E   |   සි   |  

2025-03-26

செய்தி வகைகள் : செய்திகள் 

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில்

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் 2025.03.25 ஆம் திகதி இடம்பெற்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம், ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு நடத்தும் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு உரையாற்றிய பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், தொழிற் சந்தையை மாத்திரம் நோக்காகக் கொள்ளாமல், சமூகத்திற்கு நல்ல தலைமைத்துவத்தை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கக்கூடிய திறமையான இளைஞர்களை உருவாக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், மாணவர்களுக்கு பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் வாய்ப்பும் இதன்போது கிடைத்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன குறிப்பிடுகையில், மாணவர்கள் அகங்காரத்திலிருந்து விடுபட்டு, தூரநோக்குடன் கூடிய அறிவுடைய தலைவர்களாக வருவதற்கு திடசங்கற்பம் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார். பொதுநலத்தை குறிக்கோளாகக் கொண்டு குறைந்த நுகர்வுக்கொள்கை உடைய தலைவர்களாகுவதன் அவசியத்தை சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பிரதி  சபாநாயகர் (வைத்தியர்)  ரிஸ்வி சாலி,  நாம் விரும்பும் அழகான நாட்டை உருவாக்க, மாணவர்கள் ஒழுக்கமான பிரஜைகளாக சமூகத்தில் சேர்ந்து தற்போதைய சமூகத்தை மாற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர உரையாற்றுகையில், இம்முறை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், இந்த நாட்டின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க மாணவியர் தொடர்ந்து முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஆசியாவில் 5வது இடத்திலும், உலகின் அனைத்து நாடுகளிலும் 166வது இடத்திலும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், "பாராளுமன்றத்தின் பங்கு மற்றும் தேசத்தின் குழந்தைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இந்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் பெருமைமிக்க இடத்திலிருந்து மாணவர் பாராளுமன்ற அனுபவத்தைப் பெறுவது மாணவர்களுக்குக் கிடைத்த பெறுமதிவாய்ந்த சந்தர்ப்பமாகும் என்று சுட்டிக்காட்டினார்.

மாணவர் பாராளுமன்றம் தொடர்பான "விஷன்" சஞ்சிகையின் நினைவு இதழை ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல இதன்போது பிரதமருக்கு வழங்கிவைத்தார்.

அத்துடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவியருக்கு கௌரவ சபாநாயகர் உள்ளிட்ட விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன

மேலும், விஷாகா வித்தியாலயத்தினால் புனித அந்தோணி மற்றும் புனித லுசியா வித்தியாலயங்களில் மாணவர் பாராளுமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் நூலகத்துக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

ஜனாதிபதி சட்டப் பணிப்பாளர் நாயகம் ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதி சிரேஷ்ட ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, விஷாகா வித்தியாலயத்தின் அதிபர் மனோமி செனவிரத்ன, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் பிரிவின் பணிப்பாளர் புத்தினி ராமநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள், விஷாகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-09-09

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 09) நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.


2026-09-09

50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இயந்திரங்களை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்த திட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் காலாவதியான இயந்திர உபகரணங்களைப் படிப்படியாக அகற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறன்மிக்க உபகரணங்களைக் கொள்வனவு செய்வதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அச்சிடும் (Smart Security Printing) திறன்களைக் கொண்ட நவீன அச்சிடும் பிரிவொன்றை நிறுவுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.டி. சூரியபண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் 445 நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் மேலும் 21 பணியாளர்களும் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.பாதுக்கை, வட்டரெக்க பிரதேசத்தில் இயங்கி வரும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சகத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் தொகுதிகள் அச்சிடப்படுவதுடன், பாதுகாப்பு அச்சிடும் பணிகளான மாகாணப் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் இரகசிய ஆவணங்களை அச்சிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், SPC பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடுதல், பல்வேறு அரச நிறுவனங்களுக்கான அச்சிடும் பணிகள், ஏனைய வர்த்தக அச்சிடும் பணிகள், தனியார் அச்சிடும் கட்டளைகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பல மாவட்டங்களில் SPC விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.அமைச்சின் கீழ் அச்சகம் ஒன்று காணப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல், சந்தையின் தரம் மற்றும் தரநிலைகளைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பு அச்சிடும் (Security Printing) பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் அரச துறையின் ஒரேயொரு அரச தொழில்முயற்சி நிறுவனமாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.பாரிய அளவிலான அச்சிடும் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசுக்குச் சொந்தமான அச்சிடும் வசதியொன்றின் தேவையை நிறைவேற்றுதல் மற்றும் அச்சிடும் பணிகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நீண்ட காலமாக அரச நிறுவனமாக இயங்கி வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், பயிற்சியளிக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டிருத்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்காக அரசுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் இயங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.


2026-09-08

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.09.08

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (செப். 8) அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வருமாறு,சட்டமூலத்தின் வாசகம் 3(ஐ) தெளிவற்றதாக உள்ளது, எனவே இது அரசியலமைப்பின்12(1) மற்றும் 14(1) (எ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த வாசகம் நீக்கப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(i)     சட்டமூலத்தின் வாசகம் 4(ச), அரசியலமைப்பின் உறுப்புரைகள் 12(1) மற்றும் 14(1)(எ) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றம் முன்மொழிந்தபடி உறுப்புரையின் அந்த வாசகம் திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(ii)     சட்டமூலத்தின் வாசகம் 5(4)(ஆ) அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்டபடி வாசகம் 5 திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(iii)     சட்ட மூலத்தின் மற்ற வாசகங்கள் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்2026 ஆகஸ்ட் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலான அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஒன்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள மனுக்களின் பிரதிகளும் கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.2026 ஆகஸ்ட் 21 திகதியன்று மனுக்கள் ஏழு 2026 ஆகஸ்ட் 24  திகதியன்று மனுக்கள் நான்கு 2026 ஆகஸ்ட் 25 திகதியன்று மனுக்கள் எட்டு 2026 ஆகஸ்ட் 28 திகதியன்று மனுக்கள் ஐந்து 2026 ஆகஸ்ட் 31 திகதியன்று மனுக்கள் முப்பத்து ஒன்று 2026 செப்டம்பர் 01 திகதியன்று மனுக்கள் பத்து 2026 செப்டம்பர் 03 திகதியன்று மனுக்கள் மூன்று2026 செப்டம்பர் 04 திகதியன்று மனுக்கள் இரண்டு  கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு பதினைந்து மனுக்கள்அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பதினைந்து மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் சபையில் அறிவித்தார்.நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்கு மேலும் ஏழு மனுக்கள்2026 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய எனது அறிவித்தலில்  குறிப்பிடப்பட்ட மனுவுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஏழு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.


2026-09-08

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (செப். 8) சான்றுரைப்படுத்தினார்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலம் கௌரவ தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளை தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதே இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கக்கூடிய அபராதத் தொகைகள் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப போதுமானதாக இல்லாத காரணத்தினால், அவ்வபராதத் தொகை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 வரை இத்திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல்  (திருத்தச்) சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks