பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2024-02-29
செய்தி வகைகள் : குழு செய்திகள்
1977ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பிரிவிடல் (திருத்த) சட்டம் காலத்துக்குப் பொருத்தமற்ற சட்டம் என அடையாளம் காணப்பட்டிருப்பதால் இதனைத் திருத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தங்களை நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனத்தில் எடுத்தது.
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தலைமையில் அண்மையில் (பெப். 21) கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்படி, தற்போதுள்ள சட்டத்தில் உள்ள தொடர்புடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் பலனாக காணியில் அக்கறைகொண்டுள்ள எல்லா ஆட்களுக்கும் அத்தகைய பிரிவிடல் வழக்குப் பற்றி அறிய வருவதை இயலச் செய்வதற்கு பதாகையொன்றை வெளிக்காட்டிவைத்தல் மற்றும் ஒலிபெருக்கியொன்றைப் பயன்படுத்தி பகிரங்க அறிவித்தல்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வதன் மூலம் திருத்தப்படுகிறது. நிலஅளவிடுகைக்கு சமுகமாயிருந்த தரப்பினரால் செய்யப்பட்ட உரிமைக்கோரிக்கையின் தன்மையை சத்தியக்கடுதாசியில் குறிப்பிடுவதற்கு நிலஅளவையாளர் தேவைப்படுத்துவது போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு, பிரிவிடல் (திருத்த) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ கே.பி.எஸ்.குமாரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-06-23
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு, 2021-2023 மூன்றாண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை, 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் இத்திணைக்களத்தின் செயலாற்றுகை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது குறித்து ஆராயப்பட்டது.பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் சொத்துக்களைப் பெறும் பல்வேறு வழிகள், ஒவ்வொரு சொத்தும் பெறப்பட்ட காலப்பகுதிகள், அச்சொத்துக்கள் யாரால் மாற்றப்பட்டன, அந்த மாற்றத்திற்குப் பொருந்தக்கூடிய நிபந்தனைகள் போன்றவை அடங்கிய ஒரு அறிக்கையை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறு 2024ஆம் ஆண்டு மே மாதம் குழுவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவின் தலைவர் வினவினார். இதடன் தொடர்புடைய தரவுகள் அடங்கிய அறிக்கை குழுவிற்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திடம் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் சொத்துக்களின் எண்ணிக்கை குறித்த ஒரு அறிக்கையையும் குழுவிற்கு வழங்குமாறு குழு பரிந்துரைத்தது.காலி பத்தேக, சுதுவலிபொத்த பகுதியில் அமைந்துள்ள ஹரி ஹபுகொட பெருந்தோட்டத்திற்குச் சொந்தமான 113 ஏக்கர் காணியை குத்தகைக்கு கேள்விப்பத்திரம் கோரல் குறித்து குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. மதிப்பிடப்பட்ட பெறுமதியை விட அதிக பெறுமதிக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த நிலத்தின் சில பகுதிகள் பல்வேறு தரப்பினரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும் இங்கு தெரியவந்தது.ரிச்மண்ட் காசல் கட்டடத்தின் பராமரிப்பு குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஜூலை மாதத்திற்குள் இந்தக் கட்டடடத்தின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இங்கு காணப்படும் தென்னை விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அது முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.இக்குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களனா சானக மாதுகொட, ஜே.சி.அலவத்துவல, ஒஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிக்கா அதாவுட, ரி.கே.ஜயசுந்தர, சந்தன சூரிஆரச்சி, அஜந்த கம்மத்தகே, லால் பிரேம்நாத், ருவன்திலக ஜயக்கொடி மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-06-23
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில் ஆரம்பப் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஒரு தரநிலையின்படி பொதுவான திட்டம் மற்றும் மாதிரிகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம், மாற்றுப் பாடசாலைகளின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள், மாகாண மட்டத்தில் பாடசாலைகளின் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொழிற்கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன. இவ்விடயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த கௌரவ பிரதமர், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவயைான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தினார்.மேலும், இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கேட்டறியப்பட்டது.கௌரவ கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கௌரவ தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவகே, குழுவின் உறுப்பினர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவேவ உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-06-22
எல் நினோ மற்றும் லா நினோ சூழ்நிலைகளின் பாதிப்புக் காரணமாக இலங்கையின் கடல் வாழ் பல்லுயிர்கள் மற்றும் ஈரூடகவாழ் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் காணப்படும் சவால்கள் குறித்து காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களாக கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம ஆகியோரின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.காலநிலை மாற்றத்தினால் குறிப்பாக எல் நினோ நிலைமை, இலங்கையின் சமுத்திக் கட்டமைப்பு, கரையோரம், பல்லுயிரினம் மற்றும் கரையோர சமூகங்களின் வாழ்வாதார போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதினால் பவளப் பாறைகள் வெளுத்தல் (Coral Bleaching), மீன் இனங்களின் இடப்பெயர்வு மாற்றம், பாசிப் பெருக்கம் (Algal Blooms), ஒட்சிசன் குறைந்த வலயம் (Dead Zones) உருவாதல் மற்றும் நீர்க் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.அத்துடன், வறட்சியின் விளைவாக ஆற்று நீர்மட்டம் குறைவதாலும், ஆற்று அமைப்புகளில் கடல்நீர் கலப்பதாலும் குடிநீர் விநியோகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும், இந்த சுற்றுச்சூழல் மாற்றங்களால் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்களில் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இலங்கையின் கடல் வளத்தைப் பாதுகாப்பதற்கு நாரா நிறுவனம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த நிறுவனங்களுக்கு இடையே மேலும் திறமையான ஒருங்கிணைப்புப் பொறிமுறையை நிறுவ வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.மேலும், எதிர்காலத்தில் ஏற்பட் கூடிய எல் நினோ (El Niño) சூழ்நிலையை வெற்றிகரமாக முகங்கொடுக்க கடல்சார் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துதல், விஞ்ஞான ரீதியான தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவித்தல் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய கடல் முகாமைத்துவத் திட்டத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்த ஒன்றியம் வலியுறுத்தியது.காலநிலை மாற்றம் ஈரூடகவாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள், இனப்பெருக்க முறைகள் மற்றும் அவற்றின் உயிர்வாழ்க்வையும் பாதிக்கின்றன என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவை தவளைகள் உட்பட பல ஈரூடகவாழ் உயிரினங்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும், மேலும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையையும் பாதிக்கக்கூடும் என்றும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

