2024-06-27
செய்தி வகைகள் : குழு செய்திகள்
மினுவாங்கொட பிரதேச செயலகத்தில் சேவையாற்றிய முகாமைத்துவ உதவியாளர் மேற்கொண்ட நிதி மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. 2011 முதல் 2013 ஜூலை மாதம் வரையில் 14 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தொகையை குறித்த முகாமைத்துவ உதவியாளர் மோசடி செய்துள்ளார். இருந்தபோதும் 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மோசடி குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகான உத்தரவு 2015ஆம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒழுக்காற்று விசாரணையின் பின்னர், குறித்த அதிகாரி மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, மோசடி செய்யப்பட்ட தொகை தவணை முறையில் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்து குழு அதிருப்தியை வெளியிட்டது.
2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் கம்பஹா மாவட்ட செயலகத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அண்மையில் (20) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் பணியை முறையாக கண்காணிக்காமையே இந்த மோசடிக்கு முக்கிய காரணம் என தேசிய கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பான மோசடியை தீர்த்து வைப்பதற்காக குறித்த அதிகாரியின் ஓய்வூதிய கொடுப்பனவும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், இவ்வாறு பொது நிதியை மோசடி செய்யும் அதிகாரிகள் இனங்காணப்படும் போது, முதலில் அவர்களை சேவையிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கணக்காய்வு அதிகாரிகள், அவ்வாறு செய்யப்படாமை தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டனர். இதன்படி, அதிகாரிகள் மீண்டும் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத வகையில் செயற்படுமாறும், மோசடியில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தல் வழங்கியது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் பயனாளிகள் மரணமடைந்த பின்னரும் அவருக்கு உரித்தான ஓய்வூதியப் பணத்தைப் பெற்று மோசடி செய்தமை தொடர்பில் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகங்களில் 2023 டிசம்பர் 31ஆம் திகதி வரை ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்த 419 ஓய்வூதியர்களுக்கு 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமையும் குழுவில் தெரியவந்தது. இறப்புக் குறித்து அறிவிப்பதில் தாமதம், உயிருடன் இருப்பதற்கான அத்தாட்சிப் பத்திரம் வழங்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை, ஓய்வூதியம் பற்றிய சுற்றறிக்கையை கடைபிடிக்காமை மற்றும் ஏனைய காரணங்களால் இவ்வாறு பண மோசடி இடம்பெற்றிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவுறுத்தியது.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் செயலற்ற திட்டங்கள் குறித்தும் குழு கலந்துரையாடியது. வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் உரிய காலத்தில் பயன்படுத்தப்படாமையால் சிக்கல் நிலைகள் ஏற்படுவதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன்படி, பகுதியளவில் முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது மற்றும் பகுதியளவு முடிக்கப்பட்ட திட்டங்களின் தேவைகள் குறித்தும் குழுவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு மஹர பிரதேச செயலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போனமை குறித்த விடயத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்த மோசடி இடம்பெற்று 10 ஆண்டுகளாகியும் இதுவரை உரிய அதிகாரிகளிடம் பணம் வசூலிக்கப்படவில்லை ஏன் என்பது குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரை நினைவுபடித்தி அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மீண்டும் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவுறுத்தியது.
இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கௌரவ பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ ஜயந்த கெட்டகொட, கௌரவ மதுர விதானகே, கௌரவ சஹான் பிரதீப் விதான, கெளரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-06-09
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (COPA) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இன்றைய தினம் (ஜுன் 09) வழங்கப்பட்டது.இந்த அறிக்கை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை உள்ளடக்கியுள்ளதுடன், இது 2025 ஜூலை 25 ஆம் திகதி வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 இன் கீழ் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, தொடர்புடைய அறிக்கை நிதி அமைச்சரினதும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் அவதானிப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவ்வமைச்சர்களின் பதில்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், 2026 மார்ச் 04 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இவ்விடயங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன.அதன்போது, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்காகப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய, “அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய, 2025 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 ஐக் கொண்ட அறிக்கை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்” எனும் பிரேரணைக்கு பாராளுமன்றத்தினால் இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டது.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கையொன்று, இதற்கு முன்னர் சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்குமாக இவ்வாறு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், இத்தகையதொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
2026-06-08
2018ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நிதிச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான நிதி (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியதுடன், இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.இலங்கையில் தொலைத்தொடர்பு துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிப்பது மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தியை மேம்படுத்துவது என்ற இலக்கை அடைவது இத்திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவில் புதிதாக அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அறவிடப்படும் வரியில் தற்காலிக நிவாரணம் வழங்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இச்சட்டமூலத்தில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னல் அமுலுக்கு வரும் வகையில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஐந்தாண்டு வரி விலக்கு அளிப்பது முக்கிய அம்சமாக உள்ளது.அத்துடன், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீடு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய வரி விகிதத்தை சட்டரீதியாக ஒழுங்குமுறைப்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது, வரி ஏய்ப்பின் போது (Bad Debts) பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை விளக்குவது மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி விகிதம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வரி முகாமைத்துவத்தை வெளிப்படைத்தன்மையாக முன்னெடுப்பது இதன் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இங்கு வரி விகிதத்தை முறைப்படுத்துவது மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான திருத்தத்திற்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டதுடன், செலுத்தப்படாத கட்டணங்கள் மீதான வரிகளைத் (Telecom Levy) குறைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய வாடிக்கையாளர்களினால் வரி செலுத்தப்படாத சந்தர்ப்பங்களில் வரியைக் கணக்கிடுவது தொடர்பில் தெளிவான ஏற்பாடுகள் இன்மையால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாத கட்டணங்களிலிருந்து வரிகளைக் கழிப்பதற்கு சேவை வழங்குனர்களுக்கு அனுமதி அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இருப்பினும், சிறு வணிகங்களுக்கு இதுபோன்ற நிவாரணம் கிடைக்காத சூழலில், ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிவாரணத்தை வழங்குவது நியாயமற்றது என்று குழு வலியுறுத்தியது. ஒரு பெரிய நிறுவனம் 2022-ஆம் ஆண்டிலிருந்து இந்த வரி நிவாரணத்தைக் கோரி வருவதாகவும், இது சந்தையின் ஒட்டுமொத்த நேர்மைக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. நுகர்வோரிடமிருந்து வரிகளை வசூலிப்பது நிறுவனங்களின் பொறுப்பு என்றும், அவர்கள் தவறுவது அரசாங்க வருவாயைக் குறைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது என்றும் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார். இதற்கமைய செலுத்தப்படாத கட்டணங்களுக்கான வரி விலக்கு அளிப்பது தொடர்பில் மேலும் விளக்கங்களைப் பெறவேண்டியிருப்பதால் இது குறித்த விதியைப் எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அதேநேரம், இணையவழி கசினோ நடவடிக்கைகளுக்கு அரசாங்க முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவதும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கையின் அரசாங்க முத்திரையைப் பயன்படுத்தி "உரிமம் பெற்றது" என்று குறிப்பிடும் இணையவழி கசினோ விளம்பரங்கள் குறித்து குழு விசாரணை நடத்தியதுடன், இதுவரை எந்தவொரு இணையவழி கசினோ நிறுவனத்திற்கும் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி குழுவிற்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும் குழு முடிவெடுத்தது.அத்துடன், நிதி, வரி மற்றும் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டதுடன், இவற்றுக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வகைப்பாடு மற்றும் வரிவிதிப்பை நெறிப்படுத்தும் நோக்கில் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி மற்றும் மதுவரியின் கீழ் ஒருங்கிணைந்த வகைப்பாட்டுக் குறியீடுகளுக்கு (HS குறியீடுகள்) புதிய தேசிய உப பிரிவுகளை அறிமுகப்படுத்துவதற்கான கட்டளைகளும் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், தேசிய ஆடை துறைக்கு நியாயமான போட்டிச் சந்தையை உருவாக்கும் நோக்கில் அறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு அறவிடப்பட்ட செஸ் வரியை நீக்கி 2026 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்18% பெறுமதி சேர் வரியை அறிவிடும் கட்டளையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்தின் காரணமாக இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய வரியின் அளவு அதிகரித்திருந்தாலும், சேர் பெறுமதி வரிக்கு (VAT) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் அந்த வரித் தொகையை வரவுப் பற்றாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், இது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அதேநேரம், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனர்த்த நிவாரண பண ரசீதுகளுக்கு முத்திரைத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கும் கட்டளையும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.
2026-06-08
அனுராதபுரம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் (05) கூடியது.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு அமைய செயற்படுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. அத்துடன், இவ்வழக்கிற்கான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய வைத்திய அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட சிறுமி தொடர்பில் தற்பொழுது அனுராதபுரத்திற்கு மேலதிகமாக அத்தனகல்ல மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதால், வழக்கு விசாரணைகளை மேற்பார்வை செய்யுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒன்றியம் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துடன், இந்த வழக்கு மூன்று நீதிமன்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சிறுமி மேலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும், நீதிமன்ற மற்றும் சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையிலும் அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கப்பாட்டை வெளியிட்டது.சம்பந்தப்பட்ட சிறுமியின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒன்றியம் பரிந்துரைத்தது.அதேநேரம், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வதில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், இது விடயத்தில் எதிர்கால நடவடிக்கைகளில் உரிய தலையீடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளை அறிக்கையிடும்போது சிறுவர்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் அவர்களின் கௌரவம் என்பவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் ஊடக மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து வழிகாட்டல்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்ட உபகுழு தலையீடு செய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் ஏற்படுகின்ற சட்ட மற்றும் நடைமுறை ரீதியான தடைகளை தாண்டுவதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உபகுழு செயற்படும்.பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், கௌரவ பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன ஆகியோர் நிகழ்நிலை (சூம்) தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டனர்.
2026-06-03
பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்படுகின்றன.பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த விசேட குழுவில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை, குறிப்பாக தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் மற்றும் சனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றையும், பல வருடங்களாக அச்சட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய விசேட ஏற்பாடுகள் சட்டங்களையும் மீளாய்வு செய்வதும்; இச்சட்டங்களை மீள்திருத்தம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல் போன்ற தேவைகளை மதிப்பீடு செய்வதும்; மேலும், (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சட்டங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புகளையும் திருத்தங்களையும் பரிந்துரை செய்வதும் இவ்விசேட குழுவின் நோக்கமாகும்.பொதுமக்கள் / ஏனைய ஆர்வமுள்ள தரப்பினர் மற்றும் நிறுவனங்கள், மேற்குறிப்பிடப்பட்ட விடய எல்லைக்குட்பட்ட தங்களது முன்மொழிவுகள் / கருத்துக்களை குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் அழைக்கப்படுகின்றனர். அவ்வாறான முன்மொழிவுகள் / கருத்துக்களை 2026 ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது legis_com@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.முகவரி: குழுவின் செயலாளர்,“தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு”,இலங்கை பாராளுமன்றம்,ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே.
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது. | Text.privacy_policy
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks