logo

E   |   සි   |  

2025-03-05

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று (மார்ச் 04) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பிரதிசபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதிலுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதற்கமைய தற்பொழுது வைத்தியசாலைகளில் பயன்படுத்தாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அம்பியூலன்ஸ் வண்டிகளில் உள்ள குறைபாடுகளைச் சீர்செய்து அவற்றை நோயாளிகளின் பராமரிப்புச் சேவைக்குப் பயன்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், அவ்வாறு குறைபாடுள்ள அம்பியூலன்ஸ் வண்டிகளை அரசாங்கத்திற்குச் செலவு இன்றி, தனியார்துறை மட்டத்தில் சீர்செய்து பயன்படுத்துவதற்குக் காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பினர். இது தொடர்பான நிலைமைகளை ஆராய்ந்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க முடியும் என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிய அளவிலான பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய வாகனங்களுக்காக மாகாண மட்டத்தில் சுகாதார அமைச்சின் சிறிய பராமரிப்பு அலகுகளை அமைப்பது பொருத்தமானது எனத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க, அதன்படி முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் அவ்வாறானதொரு அலகொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச ஒசுசலவொன்றை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்குப் பொருத்தமான இடம் மற்றும் காணி அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒசுசலவை விரைவில் அமைக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத வைத்தியசாலைகளின் கட்டுமானத்தை முடிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது. பிராந்திய வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள், மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களின் இடமாற்றங்கள் போன்ற  பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வெகுசன ஊடக அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, ரஜரட்ட பிராந்திய வானொலி ஒலிபரப்பை தொடர்ந்தும் நடாத்திச் செல்வதா என அதிகாரிகளிடம் கௌரவ உறுப்பினர்கள் வினவினர். தற்பொழுது ரஜரட்ட வானொலி பல சிரமங்களுக்கு மத்தியில் ஒலிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதனை நிறுத்துவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், வானொலியை மீண்டும் உயர் மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். ரஜரட்ட சேவைக்கு தன்னார்வமாக வளங்களை வழங்குவதற்கு கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் குழு தயாராக இருப்பதாகவும், அதற்கு இணைவதற்கு ஒரு முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட விடயப்பொறுப்பைக் கொண்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவை ஒரு அமர்வாக நடத்தாமல் இரு அமர்வுகளாக நடத்துமாறு கௌரவ உறுப்பினர்கள் இதன்போது முன்மொழிந்தனர்.   அதற்குப் பதிலளித்த குழுவின் தலைவர், அமைச்சின் இரண்டு விடயப்பொறுப்புகள் பற்றி சிறிய காலத்தில் பரவலாகக் கலந்துரையாடுவது கடினமானது எனவும் உறுப்பினர்கள் குறிப்பிட்டது போன்று, எதிர்காலத்தில் இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட இரண்டு விடயப்பொறுப்புகள் பற்றி வேறு வேறாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks