பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-06-11
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஒன்லைன் கசினோ செயற்படுத்துவதற்கு சட்டரீதியான ஏற்பாடு ஒன்று இல்லாத நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய வருமானத்தை இல்லாமல் செய்யும் வகையில் ஒன்லைன் கசினோ செயற்படுத்தப்படுவது தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது. இது தொடர்பில் விரைவாக கவனம் செலுத்துமாறு கோரி நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தெரிவித்தார்.
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (ஜூன் 06) இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
கசினோ உள்ளிட்ட சூதாட்ட வர்த்தகங்களில் இருந்து அறவிடப்படவேண்டிய நிலுவை வரிகளை அறவிடுதல் மற்றும் இது போன்ற வர்த்தகங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பில் மிகவும் முக்கியமான ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், அதனை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் 3 வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 வது பிரிவின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் கட்டளை கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதனையடுத்து அதற்கான அனுமதி குழுவினால் வழங்கப்பட்டது.
அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதியும் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கருத்திற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிமல் லன்சா, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ (கலாநிதி) நாளக கொடஹேவா, கௌரவ ஹர்ஷண ராஜகருணா மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-30
தித்வா சூறாவளியினால் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் 2026.01.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இக்கூட்டத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது, தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தரவுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என அந்தந்த அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளிடம் குழுவின் தலைவர் வினவினார். அதற்கமைய, ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பாகக் குழுவிற்குச் சுருக்கமாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், அந்தந்த அமைச்சுகளின் கீழ் உள்ள திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அதிகாரிகளும் தமது நிறுவனங்கள் வசமுள்ள தரவுகளைக் குழுவில் சமர்ப்பித்தனர்.தரவுகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அந்தந்தச் சேதங்களுக்காக வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் அந்த இழப்பீடுகளைக் கணக்கிடும் முறை குறித்துக் குழுவின் தலைவர் வினவினார். அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இழப்பீடு வழங்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக அந்தத் தகவல்களைச் சமர்ப்பிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதன்போது, இழப்பீடு வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையைத் தயாரிப்பது முக்கியம் எனச் சுட்டிக்காட்டிய குழு, இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியது. அத்துடன், தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்தந்த அமைச்சுகளினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.இந்தச் குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, ரொஷான் அக்மீமன, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுசந்த குமார நவரத்ன, (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் உபுல் கித்சிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-29
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2026.01.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் உள்நாட்டு வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.இளைஞர் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தயாரிக்க உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்திற்குரிய அளவுகோல்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதேபோன்று, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தகச் சபை மற்றும் உள்நாட்டு வங்கிகள் மூலம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளைத் தொழில்முயற்சியாண்மை துறையில் இணைத்துக் கொள்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்த உப குழுக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்க மாதுகொட, (சட்டத்தரணி) நிலுஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் சுஜீவ திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-01-29
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோரின் பங்குபற்றலுடன் 2026.01.27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் பல்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது துறைசார்ந்த பிரச்சினைகள் குறித்துக் குழுவிற்கு விளக்கமளித்தனர். இதன்போது, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு நீண்டகால தேசியக் கொள்கை இல்லாததால் தமது கைத்தொழில் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சுட்டிக்காட்டிய அவர்கள், வலுவான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். அத்துடன், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தற்போதுள்ள ஒழுங்குமுறைகளை தளர்த்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிகளை மீளாய்வு செய்தல், வருமான வரிக்கு பாதுகாப்பான துறைமுக விதிகளை அறிமுகப்படுத்துதல், இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான சேர்பெருமதி வரி (VAT) சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், முறைசாரா வகையில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமது கைத்தொழிலை மேம்படுத்த முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், இரத்தினக்கல் அகழ்வின் போது ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்காமை மற்றும் தற்போதுள்ள அகழ்வு நிலங்கள் குறைந்து வருவதால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகள் தொடர்பிலும் அந்தத் தொழிற்துறையினர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.குழுவின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், தாராளமயமாக்கல் (வரி மற்றும் பௌதீக), நிர்வாகம் மற்றும் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கொள்கை விடயங்கள் போன்ற பிரதான துறைகள் தொடர்பில் தொழித்துறையினுள் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் காண முடிந்துள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, குறித்த விடயங்களை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து விரிவான கலந்துரையாடல் ஆவணமொன்றைத் தயாரித்து, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் வினைத்திறனான தொடர் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகக் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
2026-01-29
இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிலுள்ள வளங்களைக் கொண்டு ஆரம்பிக்க உடன்பாடுஅடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுகொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை இந்த வருடம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படக் கலையகம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் கலந்துரையாடல் இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் முன்னெடுப்பில் அண்மையில் (ஜன. 22) இடம்பெற்றது. கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன அவர்களும் கலந்துகொண்டார். அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் இலங்கை மன்றக் கல்லூரி என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் சிலர், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், கலை இயக்குநர்கள் சங்கம், ஒப்பனை கலைஞர்கள் சங்கம், சார்க் கலாசார நிலையம், திரைப்படக் கல்வி தொடர்பான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் திரைப்படத் துறைசார்ந்த நிபுணர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முன்வைத்தனர். இந்தப் பாடசாலையானது திரைப்படம் குறித்த அறிவை வழங்குவது மட்டுமன்றி, நடைமுறை ரீதியாக திரைப்படங்களை தயாரிக்கும் கலைஞர்களை உருவாக்கும் பாடநெறிகளைக் கொண்ட நிறுவனமாக அமைய வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டது. சர்வதேச திரைப்படப் பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப இதனைப் பேண வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது. திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இத்தகைய பாடசாலையை நிறுவுவது குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி இதனை ஆரம்பிக்கவும், பின்னர் படிப்படியாக அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள வளங்களைப் பயன்படுத்தி தேசிய திரைப்படப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரித்தல் மற்றும் ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெறுதல் போன்ற அடிப்படைப் பணிகளை முன்னெடுப்பதற்காக இதன்போது குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இதற்கமைய, கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம், இலங்கை மன்றக் கல்லூரி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் திரைப்படத் துறைசார் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்று நிறுவப்பட்டது.பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹதிவுல்வெவ, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் சீதா பண்டார, அரச திரைப்படத் துணைக் குழுவின் தலைவர் (கலாநிதி) செனேஷ் திஸாநாயக்க பண்டார, சார்க் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் (கலாநிதி) கௌஷல்ய குமாரசிங்க உள்ளிட்ட திரைப்படத் துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்டனர். அத்துடன், இந்தப் பாடசாலையின் பாடத்திட்டம் உள்ளிட்ட கல்விச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக திரைப்படத் துறை நிபுணர்களைக் கொண்ட மற்றுமொரு குழுவும் அமைக்கப்பட்டது. அத்துடன், தற்போது செயலற்ற நிலையில் உள்ள கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவை (International Film Festival, Colombo) மீண்டும் இந்த வருடம் ஆரம்பிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கும், நீண்டகாலம் நிலையான முறையில் இவ்விழாவை முன்னெடுப்பதற்கும் தேவையான நிறுவனமொன்றை நிறுவுவதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான தலையீட்டை வழங்கத் தயாராக இருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார்.இதேவேளை, திரைப்படத் தயாரிப்புப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலையக வளாகம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கொழும்புக்கு அருகில் பொருத்தமான ஓரிடத்தில் இதனை நிர்மாணிப்பதற்கான அவசியம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்களான பேராசிரியர் சேன நாநாயக்கார, (சட்டத்தரணி) சுசந்த தொடாவத்த, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, ருவன் மாப்பலகம, சுகத் வசந்த டி சில்வா, (சட்டத்தரணி) ஹிருணி விஜேசிங்க, தினேஷ் ஹேமந்த, உபுல் கித்சிறி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks