01

E   |   සි   |  

2025-02-21

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசேட கோப் உபகுழு

  • ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் கோப் குழுவில் ஆஜர்
  • தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை தெளிவாகின்றது – கோப் குழு
  • இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளருக்கு அப்பதவிக்கான நியமனத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதி இல்லையென்பதும் உறுதியானது
  • முன்னாள் ஜனாதிபதியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு நிதி மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது – குழு உறுப்பினர்கள்
  • முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது கடமையை மேற்கொண்ட விதம் குறித்து திருப்தியடைய முடியாது – கோப் குழு
  • அரசாங்க அதிகாரிகள் தமது கடமையைச் சரியாகச் செய்வதன் மூலம் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்  - கோப் குழுவின் தலைவர் அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு கோப் உப குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை யூத் சேர்விஸ் (தனியார்) நிறுவனத்தின் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, தற்போதைய செயலாற்றுகை மற்றும் 2021 நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுவில் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் நேற்றையதினம் (பெப். 20) கூடியபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 18ஆம் திகதி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கோப் குழு கூடியதுடன், இதில் பல்வேறு முறைபாடுகள் பற்றிய விபரங்கள் வெளிப்பட்டிருந்தன. இதற்கு அமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்களைக் கோப் குழு முன்நிலையில் அழைத்து விசாரணைகளைத் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் தேவையான அதிகாரிகளை் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடியான செயற்பாடுகள் பல வெளிப்பட்டதுடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக கோப்  உபகுழுவொன்றை நியமிக்க குழுவின் தலைவர் தீர்மானித்தார். இதற்கு அமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சியின் தலைமையில் கௌரவ உறுப்பினர்களான சமன்மலி குணசிங்க, ஜகத் மனுவர்ன, சுனில் ராஜபக்ஷ, அசித நிரோஷன எகொட விதான மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரைக் கொண்டதாக கோப் உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த உபகுழுவினால் விசாரணைகள் நடத்தப்பட்டு அதன் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

ஸ்மார்ட் யூத்’ கண்காட்சி மற்றும் இசைநிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட ரூ.188 மில்லியனுக்கான காசோலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரினால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டமை தொடர்பில் முதல்நாள் உறுதிப்படுத்தப்பட்ட விடயம் குறித்து சம்பந்தப்பட்ட முன்னாள் தலைவர் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமையால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளுக்காக இந்தக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறும் விடயம் பற்றி ஆச்சரியமடைவதாகவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட தினத்தில் பி.ப 2 மணி முதல் பி.ப 5 மணிவரையான காலப்பகுதிக்குள் இந்தக் காசோலையை உறுதிப்படுத்தித் தருமான முன்னாள் தலைவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய முன்னாள் தலைவர் அழுத்தத்தைப் பிரயோகித்திருப்பது தெளிவாகப் புலப்படுவதாக குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவருக்கு ஆகக் குறைந்த அடிப்படைத் தகுதியும் இல்லையென்பதும் குழுவில் புலப்பட்டது. குறித்த பதவிக்கான நியமனத்தைப் பெற பட்டம் பெற்றிருப்பது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும், குறித்த தனிப்பட்ட செயலாளரிடம் தகுதியை உறுதிப்படுத்துமாறு கோரியபோதும் அதனை அவர் உறுதிப்படுத்தவில்லையென்றும், அதனால் குறித்த பதவியை அவர் இராஜினாமாச் செய்தார் என்பதும் குழுவின் விசாரணைகளில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் குழுவில் ஆஜராகியிருந்ததுடன், அவரிடம் குழு விசாரணைகளை நடத்தியது. அப்போது தான் பட்டக்கல்வியைப் பயின்று வந்ததால் பட்டத்தைப் பூர்த்திசெய்திருக்கவில்லையென்றும் பதிலளித்தார். அத்துடன், அவர் அந்தப் பதவியிலிருந்து விலகி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையில் பணியாற்றியதாகவும் இங்கு தெரியவந்தது. இந்த நபர் பல்வேறு விடயங்களில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர் சேவைகள் மன்றத்தினால ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்மார்ட் யூத் புத்தாண்டு விழா தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. சரியான நடைமுறையைப் பின்பற்றாது இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டமை இங்கு தெரியவந்ததுடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவருடைய தேவைக்காக இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாவதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், விநியோகஸ்தர்களை இணைத்துக்கொண்டமை குறித்து குழு வினவியதுடன், இதற்குப் பதிலளித்த முன்னாள் தலைவர் தனக்கு ஏராளமான கடிதங்கள் கிடைப்பதாகவும், அவற்றை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆற்றுப்படுத்தியதாகவும் கூறினார். இந்த நிகழ்வுக்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்த செயல்முறை ஒழுங்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெளிவாகிறது என்று கோப் குழு சுட்டிக்காட்டியது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பிரசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டமை புலனாவதாக கோப் குழு, இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரிடம் சுட்டிக்காட்டியது. எனினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதுவரை முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து விளையாட்டை மாத்திரம் நோக்காகக் கொண்டு ஸ்மார்ட் ஃபியஸ்டா திட்டம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், பெயர் மாற்றம் செய்யப்பட்டு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த ஸ்மார்ட் ஃபியஸ்டா நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சித் தயாரிப்புக்காக 43 இலட்சம் ரூபா செலவுசெய்யப்பட்டபோதும் தயாரிப்பின் வீடியோ இளைஞர் சேவைகள் மன்றத்திற்குக் கிடைக்கவில்லையென்பதும் குழுவில் தெரியவந்தது. எனினும், இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு குறித்த வீடியோ கிடைத்ததாக முன்னாள் தலைவர் தெரிவித்தார். இது பற்றி ஆராயுமாறு குழு அறிவுறுத்தியது.

மேலும், தேசிய இளைஞர் பொசன் வலயம் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் இளைஞர் சந்திப்பு நிகழ்வை நடத்தியமை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளுக்காக டபிள்யூ.டி.வீரசிங்க அறக்கட்டளையின் தொடர்பு குறித்து குழு ஆராய்ந்தது. அத்துடன், பெல்வுட் நுண்கலைக் கல்லூரியை புனரமைத்தல் மற்றும் புதிய கட்டடம் அமைப்பது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு கூடிய கோப் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்கள் குறித்து நீண்ட நேரம் குழு கலந்துரையாடியதுடன், முன்னாள் நிதிப் பணிப்பாளர் தனது பதவியில் நடந்துகொண்ட விதம் குறித்து திருப்தியடையவில்லையெனக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், அரசாங்க அதிகாரிகள் தமது கடமைகளைச் சரியாகச் செய்வதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம். அஸ்லம், சமன்மாலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, சுஜீவ திசாநாயக்க, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, ஜகத் மனுவர்ன, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மபிரிய விஜேசிங்க, அசித நிரோஷ எகொட விதான, திலின சமரக்கோன், சந்திமா ஹெட்டியாராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் பங்கேற்றனர்.



தொடர்புடைய செய்திகள்

2026-11-14

ஸ்ரீலங்கன் விமான சேவையை இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவர ஐந்தாண்டுத் திட்டம் – விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கடன் சுமையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் கவனம்

ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, அதிகளவிலான விமானப் பயணத் தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைத் தாமதங்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.குறித்த குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள விமானச் சேவையின் விமானத் தொகுதி போதுமானதாக இல்லாமை மற்றும் அந்த விமானங்கள் சுமார் 12 வருடங்கள் பழைமையானவையாக இருப்பதால் விமானப் பயணங்களைப் பாதிக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஒரு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு காரணங்களால் தாமதம் ஏற்படும்போது, மாற்று விமானங்களைப் பயன்படுத்துவதில் காணப்படும் மட்டுப்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து வலையமைப்பும் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.விமானங்களைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வழமையான கொள்வனவு நடைமுறைகள் தோல்வியடைந்தமை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்டகாலத் தாமதங்கள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலைக்குத் தீர்வாக விமானங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கொள்வனவு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கொள்வனவு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்காக அமைச்சு மட்டத்தில் விசேட கொள்வனவுப் பிரிவொன்றும் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.புதிய கொள்வனவு வழிகாட்டுதல்களின் கீழ் விமானத் தொகுதியை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதமளவில் புதிய குறுகிய உடற்பகுதியைக் கொண்ட (Narrow-body) விமானமொன்றையும், அகன்ற உடற்பகுதியைக் கொண்ட (Wide-body) இரண்டு விமானங்களையும் விமானத் தொகுதியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் கலந்துரையாடப்பட்டது. 2029ஆம் ஆண்டளவில் விமானத் தொகுதியை ஆகக்குறைந்தது 29 விமானங்களாக அதிகரிப்பது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்காகும் என்றும் குறிப்பிடப்பட்டது.ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக, பழைய வங்கிக் கடன்கள் மற்றும் பிணைமுறிக் கடன்கள் உள்ளிட்டவற்றைப் பொறுப்பேற்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை திறைசேரி முன்னெடுத்துள்ளதாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், விமானங்களுக்கான குத்தகைக் கட்டணங்களைக் குறைத்தல், எரிபொருள் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விமான சேவையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வர்த்தக உபாயங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி நிலைமை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச விமான சேவைகளுடனான போட்டித்தன்மை ஆகியனவும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயற்பாடுகள் மற்றும் வருமானத்தில் தாக்கம் செலுத்துவதாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு, புதிய முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்ளுதல், அரச-தனியார் பங்காண்மையை ஏற்படுத்துதல் அல்லது அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து நிர்வகித்து, அதன் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.அதற்கமைய, அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவையை அதன் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கும் அமைச்சுக்கும் சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, நளின் பண்டார ஜயமஹ, ரவீந்திர பண்டார, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, தனுஷ்க ரங்கநாத், ஜகத் விதான, சாந்த பத்ம குமார சுபசிங்க மற்றும் சட்டத்தரணி கீதா ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-11-14

இலங்கையின் இறக்குமதி வரிக் கொள்கைகள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் வழி வகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது

இலங்கையின் இறக்குமதி வரிக் கொள்கைகள் மற்றும் வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க அவர்களின் தலைமையில் கூடிய வழி வகைகள் பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.வணிகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (பதில்) சோமசேன மகாதிவுல்வேவ அவர்கள் இது பற்றிய விரிவான விளக்கத்தைக் குழுவுக்கு வழங்கினார். இலங்கையின் இரு தரப்பு மற்றும் பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகளின் நிலைமைகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.கலந்துரையாடல் மட்டத்தில் இருக்கும் வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து சாத்தியக் கூற்று ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழு வலியுறுத்தியது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, எரங்க வீரரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக சபுமல் ரண்வல, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சதுர கலப்பதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


2026-11-13

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை  அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும். பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு குழு அங்கீகாரம் வழங்கியது. குழுவின் உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 


2026-11-13

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் உபகுழுவில் ஆராய்வு

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் விரிவாக ஆராயப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இது பற்றி ஆராயப்பட்டது.அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள், முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையில் 2014 ஒக்டோபர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் “புதிய நியமனம்” எனக் கருதப்படுவதன் காரணமாக சம்பள முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக அதிபர் சேவையில் உள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, சம்பள அதிகரிப்புகளுக்கு இடையிலான பாரிய வேறுபாடு காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைவதாக அவர்கள் குறிப்பிட்டார்.  அத்துடன், 03/2014 சுற்றறிக்கையின் மூலம் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக சரிசெய்தல் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது ஆசிரியர் சேவையில் தொடர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய உயர்ந்த சம்பள அதிகரிப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சம்பள இடைவெளி ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.இதன் காரணமாக ஆசிரியர் சேவையின் முதலாம் மற்றும் 2-Iஆம் தரங்களில் உள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.இது விடயம் தொடர்பில் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து சம்பள ஆணைக்குழுவுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உபகுழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அது மாத்திரமன்றி, அதிபர் சேவையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு மற்றும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் உபகுழு இங்கு தீர்மானித்தது. இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, சுகத் வசந்த.த சில்வா மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர். 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks