01

E   |   සි   |  

2024-05-15

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையைக் கோரியது வழி வகைகள் பற்றிய குழு

  • உணவு வழங்கும் திட்டம் அமுலுக்கு வந்த பின்னர் பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதும் தெரியவந்தது
  • பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது
  • பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவிகளை வழங்க விரும்பும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்குச் சரியான பொறிமுறையொன்றைத் தயாரிக்கவும் குழு முன்மொழிவு

 

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா என்பது பற்றியும், உணவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் 100 பேருக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.

வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவின் தரம் தொடர்பில் அளவுகோல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களம், பிராந்தியக் கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குழுவில் தெரியவந்தது.

கடந்த காலத்தில் 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக அறிக்கையிடப்பட்டதாகவும், இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும், 4 பில்லியன் ரூபாவுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்  விருப்பத்துடன் உதவிகளை வழங்கினாலும், இந்த உதவிகளை நேரடியாக அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இல்லை எனவும் தலைவர் தெரிவித்தார். ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஏதாவது சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயுமாறும்  அவர் அறிவுறுத்தினார். மேலும், சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் புகராளிப்பதற்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில், மிகவும் வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும், 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவின் தலைவருக்குப் பதில் வழங்கினர்.

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் இங்கு தெரியவந்தது. மேலும், மேன்முறையிடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு கேட்டறிந்துகொண்டது.

இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி வழங்கிய முதல், நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவுசெய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையை  குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

விதாதா நிலையங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக கடன் திட்டத்துடன் இதனையும் ஒன்றிணைக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளன என்பது குறித்தும் குழுவின் தலைவர் வினவினார். உத்தேச குடும்ப அமுலாக்கத் திட்டம் குறித்த கால அட்டவணையுடன் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர் வலியுறுத்தினார்.

முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த உதவித்தொகைக்கான செலவு குறித்த விரிவான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவிடம் வழங்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ எஸ்.எம்.எம்.முஷாரப், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ சுதத் மஞ்சுள ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-01-09

தொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தள மையமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது கோபா குழு

தகவல் தொழில்நுட்ப (IT) அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து குழு வலியுறுத்து தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்து குழு கவனம் செலுத்தியதுதொல்பொருள் மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அனைத்து தகவல்களையும் மையமாகக் கொண்ட தரவுத் தளமொன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) கவனம் செலுத்தப்பட்டது.தொல்பொருளியல் திணைக்களத்தின் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் அதன் செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழு 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி கூடியபோது நாட்டில் உள்ள அனைத்து தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்கள், அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவற்றின் வெற்றி தோல்விகள், அகழ்வாராய்ச்சிகள் தொடரப்பட வேண்டுமா, எவ்வாறான இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஒரு தரவுத்தளத்தில் உள்ளீடு செய்து அதனைப் பராமரிக்க வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டமை குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பான தற்போதைய முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லையென்றும், அகழ்வாராய்ச்சிகளுக்கு அனுமதிகளை வழங்குவது தொடர்பான தரவுத்தளம் மாத்திரமே பராமரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மையப்படுத்தப்பட்ட தரவுத் தளமொன்றைத் தயாரித்து பராமரிப்பது முக்கியமானது என்றும், தேவைப்படும் பட்சத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உதவியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன், குறித்த திணைக்களத்திற்கு மேலதிகமான தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் இணைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். பன்னிரண்டு தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கு நிர்வாக சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ள போதும், தற்பொழுது ஒரு அதிகாரியே பணியில் இருப்பதாகவும், அவர் தலைமையகத்திற்கு இணைக்கப்படவில்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலவும் வெற்றிடங்களுக்குத் தேவையான அதிகாரிகளை விரைவில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு அறிவுறுத்தியது.தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் குறித்த அனைத்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளக் கட்டமைப்பொன்றுக்கான முன்மொழிவை மூன்று மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.அத்துடன், தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிக்கப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. குறிப்பாக, தொல்பொருளியல் திணைக்களத்தின் இணையதளத்தைப் புதுப்பிப்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மிகவும் முக்கியமானது என்று குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்த விடயத்தில் கவனம் செலுத்தி இணையத்தளத்தைப் புதுப்பிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் குழு வலியுறுத்தியது.அதேநேரம், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் தளங்களில் 48% வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.உலக மரபுரிமைகளாகப் பெயரிடுவதற்கு யுனெஸ்கோவினால் முன்மொழியப்படவிருக்கும் தளங்கள் மற்றும் அவை தொடர்பான வரைபுகள் அடங்கிய அறிக்கையை வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான சுகத் திலகரத்ன, அரவிந்த செனரத், நளின் ஹேவகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, (மருத்துவர்) ஜனக சேனாரத்ன, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரியாராச்சி, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுட, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, லால் பிரேம்நாத், மஞ்சுள சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் கௌரவ ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நேற்று (ஜன. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.கடந்த குழுக் கூட்டங்களில் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, பாடசாலைகளை நடத்திச் செல்வது போன்ற பிரச்சினைகள் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இந்தப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை கௌரவ ஜனாதிபதி வழங்கினார். மேலும், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காணப்படும் தடைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.அத்துடன், பாதுகாப்புப் படையினரின் நலன்புரி நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு மேலதிகமானவர்களை அனுப்புவது போன்ற விடயங்கள் குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


2026-01-08

கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிக்கு அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் அனுமதி

நாளை (ஜன. 09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் தலைமையில் மற்றும் தொழில் கௌரவ பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.தொழில் அமைச்சரினால் 2025.12.12 ஆம் திகதி ஆக்கப்பட்ட இந்த ஒழுங்குவிதி 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. "ஏதேனும் வதிவிட வசதியுள்ள ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்கும் பெண், பெண்கள் உடை அறை பணியாளர், பெண்கள் ஆடை விற்பனை நிலைய பணியாளர் அல்லது பெண்கள் தூய்மை பணிப்பெண் ஆகிய பதவிகளில், 18 வயது பூர்த்தியடைந்த எந்தப் பெண்ணையும் காலை 6.00 மணிக்கு முன்பும் மலை 6.00 மணிக்குப் பிறகும் பணியில் ஈடுபடுத்தலாம்", எனும் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் இந்த ஒழுங்குவிதி மூலம் திருத்தப்படுகின்றது. அதற்கமைய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக, ‘வதிவிட வசதியுள்ள ஹோட்டல்களில் உணவு மற்றும் பான வரவேற்பாளர்’ (Food and Beverage Stewardess) பணிகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மாலை 6.00 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரோ பணியில் ஈடுபடுத்தத் தேவையான சட்டத் திருத்தங்கள் இந்த ஒழுங்குவிதி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், இந்த ஒழுங்குவிதியின் கீழ் 'ஏதேனும் ஒரு பெண் பணியாளரின் பணி நேரம் மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 6.00 மணிக்குமிடையிலான ஒரு நேரத்தில் முடிவடையும் போது, அந்தப் பணி முடிந்த நேரத்திலிருந்து காலை 6.00 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிடத்தை வழங்குவது அல்லது அவரது வழக்கமான வசிப்பிடத்திற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது உள்ளிட்ட அந்தப் பெண்ணின் சுகாதாரக்கவனிப்பு மற்றும் நலன்புரிக்கு தொழில்தருனர் பொறுப்பேற்க வேண்டும்', என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குழுவில் தெரிவித்தனர்.இலங்கையின் தற்போதைய பெண்கள் சனத்தொகை விகிதம் 51% ஆக இருந்தாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 34% ஆகவே உள்ளது. தற்போது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக, பெண்களின் தொழில் பங்கேற்புக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல முன்மொழிவுகளும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய, இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கௌரவ தொழில் அமைச்சர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


2026-01-08

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 2025.01.08 ஆம் திகதி அங்கீகரிக்கப்படவுள்ள (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜன. 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த அனுமதி வழங்கப்பட்டது.அதற்கமைய, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2452/40 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின் மூலம், ‘வீதியொன்றில் மோட்டார் வாகனமொன்றைச் செலுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் எவரேனும் ஒருவர் போதைப்பொருள் பாவித்துள்ளதாகப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு நியாயமான சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், அந்த நபரை மேலதிகப் பரிசோதனைக்காக அரசாங்க வைத்திய அதிகாரி ஒருவரிடமோ அல்லது வைத்தியசாலையினால் இதற்கென அதிகாரம் வழங்கப்பட்ட ஒரு அதிகாரியிடமோ முன்னிலைப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2455/29 இலக்க அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதியின் மூலம், ‘அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஒவ்வொருவரும் பாதுகாப்பு ஆசனப் பட்டியை அணிந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த ஒழுங்குவிதிகளுக்குக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், நாட்டில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவற்றை வழமைக்குக் கொண்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் இந்தக்கூட்டத்தின் போது குழுவில் விளக்கமளித்தனர். அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 1,481 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட 287 வீதிப் பகுதிகள் சேதமடைந்துள்ளதாக அந்த அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றை மீண்டும் நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 86 பில்லியன் ரூபா என அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். அதேபோன்று, புகையிரதத் திணைக்களத்திற்கு சுமார் 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் 63 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.அத்துடன், இலங்கையின் வீதிக் கட்டமைப்பில் அந்தந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, https://road-lk.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட சேதங்கள் குறித்துத் தெரியப்படுத்தும் வாய்ப்பு பொதுமக்களுக்கு உள்ளதாகக் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்தக் கூட்டத்தில், குழுக்களின் கௌரவ பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் ஏனைய கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks