04

E   |   සි   |  

2023-12-19

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

100 கிலோகிராம் போதைப்பொருட்களை அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி - நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட குழுவில் நீதி அமைச்சு தெரிவிப்பு

  • போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முறைகள் தொடர்பில் அரசாங்க நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் குழுவில் சமர்ப்பிப்பு

 

100 கிலோகிராம் போதைப்பொருட்களை குறித்த தினங்களில் அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாகவும், அதற்கமைய அதற்கான தினம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் நீதி அமைச்சு தெரிவித்தது.

குறித்த பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் அண்மையில் (டிச. 12) கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த டிசம்பர் 15 வரை அரசாங்க நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் விசேட குழுவில் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பிரதிகள் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கமைய, மேற்படி குழுவுக்குப் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் மேலும் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட வேண்டும் எனப் பாராளுமன்றத் தெரிவுக்குழு வலியுறுத்தியது.

போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம், அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போதான கைதுகளில் நிலவும் இடைவெளிகள் மற்றும் சிரமங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கமளித்தது.

போதைப்பொருள் தொடர்பான கைதுகளின் பின்னர் நீதித்துறை செயற்பாட்டில் உள்ள பலவீனங்கள் காரணமாகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூட சட்டத்திலிருந்து தப்பித்து வருகின்றனர் என்பதால் முறையான கொள்கை மற்றும் சட்டரீதியான ஏற்பாடுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி, கௌரவ புத்திக பத்திரன, கௌரவ மஞ்சுளா திசாநாயக, கௌவர முதிதா பிரசாந்தி ஆகியோரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2



தொடர்புடைய செய்திகள்

2026-03-24

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முதல் தடைவையாகக் கூடியது

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் முதல் தடவையாக 2026.03.19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், இந்த விசேட குழுவின் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு, தித்வா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது சம்பந்தப்பட்ட பொறுப்புள்ள நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதற்கு அமைய தேவையான அடிப்படை விழிப்புணர்வைப் பெறுவதற்காக, இந்த விசேட குழுவின் அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.அதேநேரம், இந்த விசேட குழு அதிகார வரம்பிற்கு உட்பட்டுச் செயற்படும் என்பதால் தேவைப்படும் சில சில தொழில்நுட்ப விடயங்கள் பற்றிய புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட துறை தொடர்பில் நிபுணத்துவம் உள்ள அதிகாரிகளை குழுவின் முன்னிலையில் அவ்ப்போது அழைப்பதற்கும் இங்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்த விசேட குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கை குழுவின் முதலாவது கூட்டத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதாவது 2026.06.19ஆம் திகதியாகும்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதால் விரைவில் கூட்டங்களை நடத்தி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர்  கூறினார். குழுவின் செயற்பாட்டு வரம்பு தொடர்பான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தித்வா புயல் போன்ற எதிர்கால நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகளையும் இதில் உள்ளடக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) அநுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோகினீ குமாரி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம, (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம் ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியைப் பெற்று கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.


2026-03-24

இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் – பிரதி சுகாதார அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி

இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என கௌரவ பிரதி சுகாதார அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.  2026 மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய வலிப்பு நோய் மைய அரங்கில் நடைபெற்ற, இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பிராந்தியத்தில் உள்ள ஏனைய மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை இவ்விடயத்தில் சில முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், சுகாதார சேவைகளைப் பெறுவதில் இயலாமையுடைய நபர்கள் இன்னமும் பல பௌதீக, தகவல் தொடர்பு மற்றும் மனப்பான்மை சார்ந்த தடைகளை எதிர்கொள்வதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். சமூகத் தடைகளைக் கண்டறிவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மனப்பான்மை மாற்றத்தை உருவாக்குவதற்கும் தேவையான கொள்கை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதாரத் தகவல்களைப் பல வடிவங்களில் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இயலாமையுடைய நபர்கள் மீது பாரம்பரியாகக் காணப்படும் மருத்துவக் கண்ணோட்டத்தைக் கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு சேவையை வழங்குவதற்காக, சுகாதாரப் பணியாளர்களை முறையாக உணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனைத்து விடயங்களிலும் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஆற்றிவரும் பங்களிப்புப் பாராட்டத்தக்கது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்தப்பட்டுவரும் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு சுகாதார அமைச்சில் நடைபெற்ற போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், சுகாதார அமைச்சின் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுகத் வசந்த.த சில்வா, 'இயலாமையற்ற சமூக வாழ்க்கையை' அடைவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதுள்ள இலவச சுகாதார சேவையைப் பாராட்டியதுடன், இந்த நாட்டில் வசிக்கும் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெறுவதில் உடல் ரீதியான மற்றும் மனப்பான்மை ரீதியான தடைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான உரிமை என்பது வாழ்வதற்கான ஒரு அடிப்படை உரிமை என்று அவர் வலியுறுத்தினார். மேலும், எதிர்கால சுகாதார வல்லுநர்கள் தங்கள் பயிற்சிக் காலத்திலிருந்தே இந்த உரிமை குறித்து விழிப்புணர்வு பெறுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவ மற்றும் தாதியர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இயலாமையுடைய நபர்கள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டமும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  பிரதி இணைத் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம்,  இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் அசோக வீரவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் திணைக்களத்தின் பேராசிரியர் சமாரி வீரரத்ன, சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) விந்தியா குமாரபேலி, சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான பிரிவின் பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) நிஷானி உபேசேகர மற்றும் இயலாமையுடைய சமூகத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.வைத்தியசாலையின் பிரிவுகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமை, சில வைத்தியசாலை கவுண்டர்கள் உயரமாகக் காணப்படுகின்றமை, அறுவை சிகிச்சை படுக்கைகள் காரணமாக இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மலசலகூடங்களில் இயலாமையுடைய நபர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றமை இங்கு எடுத்துக் கூறப்பட்டது. வரிசைகளில் காத்திருப்பதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் அறிவுசார்ந்த இயலாமையுடைய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடையாள அட்டைகளின் தேவையும் வலியுறுத்தப்பட்டது.உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வைத்தியசாலைகளில் சாய்வுப் பாதைகள், இயலாமையுடைய நபர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் சிறப்பு மருந்து மையங்கள் போன்ற அணுகல் வசதிகளை அமைப்பதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அடிப்படை மருத்துவமனைகளில், அடிப்படை சைகை மொழியில் பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட சோதனை 'ஆதரவு மையங்கள்' அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியப்படுத்தப்பட்டது.இந்நிகழ்வில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) திட்ட அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-03-24

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இரு நாட்கள் கூடியது

இலங்கையின் தேசிய சரணாலயங்களின் நிர்வாகங்கள் முகங்கொடுக்கும் தடைகள், சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து குழுவில் அவதானம்மீனவ சமூகங்களினால் பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுகடந்த சில ஆண்டுகளில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடைமுறை மற்றும் விலை நிர்ணயம் குறித்தும் குழு ஆராய்ந்ததுசுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி அவர்களின் தலைமையில் 2026.03.04 மற்றும் 2026.03.05 ஆகிய இரு தினங்கள் கூடி, உரிய கவனம் செலுத்தப்பட வேண்டிய பல்வேறு துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியது.இதற்கு அமைய இலங்கையின் சரணாலய நிர்வாகங்களால் எதிர்கொள்ளப்படும் தடைகள், சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும், மீன்பிடி சமூகத்தினரின் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் மற்றும் பிற உபகரணங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், கடந்த சில ஆண்டுகளாக நெல்லைக் கொள்வனவு செய்வது மற்றும் அவற்றுக்கான விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் நடைமுறைகள் குறித்து குழுவில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.மீன்பிடி சமூகத்தினர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள் மற்றும் பிற உபகரணங்கள் மீதும் குழு விரிவான கவனம் செலுத்தியது. மேலும், பதப்படுத்தப்பட்ட மீன் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக கடந்த ஆண்டில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் குறித்து குழுவிடம் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.கடந்த சில ஆண்டுகளில் அரசாங்கங்கள் நெல் கொள்முதல் செயல்முறையை மேற்கொண்ட விதம் மற்றும் அதற்கான விலையை நிர்ணயித்த விதம் தொடர்பான பிரச்சினைகளிலும் இக்குழு கவனம் செலுத்தியது. நாட்டில் உள்ள மொத்த அறுவடையின் அளவு மற்றும் நெல் விதைப்புக்கள் மேற்கொள்ளப்படாத நிலங்களுக்கான காரணங்களை உள்ளடக்கி 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.


2026-03-24

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு முதல் தடவை கூடியது

மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் 2026.03.17ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியது.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தபோது, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் மாகாண சபைகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினர். இதற்கமைய கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர்கள்  தெரிவித்தனர். எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என்றும், பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக்கும் ஒரு தேர்தல் முறையை உருவாக்குவது தொடர்பில் பரந்த, ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.அதன்படி, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் நினைவுகூர்ந்தார். அத்துடன், இது தொடர்பான சட்ட ரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக அடுத்த கூட்டத்தில் சட்டமாஅதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.இந்த விசேட குழுவின் அறிக்கையை முதல் கூட்டத்திலிருந்து 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் குழுவின் தலைவர் நினைவூட்டினார்.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர்களான அருண் ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சுனில் வட்டகல, முனீர் முலாபர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், சந்தன சூரியஆரய்ச்சி, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, லக்ஷ்மன் நிபுண ஆராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks