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆகக் குறைந்தது வெளிநாட்டில் இருக்க வேண்டிய கால அளவு சுற்றுநிருபத்தில் சரியான முறையில் குறிப்பிடப்படவில்லை என்றும், இதனால் 3 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையில் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள், அவ்வப்போது வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய நபர்கள் உள்ளிட்டவர்களம் இத்திட்டத்தின் கீழ் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தைப் வழங்குவதற்கு முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமையும் இங்கு புலப்பட்டது.

முன்னாள் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சின் முன்னாள் செயலாளரினால் இதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு மாத்திரம் சலுகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க ஊழியர்கள் என்ற ரீதியில் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சேவையாற்றும் போது நேரடியாகச் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகத் தான் பணியிட மாற்றம் பெற்றுக் கொண்டதாகவும் இங்கு வருகை தந்திருந்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு அமைய, இவ்விடயம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அதன் அறிக்கையைக் கையளிக்குமாறும், இந்த மோசடிச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழு அதிகாரிகளுக்கு அறிவுறத்தல் வழங்கியது.

இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதி அமைச்சர்கள், மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, சுகத் திலகரத்ன, நலின் ஹேவகே கௌரவ பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், (கலாநிதி) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சந்தன சூரியஆரச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, ஒஷானி உமங்கா, தினிந்து சமன் ஹென்னாயக்க, ரீ.கே. ஜயசுந்தர, மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, மற்றும் லால் பிரேமநாத் ஆகியோருடன் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-04

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், கணக்காய்வு செயன்முறையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், திறமையான மனித வளத்தைத் தக்கவைத்தல் மற்றும் அரச நிறுவனங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் முன்னெடுத்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த  சில்வா அவர்கள் கலந்துகொள்ள முடியாதமை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அச்சந்தர்ப்பத்தில் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின்போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், இணையவழி முறையின் ஊடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க  கலந்துகொண்டார்.தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் தரமானதாகவும் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளை பரவலாகப் பயன்படுத்துவதன் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.கணக்காய்வு செயன்முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைப்பதன் மூலம் கணக்காய்வு நடவடிக்கைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதுடன், அரச நிதி முகாமைத்துவம் தொடர்பில் மேலும் விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடியும் என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும், கணக்காய்வுச் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் திறமையான அதிகாரிகள் பயிற்சிக்குப் பின்னர் வேறு துறைகளுக்குச் செல்வதன் காரணமாக ஏற்படும் மனித வளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.திறமையான கணக்காய்வு அதிகாரிகளை சேவையில் தக்கவைத்துக்கொள்வதற்காக பொருத்தமான கொடுப்பனவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதன் அவசியமும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், அரச நிறுவனங்களின் உள்நாட்டுக் கட்டுப்பாட்டு முறைமைகளில் காணப்படும் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றைத் திருத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்புடைய நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் பொறுப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வின்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை மேலும் வினைத்திறன்மிக்க முறையில் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.கணக்காய்வு செயன்முறையை நவீனமயமாக்கும்போது தெளிவான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமொன்றைத் தயாரித்து, பணியாளர் தேவைகள் மற்றும் வளங்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்வதன் முக்கியத்துவத்தையும் குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.இதனிடையே, பெண்களை வலுவூட்டல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவு தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அதன் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பிலும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தல் மற்றும் புலனாய்வு செய்தல், அத்துடன் சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஆணைக்குழுவை முழுமையான செயற்பாட்டு மட்டத்திற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள், பணியாளர் ஆட்சேர்ப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சட்டத்திற்கு அமைவாக குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பதால், அந்த உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, முழுநேர உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குழுவினால் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.


2026-09-04

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான ரூ. 7.5 பில்லியன் கொண்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2026 ஆண்டு சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 7.5 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு பற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, நிமல் பலிஹேன, திலின சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல் கொள்வனவை துரிதப்படுத்துவது இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.இதன்போது, நெல் கொள்வனவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை இணைத்துக்கொள்ளுதல், நெல் விலை மற்றும் சந்தை முகாமைத்துவம், போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நெல் விவசாயிகளைப் பாதுகாப்பதுடன், நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்காக நீண்டகால தேசியக் கொள்கையொன்றின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, இலங்கை சுங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. ASYCUDA முறைமையை மேலும் நவீனமயப்படுத்தி, தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கான காகிதமற்ற சுங்கச் செயன்முறையை 2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரம் (Trade National Single Window) ஊடாக சுங்கத் திணைக்களத்திற்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் இடையிலான டிஜிட்டல் தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.ASYCUDA முறைமையில் தேவையான வசதிகள் காணப்பட்டாலும், ஏனைய அரச நிறுவனங்களில் இதற்கு ஒத்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முறைமைகள் இல்லாத காரணத்தினால், அனைத்து நிறுவனங்களையும் தேசிய ஒற்றை வர்த்தகச் சாளரத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.அத்துடன், பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் முன்பணக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெறும் நிதி முறைகேடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இத்தகைய முறைகேடுகளைத் தடுப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கண்காணிப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


2026-09-03

இலங்கை சுங்கத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை மீளாய்வு செய்த பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு

பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்தது. குறித்த குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், 2026 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,060,559 மில்லியன் ரூபாய் எனவும், அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது சதவீத அடிப்படையில் 130% முன்னேற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.இதற்கமைய, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தரவுகளுடன் தெரிவித்தனர்.2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன், அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை 1,000cc இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96% ஆகும்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விதம், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-03

இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம்

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் பொலிஸ் சேவையின் செயல்திறனை மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அதன் தலைவர் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் கடந்த ஆக. 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில் இணையக் குற்றங்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. சட்டவிரோத சூதாட்டம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, குறித்த வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தை வலுப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளைப் பணியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சியுடன் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், இணையக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உடனடியாகச் செயற்படுத்தக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை நிறுவுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கிரிப்டோ நாணயப் பயன்பாடு தொடர்பான குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது காணப்படும் தடைகளை குறைப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை, அக்குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியில் கசியாமல் தடுப்பது மற்றும் சமூக பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசாரணைகளைத் துரிதப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் ஆதரவை மேலும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks