logo

03

E   |   සි   |  

2025-03-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

மனித – விலங்கு மோதல்கள் குறித்து சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

  • வரலாற்றில் முதல் தடவையாக சுற்றாடல் தொடர்பான சகல நிறுவனங்களும் ஒரு அமைச்சின் கீழ் – கௌரவ உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டு
  • ஒவ்வொரு நிறுவனங்களின் வகிபாகம் தொடர்பில் தனித்தனியாகக் கலந்துரையாடப்பட்டது

 

மனித – விலங்கு மோதல்கள் தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பில் விஞ்ஞான ரீதியான தீர்வுகளுக்குச் செல்ல வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.  குறிப்பாக அந்தந்த நிறுவுனங்களின் வகிபாகங்கள் குறித்து இங்கு வெவ்வேறாகக் கலந்துரையாடப்பட்டதுடன், காட்டு விலங்குகளின் பிரச்சினைகள், போதுமான மனித மற்றும் பௌதீகள வளங்கள் இல்லாமை போன்றவை அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் என்பனவும்  இதில் அடங்கும்.

யானை – மனித மோதல்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு சேதம் ஏற்படும் ஏனைய உயிரினங்களான செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். செங்குரங்குகள், மர அணில்கள் மற்றும் மயில்களின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும், இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயத்துறை பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குவது கடினம் என்றாலும், விரைவில் தீர்வுகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.

அத்துடன், யானை மனித மோதல்களை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், யானைகள் நடமாடும் எல்லைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவற்றின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார்.  மேலும், யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்கும் வகையிலான கமரா அமைப்புக்கள் பொருத்துவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ அமைச்சர் (வைத்தியர்) தம்மிக்க பட்டபெந்தி அவர்களின் தலைமையில் அண்மையில் (மார்ச் 05) கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சின் கீழ் உள்ள அந்தந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தமது நிறுவனங்கள் குறித்து குழுவிற்கு விளக்கமளித்ததுடன், வரலாற்றில் முதன்முறையாக சுற்றாடல் தொடர்பான சகல நிறுவனங்களும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் பாராட்டைத் தெரிவித்தனர்.

அத்துடன், மார்ச் 15ஆம் திகதி நடைபெறவிருப்பது விலங்குகளின் தொகைமதிப்பீடு இல்லையென்றும், எளிய முறையிலான கணக்கெடுப்பு மாத்திரமே என்றும் கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி இங்கு தெரிவித்தார். இது பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லாத பின்னணியில், ஏதாவது ஒரு சில தரவுகளையாவது பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் கணக்கெடுப்பு மாத்திரமே இது என்றார்.  இவ்வாறான நிலையில், இந்த முயற்சியை கேலி செய்வது பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு குறித்து குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், இடம்பெறுகின்ற பெரும்பாலான மணல் அகழ்வுகளில் 50 வீதமானவை சட்டவிரோதமானவை என கௌரவ பிரதியமைச்சர் அன்டன் ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்.

இந்தக் குழுவில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வனவிலங்குத் திணைக்களத்திற்குக் காணப்படும் மனிதவளம் போதுமான அளவில் இல்லாமை குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். பயிர் காப்புறுதி, ஆயுட் காப்புறுதி மற்றும் சொத்துக்களுக்கான காப்புறுதி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்தும் அவர் குழுவில் கேள்வியெழுப்பினார்.  இதற்குப் பதிலளித்த, கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, இழப்பீட்டை இரட்டிப்பாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், உயிர் மற்றும் சொத்து இழப்புக்களைத் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-25

திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் சமர்ப்பிப்பு

அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 23) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பளிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிறி பஸ்நாயக்க, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.அமெரிக்க டொலர் மில்லியன் 2.5 காணாமல் போனமை தொடர்பில் கடந்த 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து, குழுவின் இறுதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.இந்தக் கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


2026-06-23

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் ஆய்வு

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு, 2021-2023 மூன்றாண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் இத்திணைக்களத்தின் செயலாற்றுகை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்து ஆராயப்பட்டது.பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் சொத்துக்களைப் பெறும் பல்வேறு வழிகள், ஒவ்வொரு சொத்தும் பெறப்பட்ட காலப்பகுதிகள், அச்சொத்துக்கள் யாரால் மாற்றப்பட்டன, அந்த மாற்றத்திற்குப் பொருந்தக்கூடிய நிபந்தனைகள் போன்றவை அடங்கிய ஒரு அறிக்கையை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறு 2024ஆம் ஆண்டு மே மாதம் குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் வினவினார். இதடன் தொடர்புடைய தரவுகள் அடங்கிய அறிக்கை குழுவிற்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திடம் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் சொத்துக்களின் எண்ணிக்கை குறித்த ஒரு அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறு குழு பரிந்துரைத்தது.காலி பத்தேக, சுதுவலிபொத்த பகுதியில் அமைந்துள்ள ஹரி ஹபுகொட பெருந்தோட்டத்திற்குச்  சொந்தமான 113 ஏக்கர் காணியை குத்தகைக்கு கேள்விப்பத்திரம் கோரல் குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மதிப்பிடப்பட்ட பெறுமதியை விட அதிக பெறுமதிக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த நிலத்தின் சில பகுதிகள் பல்வேறு தரப்பினரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும் இங்கு தெரியவந்தது.ரிச்மண்ட் காசல் கட்டடத்தின் பராமரிப்பு குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஜூலை மாதத்திற்குள் இந்தக் கட்டடடத்தின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இங்கு காணப்படும் தென்னை விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அது முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.இக்குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களனா சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிக்கா அதாவுட, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரிஆரச்சி, அஜந்த கம்மத்தகே, லால் பிரேம்நாத், ருவன்திலக ஜயக்கொடி மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-06-23

கல்வித் துறை தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்து

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில் ஆரம்பப் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஒரு தரநிலையின்படி பொதுவான திட்டம் மற்றும் மாதிரிகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம், மாற்றுப் பாடசாலைகளின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள், மாகாண மட்டத்தில் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொழிற்கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. இவ்விடயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த கௌரவ பிரதமர், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவயைான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தினார்.மேலும், இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கேட்டறியப்பட்டது.கௌரவ கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கௌரவ தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவகே, குழுவின்  உறுப்பினர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவேவ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-06-22

எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளால் இலங்கையிலுள்ள ஈரூடக மற்றும் கடல்வாழ் பல்லுயிர்களைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராய்வு

எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளின் பாதிப்புக் காரணமாக இலங்கையின் கடல் வாழ் பல்லுயிர்கள் மற்றும் ஈரூடகவாழ் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.காலநிலை மாற்றத்தினால் குறிப்பாக எல் நினோ நிலைமை, இலங்கையின் சமுத்திக் கட்டமைப்பு, கரையோரம், பல்லுயிரினம் மற்றும் கரையோர சமூகங்களின் வாழ்வாதார போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதினால் பவளப் பாறைகள் வெளுத்தல் (Coral Bleaching), மீன் இனங்களின் இடப்பெயர்வு மாற்றம், பாசிப் பெருக்கம் (Algal Blooms), ஒட்சிசன் குறைந்த வலயம் (Dead Zones) உருவாதல் மற்றும் நீர்க் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.அத்துடன், வறட்சியின் விளைவாக ஆற்று நீர்மட்டம் குறைவதாலும், ஆற்று அமைப்புகளில் கடல்நீர் கலப்பதாலும் குடிநீர் விநியோகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும், இந்த சுற்றுச்சூழல் மாற்றங்களால் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்களில் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாப்பதற்கு நாரா நிறுவனம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனங்களுக்கு இடையே மேலும் திறமையான ஒருங்கிணைப்புப் பொறிமுறையை நிறுவ வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், எதிர்காலத்தில் ஏற்பட் கூடிய எல் நினோ (El Niño) சூழ்நிலையை வெற்றிகரமாக முகங்கொடுக்க கடல்சார் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல், விஞ்ஞான ரீதியான தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவித்தல் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய கடல் முகாமைத்துவத் திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்த ஒன்றியம் வலியுறுத்தியது.காலநிலை மாற்றம்  ஈரூடகவாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள், இனப்பெருக்க முறைகள் மற்றும் அவற்றின் உயிர்வாழ்க்வையும் பாதிக்கின்றன என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை தவளைகள் உட்பட பல ஈரூடகவாழ் உயிரினங்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும், மேலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையையும் பாதிக்கக்கூடும் என்றும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks