பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2025-02-21
செய்தி வகைகள் : குழு செய்திகள்
இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களை மேம்படுத்துவதற்கு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அதற்கமைய, வியாட்டுத்துறை பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாபலகம, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இளைஞர் விவகாரங்கள் பற்றிய உப குழுவுக்கு, ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, தினிந்து சமன் மற்றும் கோசல நுவன் ஜயவீர ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஏனைய உறுப்பினர்களுக்கும் தன்னார்வ அடிப்படையில் இந்த உப குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடிய போதே இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் இளைஞர் விவகாரங்கள் கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவும் கலந்துகொண்டார்.
இதன்போது நாடு பூராகவும் காணப்படும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் அத்துறையை வலுப்படுத்துவதற்குத் தேவையான முன்மொழிவுகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சிறுவர்களின் விளையாட்டுத்துறை தொடர்பான ஆர்வம் மேம்பட்ட நிலையில் இல்லாமை மற்றும் அதனால் அவர்கள் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் போக்கு ஏற்பட்டுள்ளதாக கௌரவ உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அதனால் விளையாட்டுக்கள் மீது சிறுவர்களை ஈடுபடுத்தும் வகையில் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுக்கள் இந்நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் பிரதான காரணியாகும் எனத் தெரிவித்ததுடன், இந்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். விளையாட்டுத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சுக்கு எழுத்து மூலமாக அறிவிக்குமாறும், நாட்டின் விளையாட்டு மேம்பாட்டிற்காக, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் போர்வையில் இடம்பெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சிறு வயதிலிருந்தே பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை அடையாளம் கண்டு, அந்தத் தகவல்கள் ஒரே தரவுக் கட்டமைப்பில் இல்லாமை குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, அந்தத் தகவல்கள் ஒரு கட்டமைப்பில் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் தற்பொழுது தன்னார்வ மென்பொருள் பொறியியலாளர் ஒருவரினால் தகவல்களை சேகரிக்கும் கட்டமைப்பை தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இளைஞர் விவகாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விடயங்களை முன்வைத்தனர். அதற்கமைய, அந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கையை குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிக்கையை ஆராய்வதற்குக் காலம் தேவை என்பதால், எதிர்வரும் காலத்தில் அந்த அறிக்கையை மீண்டும் குழுவில் கருத்திற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-06-22
எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளின் பாதிப்புக் காரணமாக இலங்கையின் கடல் வாழ் பல்லுயிர்கள் மற்றும் ஈரூடகவாழ் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.காலநிலை மாற்றத்தினால் குறிப்பாக எல் நினோ நிலைமை, இலங்கையின் சமுத்திக் கட்டமைப்பு, கரையோரம், பல்லுயிரினம் மற்றும் கரையோர சமூகங்களின் வாழ்வாதார போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதினால் பவளப் பாறைகள் வெளுத்தல் (Coral Bleaching), மீன் இனங்களின் இடப்பெயர்வு மாற்றம், பாசிப் பெருக்கம் (Algal Blooms), ஒட்சிசன் குறைந்த வலயம் (Dead Zones) உருவாதல் மற்றும் நீர்க் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.அத்துடன், வறட்சியின் விளைவாக ஆற்று நீர்மட்டம் குறைவதாலும், ஆற்று அமைப்புகளில் கடல்நீர் கலப்பதாலும் குடிநீர் விநியோகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும், இந்த சுற்றுச்சூழல் மாற்றங்களால் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்களில் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாப்பதற்கு நாரா நிறுவனம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனங்களுக்கு இடையே மேலும் திறமையான ஒருங்கிணைப்புப் பொறிமுறையை நிறுவ வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், எதிர்காலத்தில் ஏற்பட் கூடிய எல் நினோ (El Niño) சூழ்நிலையை வெற்றிகரமாக முகங்கொடுக்க கடல்சார் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல், விஞ்ஞான ரீதியான தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவித்தல் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய கடல் முகாமைத்துவத் திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்த ஒன்றியம் வலியுறுத்தியது.காலநிலை மாற்றம் ஈரூடகவாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள், இனப்பெருக்க முறைகள் மற்றும் அவற்றின் உயிர்வாழ்க்வையும் பாதிக்கின்றன என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை தவளைகள் உட்பட பல ஈரூடகவாழ் உயிரினங்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும், மேலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையையும் பாதிக்கக்கூடும் என்றும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks