logo

02

E   |   සි   |  

2025-02-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை  இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
 
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார். உரிய அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கமைய, தேவையான பாதுகாப்பை வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும், உறுப்பினர்களுக்குக் காணப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தற்போது ஆராய்ந்து இறுதி அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு  தேவையெனின், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், பிரதானமாக போதைப்பொருள் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பாதாள உலக செயற்பாடுகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படும் இந்தப் பாதாள உலக செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கைது செய்து, நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் குறைக்கப்படும் என்று தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த குழுவின் தலைவர், வரவுசெலவுத்திட்டத்தில் சதவீத அடிப்படையில் சம்பளக் குறைப்பு காட்டப்பட்டாலும், எந்த அதிகாரியினதும்  சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என்றும், நிச்சயமாக சம்பள உயர்வு மட்டுமே ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரச சார்பற்ற நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் திட்டங்களை முறையான ஒழுங்குமுறையுடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல, பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-07-16

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021–2024 கணக்காய்வாளர் தலைமையதிபதியின் யகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து “கோபா” குழுவில் விரிவாக ஆராயப்பட்டது

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

தேசிய இளைஞர் கொள்கை வரைபு தொடர்பாக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கவனம்

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பது மற்றும் நிர்வாக மறுசீரமைப்புகளை துரிதப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய  ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்  கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் பிரதி குழுக்களின் தலைவர் கௌரவ ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


2026-07-13

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு சட்டத் திருத்தங்கள் அவசியம் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியம் வலியுறுத்து

பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்தபட்சம் 33 சதவீதமாக அதிகரிப்பதற்குத் தேவையான கொள்கை மற்றும் சட்ட ரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது தொடர்பாகவும், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுப் பட்டியல்களில் மட்டுமன்றி, தேர்தலில் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களிடையேயும் குறைந்தபட்சம் 33 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.இந்த முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.மேலும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக வேட்புமனுப் பட்டியல் மட்டத்தில் அல்லது கட்டாய ஆசன ஒதுக்கீட்டின் மூலம் அல்லது கலப்பு தேர்தல் முறைமையின் கீழ் பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் குழு உறுப்பினர்களின் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் போது காணப்படும் சமூக மனப்பாங்குகள், தேர்தல் செலவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவு போன்ற சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாமிந்திராணி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினீ குமாரி விஜேரத்ன, சட்டத்தரணி சாகரிகா அத்தாவுத, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, சட்டத்தரணி ஹசாரா லியனகே, தீப்தி வாசலகே, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி கீதா ஹேரத் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks