பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-11-20
இலங்கை சுங்கத்தின் பல நிர்வாகப் பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் கோபா குழுவில் புலப்பட்டன.
இலங்கை சுங்கத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அண்மையில் (நவ. 17) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன தலைமையில் கூடிய போதே இந்த விடயங்கள் புலப்பட்டன.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் நீர் அபிவிருத்தித் திட்டத்திற்காக தனியார் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட களஞ்சியத்தை விடுவிக்கும் போது போலியான உள்ளூர் தகவல்களை முன்வைத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதி அனுகூலங்கள் தொடர்பில் கோபா குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தினால் 5,139,621 அமெரிக்க டொலராக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை விடுவிப்பு செய்யும் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் மூலம் 6,350,364 அமெரிக்க டொலர் என பெறுமதியை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு 1,210,743 டொலர் வரை மேலதிகமாக கிடைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, இது தொடர்பில் ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு கோபா குழு பரிந்துரை செய்தது.
இலங்கை சுங்கம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, தற்போது தரவுகளை பேணுவதற்கு "ASYCUDA" என்ற அமைப்புப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அது RAMIS அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், சுங்கக் கட்டளைச் சட்டத் திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பான திருத்தங்கள் 2024 ஜனவரியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வருகை தந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வரும்போது சரியான தகவல்களை வெளியிடாததால், குறைந்த கட்டணமாக அறவிடப்பட்ட சுமார் 187 மில்லியன் ரூபாய் VAT வரியை மீண்டும் அறவிடுவதற்கு மேற்கொண்ட சுங்க விசாரணையில் VAT வரியை மேலதிக வரியாக அறவிடாமல் 205 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து, அவ்வாறு பெறப்பட்ட தொகையில் 70% ஐ அதிகாரிகளின் வெகுமதி மற்றும் நலன்புரிக்காக ஒதுக்கப்பட்டமை தொடர்பில் அதிகாரிகளிடம் குழு கேள்வி எழுப்பியது. அதற்கமைய, மீண்டும் இவ்வாறான விடயம் இடம்பெறாத வகையில் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
சுங்க அதிகாரிகள் கடமைக்கு அறிக்கையிடுவதற்கு கைரேகைகளை பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், மிகவும் இரகசியமான செயற்பாடுகளிலும் நடைமுறைச் சூழ்நிலைகளில் ஒரு சில செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கைரேகைகளை பதிவு செய்வது கடினமானது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதுபோன்ற முக்கியமான செயல்பாடுகளில் எழுத்துமூலமான பதிவைப் பயன்படுத்துமாறும், ஏனைய பொதுவான கடமைகளில் கைரேகைகளைப் பயன்படுத்துமாறும் கோபா குழு பரிந்துரைத்தது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன்களைப் பரிசீலனை செய்வதற்காகக் கொள்வனவு செய்யப்பட ஸ்கேன் இயந்திரம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை அடைய முடியாமல் போனமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பான முழுமையான அறிக்கையை கோபா குழுவுக்கு வழங்குமாறு குழு பரிந்துரை வழங்கியது.
சுங்கம் வசம் உள்ள விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ சுரேன் ராகவன், கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ ஜே. சி. அலவத்துவல, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ சஹன் பிரதீப் விதான மற்றும் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-17
இலங்கையின் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயன்முறையை முறைப்படுத்துதல் தொடர்பான ஒழுங்குவிதிக்கு வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் அண்மையில் (செப். 11) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 17 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டவையும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு, 2026 யூலை 16 ஆம் திகதிய 2497/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டிருந்தன.குறித்த ஒழுங்குவிதியின் பிரகாரம், அடையாளம் காணப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் கனியவள எண்ணெய் வளங்களை ஆராய்வதற்கு அல்லது அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கும் எந்தவொரு நபரும், முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்போது, தொடர்புடைய கேள்விப்பத்திரத்தில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.இந்தக் கூட்டத்தில் கௌரவ வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-09-17
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுவின் கூட்டம் அவர் தலைமையில் நடைபெற்றபோதே இதனை வலியுறுத்தினார். உயர்கல்வித்துறையில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் பகிடிவதைகள் குறித்த விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீக கடமை இருப்பதாகவும், பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் வினைத்திறன் மிக்கதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.அதேநேரம், பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சு அனுமதி வழங்கிய நியமனங்கள் கூட நிரப்பப்படாமல் உள்ளமை தொடர்பில் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார். அனுமதியளிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கௌரவ கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-09-15
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவத எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதிய 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதனால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளைத் தணிப்பதற்கும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீ்ழ 2011.08.03ஆம் திகதிய 1717/14ஆம் இலக்க ஒழுங்குவிதியைத் திருத்தும் நோக்கில், 2025.09.25ஆம் திகதிய 2455/29 ஆம் இலக்க ஒழுங்குவிதியைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.அதற்கமைய, வாகன உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களில் பயணிக்கும் நபர்களுக்காக ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத கால சலுகைக் காலம் வழங்கப்பட்டது. இந்தச் சலுகைக் காலம் 2025.12.25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.எனினும், ஆசனப் பட்டிகளைப் பொருத்திக்கொள்வதற்காக இந்தச் சலுகைக் காலத்தை மேலும் நீடிக்குமாறு கிடைக்கப்பெற்ற பல்வேறு பொதுமக்கள் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, குறித்த சலுகைக் காலத்தை மீண்டும் 2026.03.20 முதல் 2026.06.19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அத்துடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள், பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகள், அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வாடகை அடிப்படையில் இயக்கப்படும் விசேட சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமை தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பரிசோதித்து, அவை வீதிகளில் இயக்குவதற்கு தகுதியானவை என்பதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.இதற்காக முன்வைக்கப்பட்ட 2026.05.19ஆம் திகதிய 2489/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கையில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வீதி பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகைமையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, சாரதிகளால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு மேலதிகமாக, வாகனங்களில் காணப்படும் இயந்திரக் கோளாறுகள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகள் காரணமாகவும் பாரதூரமான வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் கௌரவ பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2026-09-14
மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம் கௌரவ பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் (செப். 09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இதில், 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் பொதுக் கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.பொதுக் கல்வி மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டு நூல்கள், ஆசிரியர் வழிகாட்டி நூல்கள் மற்றும் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத் தொடர் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.முன்பள்ளிக் கல்வியை முறையாக ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கல்விக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டி நூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரியவந்தது.இந்தக் கூட்டத்தில் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனெவிரத்ன, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

