2024-07-23
கடந்த ஒரு வருடகாலத்தில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதும், 27/2023 அரச நிர்வாக சுற்றுநிருபத்திற்கு அமைய நடவடிக்கை எடுப்பதும் சகல அரசாங்க அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத்குமார சுமத்திராரச்சி தெரிவித்தார்.
வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (ஜூலை 11) ஆம் திகதி கூடியபோதோ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, மேல் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கத்தின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். குழுவின் தலையீட்டின் மூலம் வெளியிடப்பட்ட 27/2023 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமையை அரசாங்க நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2023ஆம் ஆண்டின் செயலாற்று அறிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேர்தல்களின் போது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கும் வகையில் விரல்களில் வர்ணம் பூசுவது அனாவசியமானது என்ற குழுவின் முன்னைய அறிவுறுத்தல் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு அமைய விரல்களில் பூசப்படும் வர்ணங்களை இறக்குமதி செய்வதை இரத்துச் செய்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனை இந்தச் சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்தாதிருக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். கைவிரல்களில் வர்ணம் பூசும் செயற்பாட்டை நீக்கினால் அதிக பணம், நேரம் மற்றும் உழைப்பு மீதப்படுத்தப்படும் என்பது இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்படி, தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான அனைத்து முன்மொழிவுகளையும் குழுவில் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் இயலாமையுடைய நபர்களுக்காக மேலும் பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்காக தேர்தல் தொடர்பான 320 சொற்களைக் கொண்ட புதிய சைகை மொழி சொற்களஞ்சியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இயலாமையுடைய சமூகத்தின் செயல்பாடுகளுக்கு அணுகல் வசதிகள் உள்ளிட்ட அதிகபட்ச வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்க சேவை குறித்து சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சு மட்டத்தில் தனியான அதிகாரிகளை நியமித்து விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்துமாறும் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தும் அரசாங்க நிறுவனங்களைப் பாராட்டுவதாகவும் குழுவின் தலைவர் கௌரவ ஜகத்குமார சுமத்திராரச்சி தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பில் அதிபர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பதிவாளர் நாயகம் அலுவலகத்திலிருந்து ஓய்வூதியம் செலுத்தும் போது உயிரிழக்கும் நபர்களின் பெயர் விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. வாழ்க்கைச் சான்றிதழைப் பெறுவதில் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பதுடன், மேலும் வெளிப்படைத் தன்மையுடன் பணியை மேற்கொள்வதற்கான திறனை உறுதிப்படுத்துவதாகவும் குழு சுட்டிக்காட்டியது.
எரிபொருள் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கான நியாயமான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் சூத்திரத்தைத் தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
ரயில்வே பணிப்புறக்கணிப்பின் போது சில விசேட ரயில்களை இயக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இந்நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் என்பதால், சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ ரோஹன பண்டார, கௌரவ ஜயந்த வீரசிங்க, கௌரவ மர்ஜான் ஃபலீல், கௌரவ டபிள்யூ.எச்.எம். தர்மசேன ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-10-15
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் கௌரவ பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.இங்கு பெருந்தோட்டத்துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். பெருந்தோட்டக் காணிகளில் பயன்படுத்தாத பகுதிகளைப் பயன்படுத்துவது, பெருந்தோட்டங்களில் உள்ள மக்களுக்கு காணப்படும் காணிப் பிரச்சினை, வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-10-15
கொழும்பு துறைமுக நகரில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு (BSI) வழங்கப்பட்டுள்ள அங்கீகாரங்கள், எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (ஒக். 08) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோருடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், அஜித் அகலகட, எம்.கே.எம். அஸ்லம், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலிண சமரகோன் மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களாக (BSI) அண்மையில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வணிகங்கள் மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இங்கு முன்வைக்கப்பட்டதுடன், துறைமுக நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றின் விற்பனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.கொழும்பின் பிரதான வர்த்தக வலயத்திற்கு அண்மித்த பகுதியில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 9 காணித்துண்டுகள் இதுவரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 6 காணித்துண்டுகளைக் குத்தகைக்கு விடுவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.அத்துடன், அரசாங்கத்திற்குச் சொந்தமான 4 காணித்துண்டுகளை, மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் ஏழில் ஒரு பங்கிற்குச் சமமான அளவில், சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்திற்குச் சொந்தமான காணித்துண்டுகள் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் விளக்கமளித்தனர்.இந்தக் காணிகள் 99 வருட காலப்பகுதிக்குக் குத்தகைக்கு வழங்கப்படுவதுடன், ஒரு சதுர மீற்றரின் சராசரி பெறுமதி 3,000 அமெரிக்க டொலர்களாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மொத்தக் குத்தகைத் தொகையில் 1 சதவீதத்திற்குச் சமமான 398 மில்லியன் ரூபா இதுவரை ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.துறைமுக நகரில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பயனாளி உரிமையாளர்களை அடையாளம் காணுதல், வெளிநாட்டு முதலீடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்குமுறைச் செயன்முறைகள் தொடர்பிலும் குழு ஆராய்ந்தது.அதேவேளை, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான விசா பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு சுமார் 14,300 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட தகவல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களைக் கண்காணிப்பதற்கான நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது.துறைமுக நகரில் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் நாட்டின் சர்வதேச நற்பெயரைப் பாதுகாப்பதற்கும் உரிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புத் திட்டங்களில் வீடுகளை வாங்குவதற்கு எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களால் முன்கூட்டியே செலுத்தப்படும் பணத்தின் (Pre-Sale Deposits) பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழு விளக்கம் கோரியது. இதன்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் அத்தகைய பணம் குறித்த திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் மற்றும் அப்பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் எஸ்க்ரோ (Escrow) கணக்கு முறைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், துறைமுக நகருக்குக் கிடைத்துள்ள உண்மையான வெளிநாட்டு முதலீட்டின் அளவு, அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பான தகவல்களும் குழுவில் கலந்துரையாடப்பட்டன.
2026-10-14
தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்துவது தொடர்பான பொதுமக்களின் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்ற விசேட குழுவிடமர் சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்னவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அண்மையில் கூடியபோதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 31 முன்மொழிவுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பாக முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்களின் அறிக்கைகளையும் ஆழமாக மீளாய்வு செய்து அறிக்கையிடுவதற்கான நிபுணர்கள் குழுவில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சாமிந்த அபேசிங்க, எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினர் கலாநிதி கே.தவலிங்கம், மற்றும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயவரத்ன குறிப்பிடுகையில், முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் மற்றும் கருப்பொருள்கள் தொடர்பில் தனித்தனியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.தற்போது அரசியல் கட்சிகளினாலும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அத்துடன் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள அனைத்து கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் மீளாய்வு செய்து, இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பிரஜைகள் மற்றும் பொதுமக்களுக்கு தமது திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதேவேளை, தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவும் குழு தீர்மானித்துள்ளது. அத்துடன், பொது மக்களின் கருத்துக்களை மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்தவர்கள் விரும்பினால் அவர்களின் தனிப்பட்ட முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும் என்றும் குழு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தின் பின்னர் குழுவின் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, கௌரவ பிரதியமைச்சர்களான சட்டத்தரணி சுனில் வட்டகல, முனீர் முலாபர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி.அலவத்துவல, கதிரவேலு சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயக்கொடி, சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-10-08
NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறுதி தணிக்கை அறிக்கை தொடர்பில், அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த 06ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில், NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் கண்டறியப்பட்ட அசாதாரண நிலைமைகள், கணக்காய்வு செயற்பாட்டில் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் அது தொடர்பான தணிக்கை அறிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, அர்கம் இலியாஸ் மற்றும் நிஷாந்த ஜயவீர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அலககட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, எம்.கே.எம். அஸ்லம், சம்பிக ஹெட்டிஆராச்சி மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.இங்கு, இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபையானது (SLAAMB) மேற்கொண்ட விசாரணையின் கண்டறிதல்கள் மற்றும் Deloitte Touche Tohmatsu India LLP நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, NDB வங்கியின் நிதி அறிக்கைகளில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளை அடையாளம் காண்பதில் வெளியக கணக்காய்வாளர்கள் தவறியமை தொடர்பிலும் குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.குறித்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நிறுவன நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பாக சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பொறுப்புக்கூறல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.அத்துடன், NDB வங்கியின் கணிசமான பங்குகள் அரச மற்றும் பொதுமக்கள் நிதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதால், இவ்வாறான நிதி முறைகேடுகளினால் அரச நிதி மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.நிதி முறைமையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக LankaPay ஊடாக மத்தியப்படுத்தப்பட்ட மோசடி கண்காணிப்பு முறைமையொன்றை நிறுவுவதற்கான முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஒவ்வொரு வங்கியிலும் இடம்பெறும் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்காக வங்கி மட்டத்தில் மோசடி கண்காணிப்பு முறைமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதன்படி, NDB வங்கியில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பான இறுதிக் கணக்காய்வு அறிக்கையில் பின்வரும் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:1) இந்தக் கணக்காய்வு 2016.04.01 முதல் 2026.03.31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ரூ. 13,639,664,684/- (ரூ. 13.6 பில்லியன்) பெறுமதியான மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.2) 2026.09.29 அன்று மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தலின்படி, மோசடி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நிதித் தாக்கம் பின்வருமாறு:2025.01.01க்கு முன்னைய காலப்பகுதிக்கு – ரூ. 1.5 பில்லியன்2025ஆம் ஆண்டில் – ரூ. 9.6 பில்லியன்2026.03.31இல் முடிவடைந்த காலாண்டுக்கு – ரூ. 2.5 பில்லியன்3) 2026.04.06 அன்று NDB வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப வெளிப்படுத்தலுடன் ஒப்பிடுகையில், அறிவிக்கப்பட்ட மோசடி தொகை ரூ. 13.2 பில்லியனிலிருந்து ரூ. 13.6 பில்லியனாக ரூ. 0.4 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2026.06.22 திகதியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் 2026.06.26 அன்று NDB வங்கியினால் வெளிப்படுத்தப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த மேலதிக மோசடி தொகை ரூ. 60 மில்லியனாகும்.4) இந்த மோசடி சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முன்னர் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களில் குறிப்பிடப்பட்டிருந்தமை இறுதிக் கணக்காய்வு அறிக்கையினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.5) CEFT பரிவர்த்தனைகளைச் செயற்படுத்துதல், அடிப்படை வங்கியியல் முறைமையில் (Core Banking System) பயனர் மட்டத்திலான செயற்பாடுகள் (User Activities) மற்றும் பயனர் அணுகல் தகவல்களை (User Credentials) நிர்வகித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய NDB வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பில் காணப்பட்ட பல குறைபாடுகள் இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், பரிவர்த்தனை கண்காணிப்பு (Transaction Monitoring), நாளாந்த கணக்கிணக்கம் (Reconciliation), நிதி இணக்கப்பாடு (Compliance), உள்ளகக் கணக்காய்வு, கிளை வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் (Operational Risk Management) உள்ளிட்ட பல செயற்பாட்டுத் துறைகளிலும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.6) வங்கியின் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் காணப்படும் நிர்வாகக் கட்டுப்பாட்டு முறைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகள் இந்தக் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.